From Wikipedia, the free encyclopedia
குக் நீரிணை (Cook Strait) என்பது நியூசிலாந்தின் வடக்கு, மற்றும் தெற்குத் தீவுகளை இணைக்கும் ஒரு நீரிணை ஆகும். இது வடமேற்கே தாஸ்மான் கடலை தென்கிழக்கேயுள்ள அமைதிப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இது தலைநகர் வெலிங்டனிற்கு அருகில் அமைந்துள்ளது. இதன் குறுகிய முனையின் அகலம் 22 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) ஆகும்.[1] இது உலகின் மிகவும் பாதுகாப்பற்றதும், முன்னறிந்து கூறமுடியாததுமான நீரிலை எனக் கருதப்படுகிறது.[2]
1770 ஆம் ஆண்டில் இங்கு வந்த முதலாவது ஐரோப்பியரான ஜேம்ஸ் குக்கின் நினைவாக இந்நீரிணைக்கு குக் நீரிணை எனப் பெயரிடப்பட்டது. உள்ளூர் மாவோரி மொழியில், ராவுக்காவா அல்லது ராவுக்காவா மோவானா என அழைக்கப்படுகிறது. ராவுக்காவா என்பது "கசப்பான இலைகள்" எனப் பொருள்.[3]
மாவோரி தொன்மவியலின் படி, குக் நீரிணை குப்பே என்ற மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது. டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் 1642 இல் நியூசிலாந்தைக் கண்ட போது, குக் நீரிணையை அவர் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெருங்குடா எனக் கருதினார். இதற்கு அவர் தனது இரண்டு கப்பல்களில் ஒன்றின் நினைவாக சீகாயென் பெருங்குடா (Zeehaen's Bight) எனப் பெயரிட்டார். 1769 இல் ஜேம்சு குக் இதனை ஒரு நீரிணை என நிறுவினார்.
திமிங்கிலங்கள் இதனூடாக வலசை போகும் காரணத்தால் 19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இந்நீரிணை பெருமளவு ஐரோப்பியக் குடியேறிகளைக் கவர்ந்தது.[4][5] 1820கள் முதல் 1960களின் நடுப்பகுதி வரை அரப்பாவா தீவு திமிங்கில வேட்டைக்கு முக்கியமான தளமாக இருந்துள்ளது.[6] 1820களில் தே ரவுப்பராகா தலைமையில் மாவோரி மக்கள் குக் நீரிணைப் பகுதியைக் கைப்பற்றி குடியேறினர். 1840 முதல் வெலிங்டன், நெல்சன் போன்ற இடங்களில் நிரந்தரக் குடியேற்றம் நிகழ்ந்தது.
1888 முதல் 1912 வரை பெலோரசு ஜாக் என்ற பெயர் சூட்டப்பட்ட ஓங்கில் ஒன்று குக் நீரிணைக்கூடாக செல்லும் கப்பல்களை சந்தித்து அவற்றுக்கு வழிகாட்டியாக இரு செயற்பட்டது. இந்த டொல்பினைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.[7][8] இதனை அடுத்து நியூசிலாந்து 1904 சட்டத்தின் படி இதற்கு அரசு பாதுகாப்பு கொடுத்தது.[9]
நியூசிலாந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகலாம் என்ற பயத்தில் இப்பகுதியில் பல கரையோரப் பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. பென்காரோ கலங்கரை விளக்கம் நியூசிலாந்தில் கட்டப்பட்ட முதலாவது நிரந்தரமான கலங்கரை விளக்கம் ஆகும். 1935 ஆம் ஆண்டில் இது திரும்பப் பெறப்பட்டு அதற்குப் பதிலாக பாரிங்கு முனை கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
இப்பகுதியில் பலத்த உயிரிழப்புகளுடன் பல கப்பல்கள் மூழ்கின. 1951 இல் மரீயா,[10] 1865 இல் துனெதின் நகரம்,[11] 1869 இல் சென் வின்சென்ட்,[10] 1884 இல் லாஸ்டிங்கம்,[12] 1909 இல் பென்குவின், 1968 இல் வாகைன் ஆகிய கப்பல்கள் மூழ்கியுள்ளதாக பதியப்பட்டுள்ளது.
ஐன் பவ்பவ் என்பவரே குக் நீரிணையை நீந்திக் கடந்த முதல் பெண என மாவோரிகளின் வாய்வழிச் செய்திகள் மூலம் அறியப்படுகிறது.[13] அண்மைய காலத்தில், பாரி டெவன்போர்ட் என்பவர் 1962 ஆம் ஆண்டில் இந்நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தார். 1965 இல் லின் கொக்சு என்பவர் நீரிணையை நீந்திக் கடந்த முதல் பெண் ஆவார். பிலிப் ரஷ் என்பவர் 8 தடவைகள் நீந்திக் கடந்துள்ளார். ஆதித்தியா ராவுட் என்ற இந்தியர் தனது 11 வது வயதில் இந்நீரிணையை நீந்திக் கடந்த முதலாவது இளம் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[14] ஸ்டெபனி பெனிங்டன் என்ற தனது 13வது வயதில் நீந்திக் கடந்தார். 2010 வரை 65 பேர் இந்நீரிணையைக் கடந்துள்ளனர்.[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.