From Wikipedia, the free encyclopedia
ஏபெல் டாஸ்மான் (Abel Janszoon Tasman; 1603 – அக்டோபர் 10, 1659), என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார்.
இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக வான் டியெமன் நிலம் (தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவுகளுக்கும், நியூசிலாந்து மற்றும் பிஜி தீவுகள் போன்றவற்றையும் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார். அத்துடன் இவரும் இவருடன் பயணம் செய்தவர்களும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கண்டறிந்தனர்.[1][2][3]
இவர் 1603 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தற்போது குறொனிங்கன் மாகாணம் என்றழைக்கப்படும் லூட்ஜிகாஸ்ற் என்ற இடத்தில் பிறந்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து பல நாடுகளுக்கும் சென்றார். 1634 இல் ஜகார்ட்டா சென்றார். அதே ஆண்டு ஜூலையில் மோச்சா என்ற சிறிய கப்பலுக்குத் தலைவரானார். 1637 இல் ஒல்லாந்துக்கு சென்று பின்னர் அக்டோபர் 1638 இல் மீண்டும் ஜகார்ட்டா திரும்பினார்.
1634 இல் டாஸ்மான் வடக்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பல சிரமங்களின் மத்தியில் நவம்பரில் "ஃபோர்மோசாவை (தாய்வான்) அடைந்தார். இவரது கப்பலில் சென்ற 90 பேரில் 40 பேர் இடையிலேயே இறந்து விட்டனர். 1640 இல் ஜப்பான், 1642 இல் சுமாத்ரா ஆகிய நாடுகளுக்கு சென்றார். சுமாத்ராவில் அந்நாட்டு சுல்தானுடன் நட்புறவான வியாபாரத்திலும் ஈடுபட்டார். ஆகஸ்ட் 1642 இல் பெயர்தெரியாத தென்பகுதிக்கு மாலுமிகளுக்குத் தலைமைதாங்கி அனுப்பப்பட்டார். ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தை அடைந்தார். (இக்கண்டத்தின் மேற்குக் கரைகளில் ஏற்கனவே சில டச்சுக்கப்பல்கள் சென்றிருந்தன). ஆனாலும் தெற்குக் கரைப்பகுதி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.
நவம்பர் 24 1642 இல் அவர் தற்போதைய தாஸ்மேனியாவின் மேற்குக் கரையை முதலில் அடைந்தார். இதற்கு அவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநர் அந்தனி வான் டியெமென் என்பவரின் நினைவாக "வான் டியெமெனின் நிலம்" எனப் பெயர் சூட்டினார்.
டாஸ்மான் தொடர்ந்து வடக்கு நோக்கிச் செல்ல உத்தேசித்தாலும் கடும் காற்று காரணமாக கிழக்கை அடைந்தார். டிசம்பர் 13 இல் நியூசிலாந்தின் வடமேற்குக் கரையைக் கண்டார். மேலும் கிழக்கே சென்று ஒன்பது நாட்களின் பின்னர் நியூசிலாந்தை அடைந்தார். அவர் அதை தென்னமெரிக்காவிலுள்ள ஆர்ஜெண்டீனாவின் ஸ்டேட்டன் தீவுடன் சம்பந்தப்படுத்தி அதற்கு அதற்கு அவர் "ஸ்டேட்டன் நிலம்" எனப் பெயரிட்டார். தொடர்ந்து வடக்கு பின்னர் கிழக்காக சென்று கொண்டிருக்கும் போது அவர்களது கப்பல்கள் மவோரிகளினால் (Māori) தாக்கப்பட்டதில் அவது நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர். டாஸ்மான் இதற்கு Murderers' Bay (தற்போதைய Golden Bay) எனப் பெயர் சூட்டினார்.
டாஸ்மானும் அவரது மாலுமிகளும் பின்னர் ஜனவரி 21, 1643 இல் தொங்காத் தீவுக்கூட்டத்தையும் கடந்தனர். பிஜி, நியூ கினி ஆகியவற்றையும் கண்டறிந்து இறுதியாக ஜூன் 15 1643 இல் ஜகார்ட்டா திரும்பினார்.
1644 இல் டாஸ்மான் மீண்டும் தனது பசிபிக் நோக்கிய பயணத்தை மூன்று கப்பல்களுக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். நியூ கினியின் தெற்குக்கரைக்குச் சென்றார்.
டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு இவரது பயணம் அவ்வளவாக வெற்றியளிக்கவில்லை. அவர்களது கடல் வணிகத்துக்கு சிறந்த நாடுகளை அவர் கண்டறியவில்லை. மேலும் ஒரு நூற்றாண்டின் பின்னரே டாஸ்மேனியா, நியூசிலாந்துக்கு ஜேம்ஸ் குக் தலைமையில் ஐரோப்பியர்கள் சென்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.