சங்க காலப் புலவர் From Wikipedia, the free encyclopedia
இந்தப் புலவரின் பெயர் முல்லைப்பாட்டு நூலில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பூதனார் காவிரிப்பூம் பட்டினம் என்னும் ஊரில் வாழ்ந்த பொன் வணிகன் ஒருவரின் மகன் என்பது இப்புலவரின் பெயருக்கான விளக்கம். இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு என்னும் நூலைப் பாடியவர் இவர். நல்பூதனார் என்பது நப்பூதனார் என மருவியுள்ளது.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைத்திணையின் உரிப்பொருள் என்பார்கள். இந்தப் பாடலில் அரசி அரசன் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாள். அரசன் போர்ப்பாசறையில் இருக்கிறான்.
அரண்மனையில் இருக்கும் அரசிக்கு அரசன் மீளப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக உடனிருப்போர் கூறுகின்றனர். என்றாலும் அவளுக்கு உறக்கம் கொள்ளவில்லை. - இது பாடலின் முதல் பகுதி.
பாசறையில் அரசனுக்கும் உறக்கம் கொள்ளவில்லை. அவன் போர்க்களத்தில் காயம் பட்ட தன் படைகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கிறான். - இஃது இரண்டாம் பகுதி.
கார்மழை பொழிந்து முல்லைநிலம் பூத்துக் குலுங்குகிறது. விசய வெல்கொடி உயர்த்திக்கொண்டு அரசன் படை அந்த முல்லைநிலத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறது. - இது மூன்றாம் பகுதி.
பெருமுது பெண்டிர் விரிச்சி, நலோர் வாய்ப்புள் ஆகிய நன்னிமித்தங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
அரசன் பாசறையில் யவனர், மிலேச்சர் ஆகியோர் காவல் புரிந்த செய்திகள் கூறப்படுகின்றன.
காயா, கொன்றை, கோடல், தோன்றி ஆகிய பூக்கள் கார்காலத்தில் மழை பொழிந்து பூத்துக் கிடக்கும் வழியில் அரசன் வெற்றி முழக்கத்துடன் மீளும் செய்தி கூறப்படுகிறது.
இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை இந்தப் புலவர் நப்பூதனாரால் பாடப்பட்டவை அல்ல. பத்துப்பாட்டைத் தொகுத்தவர் பாடிச் சேர்த்தவை.
முதல் வெண்பா, இந்தப் பாட்டுடைத் தலைவனைத் திருமாலாகப் பாவித்து, அன்று கன்றை எறிந்து விளாம்பழத்தை உதிர்த்தாய். குன்றைக் குடையாகப் பிடித்தாய். இனி ஆய்ச்சியரைக் காண்பது எப்போது? உடனே செல், என்கிறது.
இரண்டாவது வெண்பா, அவர் தேர் வாரா முன் கார்காலம் வந்துவிட்டதே என்று தலைவி கலங்குவதாக அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.