Remove ads
இராணுவத் தலைவர், செங்கிஸ்கானின் மூத்த மகன் From Wikipedia, the free encyclopedia
சூச்சி (Jochi, அண். 1181 – பிப்ரவரி 1227) செங்கிஸ் கானின் மூத்த மகன் ஆவார்.[1] எனினும் இவரது உண்மையான தந்தை யார் என்ற கேள்வி இவர் வாழ்நாள் முழுவதும் துரத்தியது. ஒரு திறமையான இராணுவ தலைவர், இவர் அவரது சகோதரர்கள் மற்றும் சித்தப்பாக்களுடன் இணைந்து மத்திய ஆசியாவைக் கைப்பற்ற தன்னுடைய தந்தையின் படையில் கலந்து போரிட்டார்.
சூச்சி Jochi | |
---|---|
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் | |
மங்கோலியாவில் உள்ள சூச்சியின் சிலை | |
முன்னிருந்தவர் | செங்கிஸ் கான் |
பின்வந்தவர் | ஓர்டா கான் (c. 1204-1280) படு கான் (c. 1205-1255) பெர்கே, தங்க நாடோடி கூட்டத்தின் கான் (1257-1267) |
துணைவர் | சர்கன் கதுன் பெகுதெமிசு கதுன் உகின் குசின் கதுன் சுல்தான் கதுன் |
மரபு | போர்சிசின் |
அரச குலம் | மங்கோலியப் பேரரசு |
தந்தை | செங்கிஸ் கான் |
தாய் | போர்டே |
பிறப்பு | 1181 மங்கோலியா |
இறப்பு | 1227 (அகவை 45–46) யூரேசியா |
சூச்சியின் உண்மையான தந்தை யார் என்ற கேள்வி பொதுவாக எழுப்பப்படுகிறது. செங்கிஸ்கானை (அந்நேரத்தில் தெமுசின்) மணந்த சிறிது காலத்தில் மெர்கிடு கூட்டமைப்பின் ஆட்கள் போர்ட்டேவை கடத்துகின்றனர். எகே சிலேடுவின் சகோதரனான சில்கர் போக்கிடம் போரில் கிடைத்த பரிசாக போர்ட்டே கொடுக்கப்படுகிறார். போர்ட்டே சிறிது காலம் சில்கர் போக்கின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார். பிறகு தெமுசினால் மீட்கப்படுகிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் சூச்சியை பெற்றெடுக்கிறார். செங்கிஸ் கான் எப்போதுமே சூச்சியை தனது முதல் மகனாகத்தான் பாவித்தார். ஆனால் தெமுசினா அல்லது சில்கர் போக்கா சூச்சியின் உண்மையான தந்தை என்ற குழப்பம் எப்போதுமே இருந்து வந்துள்ளது. இவரது தந்தை யார் என்ற குழப்பம் சில விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இல்லை. சூச்சியின் வழித்தோன்றல்கள் செங்கிஸ்கான் குடும்பத்தில் மிக பழைய கிளையாக இருந்தபோதிலும் அவர்கள் எப்போதுமே மங்கோலியப் பேரரசின் கானாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருதப்படவில்லை. செங்கிஸ்கான் மற்றும் சூச்சி இடையே சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
1207 இல் சூச்சி சைபீரியாவில் இருந்த காட்டுப் பகுதி மக்கள் பலரை வென்றார். இதன் காரணமாக முதன்முதலாக மங்கோலியப் பேரரசின் வடக்கு எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. தனது தந்தைக்காக சூச்சி இரண்டு படையெடுப்புகளை கிர்கிசுக்களுக்கு எதிராக 1210 மற்றும் 1218 ஆகிய இரண்டு வருடங்களில் நடத்தினார்.[2] 1219-1221 வருட நடு ஆசிய குவாரசாமியப் போரில் சூச்சி முக்கிய பங்காற்றினார் – இவரது படைகள் சிக்னக், ஜன்ட் மற்றும் யனிகந்த் ஆகிய பட்டணங்களை ஏப்ரல் 1220 இல் கைப்பற்றின. பின்னர் குவாரசமியப் பேரரசின் தலைநகரான ஊர்கெஞ்ச் (குர்கஞ்ச், தற்கால துருக்மெனிஸ்தான்) நகரத்துக்கு எதிரான போரை நடத்தும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. சூச்சி அப்பட்டணத்துடன், அமைதியாக சரணடைவதற்காக, அதை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் காரணமாக முற்றுகையானது முடிவின்றி காலம் கடந்து நடந்து கொண்டிருந்தது. சூச்சியின் சகோதரர் சகதை இந்த நடவடிக்கையை ராணுவ ரீதியாக பயனற்றது என எண்ணினார்: அந்த நகரத்தை அழிக்க விரும்பினார் ஆனால் செங்கிஸ்கான் அந்த நகரத்தை வெற்றி கொண்ட பிறகு சூச்சியிடம் ஒப்படைப்பதாக வாக்களித்திருந்தார். ராணுவ நடவடிக்கையில் இருந்த கருத்துவேறுபாடு சூச்சி மற்றும் சகதை இடையே ஒரு மோதலை உருவாக்கியது. செங்கிஸ்கான் அத்தாக்குதலில் தலையிட்டு ஒக்தாயியை அத்தாக்குதலுக்கு தலைவராக்கினார். ஒக்தாயி ராணுவ நடவடிக்கைகளை கடுமையாக தொடர்ந்தார் - அந்நகரை கைப்பற்றி, சூறையாடி, முழுவதுமாக அழித்து நகர மக்களையும் கொன்றார் (1221).
1221 இன் ஆரம்பத்தில் சூச்சி மற்றும் சகதை இடையேயான போர் உத்திகளின் வேறுபாடுகள் எதிர்காலத்தில் யார் மங்கோலியப் பேரரசின் கான் என்பதை பற்றிய அவர்களது தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை அதிகமாக்கியது. இப்பிரச்சனையை தீர்க்க செங்கிஸ்கான் அரசியல் மற்றும் ராணுவ அவையான "குறுல்த்தாயை" நடத்த அழைப்பு விடுக்கிறார் - குடும்ப விவகாரங்கள் மற்றும் அரசு விவகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அதிகாரபூர்வ சந்திப்பு குறுல்த்தாய் ஆகும். தன்னுடைய பழங்குடி இனத்தின் கான் ஆவதற்கு தெமுசின் ஒரு தேர்வு அல்லது நியமிப்பை குறுல்த்தாய் நடக்கும்போதுதான் பெற்றார். தன்னுடைய ஆரம்பகால படையெடுப்புகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற அவர் அடிக்கடி இந்த குறுல்த்தாயை நடத்தினார் - செங்கிஸ்கானின் நடவடிக்கைகள் சட்டரீதியான அங்கீகாரம் பெற இந்த சந்திப்புகள் முக்கியமானவையாக இருந்தன. இவை பழங்குடியின பாரம்பரியத்திற்கும் முக்கியமானவையாக இருந்தன. செங்கிஸ்கானின் முதலில் பிறந்த மகனாக இனம் மற்றும் பேரரசை செங்கிஸ்கான் இறந்த பிறகு ஆள்வதற்கு சூச்சிக்கு ஆதரவு[யாரால்?] இருந்தது. 1222 இல் கூட்டப்பட்ட குடும்ப சம்பந்தப்பட்ட குறுல்த்தாயில் சகதை சூச்சியின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார். அந்த சந்திப்பில் சூச்சிதான் தனது அதிகாரபூர்வ முதலில் பிறந்த மகன் என செங்கிஸ்கான் விளக்கினார். ஆனால் தனது இரு மகன்களுக்கு இடையேயான சச்சரவு தனது பேரரசை இரண்டாகப் பிரிக்கும் என வருந்தினார். 1223 ம் வருட ஆரம்பத்தில் செங்கிஸ் கான் தனது மூன்றாவது மகன் ஒக்தாயியை மங்கோலியப் பேரரசின் கானாக தேர்ந்தெடுத்தார். பேரரசை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்க சூச்சி மற்றும் சகதை ஒத்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இடையேயான வேறுபாடு என்றுமே மறையவில்லை. இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக மங்கோலியப் பேரரசின் ஐரோப்பிய பகுதியை அதன் ஆசியப் பகுதியிலிருந்து நிரந்தரமாகப் பிரித்தது.
குவாரசமியப் படையெடுப்பை முடித்த பிறகு 1223 ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் செங்கிஸ்கான் மங்கோலியாவிற்கு புறப்பட்டார். சகதை, ஒக்தாயி மற்றும் டொலுய் அவருடன் சென்றனர். ஆனால் சூச்சி அரல் மற்றும் காசுப்பியன் கடல்களுக்கு வடக்கே இருந்த தனது பகுதிகளுக்குச் சென்று விட்டார். அவர் இறக்கும்வரை அங்கேயே இருந்தார். தன் வாழ்நாளில் தன் தந்தையை அவர் மீண்டும் சந்திக்கவே இல்லை.[சான்று தேவை]
வரலாற்றில் தெளிவாக இல்லாத பொழுதும் சூச்சி செங்கிஸ்கானுக்கு எதிராக செயல்பட்டார் என ஆதாரம் உள்ளது. இதன் காரணமாக செங்கிஸ்கான் ஒரு தற்காப்பு தாக்குதலை நடத்த யோசனை செய்தார். செங்கிஸ்கான் மங்கோலியாவை அடைந்த பொழுது சூச்சியை அழைத்து வர ஆட்களை அனுப்பினார். ஆனால் சூச்சி வர மறுத்தார். மன்னிப்பு கோரினார். செங்கிஸ்கான் சகதை மற்றும் ஒக்தாயியை அவருக்கு எதிராக அனுப்பினார். வெளிப்படையான யுத்தம் நடப்பதற்கு முன்னரே பிப்ரவரி 1226 இல் சூச்சி இறந்தார் என்ற செய்தி வந்தது.[சான்று தேவை]
செங்கிஸ் கான் தனது பேரரசை கானேடுகளாக தனது நான்கு மகன்களுக்கு தன் வாழ்நாளிலேயே பிரித்துக் கொடுத்தார். சூச்சிக்கு பேரரசின் கடைக்கோடி மேற்குப்பகுதி கொடுக்கப்பட்டது. அது உரல் (ஜைக், டிஜைக், இயய்க், ஜையக்) மற்றும் இர்டிஸ் ஆறுகளுக்கு இடையில் அமைந்திருந்தது. செங்கிஸ்கானின் இறப்பிற்கு பிறகு 1229 இல் நடந்த குறுல்த்தாயில் இந்த பிரிவு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. 'மங்கோலிய குதிரைகளின் குளம்புகள் படும் தூரம் வரை' மேற்குப் பகுதியில் உள்ள நிலங்கள் சூச்சியின் குடும்பத்திற்கு (செங்கிஸ்கான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சூச்சி இறந்துவிட்டார்) வழங்கப்பட்டது. மங்கோலிய பாரம்பரியப்படி செங்கிஸ் கான் தனது மூத்த 3 மகன்கள் ஒவ்வொருவருக்கும் வெறும் நான்காயிரம் 'உண்மையான' மங்கோலிய துருப்புகளையே வழங்கினார். கடைசி மகன் டொலுய்க்கு 101,000 துருப்புகளை வழங்கினார். பிறகு சூச்சியின் வழித்தோன்றல்கள் தங்களது பேரரசை வெற்றி கொண்ட மக்கள் தொகையில் இருந்து பெறப்பட்ட துணைத் துருப்புகளைக் கொண்டே விரிவாக்கினார். அந்த துருப்புக்கள் துருக்கியர்கள் ஆவர். தங்க நாடோடிக் கூட்டம் துருக்கிய அடையாளம் பெற இதுவே முக்கிய காரணமாகும். சூச்சியின் பகுதிகள் அவரது மகன்களுக்கு இடையில் பிரித்து கொள்ளப்பட்டன. அவரது மகன்கள் ஓர்டா மற்றும் படு முறையே வெள்ளை நாடோடி கூட்டம் மற்றும் நீல நாடோடி கூட்டத்தை நிறுவினர். இப்பகுதிகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டு கிப்சாக் கானேடு அல்லது தங்க நாடோடிக் கூட்டமாக ஆயின. சூச்சியின் மகன்களில் ஒருவரான சிபன், படு மற்றும் ஓர்டாவின் பகுதிகளுக்கு வடக்கே இருந்த பகுதிகளை பெற்றார்.
ஒரு பெரிய சமூக வேட்டையின் மேற்பார்வை மற்றும் நடத்தும் பொறுப்பை சூச்சிக்கு செங்கிஸ்கான் வழங்கினார். வேட்டை என்பது உண்மையில் ஒரு பெரிய அளவிலான ராணுவ பயிற்சியாகும். இது ராணுவத்தை பயிற்றுவிக்க உருவாக்கப்பட்டிருந்தது. வேட்டையானது ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடக்கும். வேட்டைக்கு பல தியுமன்கள் பங்கேற்க வேண்டியிருந்தது. வேட்டை என்பது ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை நடக்கும். சட்டங்கள் மற்றும் இராணுவ பயிற்சியை நடத்தும் முறை ஆகியவை மங்கோலிய சட்டமான யசாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சில நிகழ்வுகள் சூச்சி செங்கிஸ்கானை விட இரக்க குணம் உடையவர் என்பதற்கான குறிப்பை நமக்குக் காட்டுகின்றன. இங்கு "இரக்கம்" என்ற சொல் அக்கால இயல்பு மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் குடிமக்கள் பலரை சூச்சியும் படுகொலை செய்துள்ளார். ஒருநாள் சூச்சி தனது தந்தையிடம் கைதியாக பிடிக்கப்பட்ட எதிரி தலைவரின் மகனை கொல்ல வேண்டாம் என்று கூறினார். ஏனெனில் அவர் மிகச் சிறந்த வில்லாளியாக இருந்தார். அவரைப் போன்ற ஒரு சிறந்த வில்லாளி மங்கோலிய ராணுவத்திற்கு ஒரு சொத்தாக இருப்பார் என்று சூச்சி கூறினார். ஆனால் செங்கிஸ்கான் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவரைக் கொன்றார்.
சூச்சியின் வழித்தோன்றலான பெர்கே மங்கோலியர்களிலேயே ஆரம்பத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவராவார். சூச்சியின் மற்ற வழித்தோன்றல்கள் ஒஸ் பெக் கான், தோக்தமிசு மற்றும் ஹசி ஒன்றாம் கிரே.
சூச்சியின் மகன் படுவின் கீழ் ஆட்சியானது அதன் மேற்கு கோடி எல்லைவரை விரிவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டம் (கிப்சாக் கானேடு) சூச்சியின் உளூஸை ஸ்திரப்படுத்த நிறுவப்பட்டது.
சூச்சிக்கு குறைந்தது 14 மகன்கள்[3] மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்:
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதை | ஒகோடி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.