நியூயார்க்கு நகரம்
அமெரிக்க நியூயார்க் மாநிலத்திலுள்ள மாநகரம் / From Wikipedia, the free encyclopedia
நியூயார்க்கு நகரம் (ஆங்கிலம்: New York City; இலங்கை வழக்கு: நியூ யோர்க்) ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் சிறப்பு இடத்தை வகிக்கிறது. இதே பெயரிலுள்ள நியூயார்க் மாநிலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக நியூயார்க்கு நகரம் என்று நகரம் என்ற சுட்டுச்சொல்லுடன் அடிக்கடி குறிக்கப்படுகிறது.
நியூயார்க் நகரம்
City of New York | |
---|---|
அடைபெயர்(கள்): The Big Apple, The City That Never Sleeps, Gotham, The Capital of The World (Novum Caput Mundi), The Empire City, The City So Nice They Named It Twice. | |
நியூ யார்க் மாநிலத்தில் இடம் | |
ஆள்கூறுகள்: 40°42′46″N 74°00′22″W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ யார்க் |
மாவட்டம் | பிராங்க்சு, புருக்ளின், ஸ்டேட்டன் தீவு, மேன்காட்டன், குயின்சு |
குடியேறல் | 1624 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | பில் டெ பிளேசியோ (மக்) |
பரப்பளவு | |
• நகரம் | 468.9 sq mi (1,214.4 km2) |
• நிலம் | 303.3 sq mi (785.6 km2) |
• நீர் | 165.6 sq mi (428.8 km2) |
• நகர்ப்புறம் | 3,352.6 sq mi (8,683.2 km2) |
• மாநகரம் | 6,720 sq mi (17,405 km2) |
ஏற்றம் | 33 ft (10 m) |
மக்கள்தொகை (2007)[1] | |
• நகரம் | 82,50,567 (உலகில்: 13th ஐ.அ.நா.: 1st) |
• அடர்த்தி | 27,203/sq mi (10,502/km2) |
• பெருநகர் | 1,88,18,536 |
• Demonym | நியூ யார்க்கர் |
நேர வலயம் | ஒசநே-5 (கி.நே.வ) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கி.ப.சே.நே) |
இடக் குறியீடு(கள்) | 212, 718, 917, 347, 646தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | www.nyc.gov |
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ள இந்நகரம் பிரான்க்சு, புருக்ளின், மேன்காட்டன், குயின்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய (மாவட்டங்களுக்கு இணையான) ஐந்து பரோக்களால் ஆனது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் கூடுதலாகும்.[2] இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கிமீ).[3][4] நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும்.[5] 18.8 மில்லியனாக மதிப்பிடப்படும் பெருநகர நியூயார்க்குப் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே மிகவும் அதிகமானதாகும்.[6] பெருநகர நியூயார்க்கின் நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கிமீ).
நியூயார்க்கு டச்சுகாரர்களால் 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக்குடியேற்றம் மாறும் வரை நியு ஆம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்பட்டு வந்தது.[7] 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது.[8] 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது.[9]
இந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள வால் தெரு இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.
பல்வேறு பண்பாட்டு இயக்கங்களின் தோற்றவாயிலாக இந்நகரம் இருந்துள்ளது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த ஷெர்ம் மறுமலர்ச்சி இயக்கம்; ஹிப் ஹாப்,[10] பங்க்[11] சல்சா, டிஸ்கோ போன்றவை இங்கு தோன்றியவை.
2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி ஏறக்குறைய 170 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன மற்றும் 36% மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் பிறந்தவர்கள்.[12][13] தூங்கா நகரம், கோத்தம், பெரிய ஆப்பிள், உலக தலைநகரம் போன்ற பல பட்டப்பெயர்கள் இதற்கு உண்டு.[14][15]