தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. முன்னதாகக் கொடிகளை அசைத்தோ தீப்பந்தங்கள் மூலமாகவோ அனுப்பப்படுவது ஒருவகை தந்தியே ஆகும்; ஆனால் புறாக்கள் மூலமாகத் தூது விடுதல், அவை மடல்களைத் தாங்கிச் செல்வதால், தந்திமுறை இல்லை.

Thumb
1900இல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சீமென்சு & ஆல்சுகே நிறுவனம் தயாரித்த அச்சிடும் தந்திக் கருவி
Thumb
குக் மற்றும் வீட்டுசுடோன் நிறுவனத்தின் மின்சாரத் தந்தி

இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்தக் குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். புகை குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள்மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. 19ஆம் நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை மின்சாரத் தந்திமூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் வானொலி கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. இணையம் வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட மின்னஞ்சல்கள் , குறுஞ் செய்திகள், உடனடி செய்திகள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்துள்ளது.

மின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவிமூலம் ஓர் முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவிமூலம் பெறப்படுகிறது.

வரலாறு

தந்தி முறைகள் ஐரோப்பாவில் 1792இலிருந்தே கொடிகள் மூலமாகவும் தீப்பந்தங்கள் மூலமாகவும் பயன்பாட்டில் இருந்தன. இவை பார்வைக்கோட்டில் இருக்கும் பெறுநருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த சாமுவெல் மோர்சு கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவை நிறுவனம், எலெக்ட்ரிக் டெலிகிராஃப் நிறுவனம், 1846இல் நிறுவப்பட்டது.[1] 1850இல் இந்தியாவில் சோதனைமுறையில் மின்சாரத் தந்தி கொல்கத்தாவிற்கும் டயமண்டு துறைமுகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.[2]

மின்சாரத் தந்தி

தந்திக் கருவியின் அமைப்பு

Thumb
மோர்சு சாவி

மோர்சு தந்திக் கருவியில், செய்தி அனுப்பும் 'மோர்சு சாவி'க் கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு நெம்புகோல் அமைப்பு இருக்கும். இதன் மேற்புறமுள்ள எபனைட் என்னும் குமிழை விரலால் அழுத்திக் கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின்கலத்தில் உள்ள நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்கலத்தின் எதிர் முனையானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள 'மோர்சு ஒலிப்பான்' கருவியில் இருக்கும் மின்காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச்சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இரு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணம் இருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும்.

செயல்படும் முறை

Thumb
சாமுவேல் மோர்சுவின் தந்திக் கருவி

தந்திக்கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்த சக்தி பெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது. அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனைக் கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன் மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின் மேல் மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும். இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்சு வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துகளாக மாற்றுவதன் மூலம் செய்தியைப் பெறலாம்.

கம்பியில்லாத் தந்தி

நிக்கோலா தெஸ்லாவும் பிற அறிவியல் அறிஞர்களும் கம்பியில்லாத் தந்தி, வானொலித் தந்தி, அல்லது வானொலியின் பயன்பாட்டை 1890களின் துவக்கத்தில் வெளிப்படுத்தினர். மே 5, 1895இல் பொதுமக்களுக்கு அலெக்சாண்டர் பப்போவ் தனது கம்பியில்லா பெறும் கருவியைப் பறைசாற்றினார். இது ஒரு மின்னல் உணரியாகவும் செயல்பட்டது.[3] குறிப்பலைகளைப் பெறும் வகையில் இது 30 அடி கம்பின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்தது. 1895இல் ஆல்பர்ட் துர்பெயின் பிரான்சில் முதன்முதலாக மோர்சு குறிமுறையை பயன்படுத்தி வானொலி அலைகள் மூலமாகக் குறிப்பலைகளை அனுப்பி 25 மீ தொலைவில் பெற்றுக் காட்டினார்.[4]

Thumb
மே, 1897இல் அஞ்சல்துறை பொறியாளர்கள் மார்க்கோனியின் கருவியை சோதித்தல்.

மார்க்கோனி இத்தாலியில் தனது முதல் வானொலி குறிப்பலைகளை 6 கிலோமீட்டர்களுக்கு அனுப்பினார். மே 13, 1897இல் மார்க்கோனி, கார்டிஃப் அஞ்சல்முறை பொறியாளர் ஜார்ஜ் கெம்ப்பின் உதவியுடன், முதன்முதலில் நீரின் மீது கம்பியில்லா குறிப்பலைகளை வேல்சின் இலாவர்நாக்கிலிருந்து பிளாட் ஹோமிற்கு அனுப்பினார்.[5] இத்தாலிய அரசின் ஆதரவு கிடைக்காததால், 22-அகவை-நிரம்பிய மார்க்கோனி பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். அஞ்சல்துறை முதன்மை பொறியாளர் வில்லியம் பிரீசின் ஆதரவுடன் 34 அடி உயரமுள்ள இரு கம்பங்களை நட்டு இந்தச் சோதனையை நடத்தினார்.

1901இல் மார்க்கோனி ஆங்கில எழுத்து "S" என்பதை அத்திலாந்திக்குப் பெருங்கடலைக் கடந்து கார்ன்வாலிலிருந்து நியூபவுண்டுலாந்தில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தார். வானொலித் தந்தி கப்பல்களுக்கு இடையேயும் கப்பல்களிலிருந்து கடலோர நிலையங்களுக்கு நெருக்கடிக்கால செய்தி பரிமாற்றங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

தந்தி முறைகள்

இன்றைய அறிவியல் துறையின் பெருவளர்ச்சியின் விளைவாகப் பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை:

  • வீடங்டன் முறை
  • பாடட் முறை
  • கிரீடு முறை

என்பவையாகும். டெலி பிரிண்டர் எனப்படும் 'தொலை அச்சடிப்பு முறை' செய்தித் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படங்களை உள்ளது உள்ளவாறே நெடுந்தொலைவு 'ஒளிநகல்'(Fax) முறையில் அனுப்பவும் முடிகிறது.

இந்தியாவில் தந்தி சேவை

  • இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
  • 1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
  • தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால் இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.[6]

தந்தி சேவை நிறைவு

இந்தியாவில் தந்தி சேவை சூலை 14 - 2013 இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது.[7][8][9][10]

சமுதாயத் தாக்கம்

மின்சாரத் தந்திக்கு முன்னதாக அனைத்து செய்தி பரமாற்றங்களும் ஒரு மனிதர் அல்லது மிருகத்தின் பயண விரைவிலேயே நடந்தன. செய்தித் தொடர்பை இடம், நேரத் தடைகளைக் கடந்து தந்தி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.[11] 1870இல் ஐக்கிய அமெரிக்காவின் தந்தி பிணையம் 9,158,000 செய்திகள் கையாண்டது; இது 1900இல் 63,168,000 ஆக உயர்ந்தது.[12] தந்திச் சேவையால் "தொடர்வண்டி நிறுவனங்கள், பங்கு/நிதிச் சந்தைகள்,பண்டச் சந்தைகள், மேம்பட்டன; நிறுவனங்களுக்கிடையேயான மற்றும் உள்ளே தகவல் பரிமாற்றச் செலவு குறைந்தது."[12] இந்தியாவில் அடித்தள மக்களும் செலவிடக்கூடிய சேவையாக விளங்கியது. வேலை நியமனங்கள், உடல்நிலை/மரணச் செய்திகள், வங்கி நிதிநிலைகள் ஆகியவற்றிற்கு தந்திச்சேவை முதன்மையாக இருந்தது.

உசாத்துணை

  • மணவை முஸ்தபா, 'இளையர் அறிவியல் களஞ்சியம்' மணவை பதிப்பகம் வெளியீடு. 1995

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.