கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) சுருக்கமாக கார்ல் மார்க்சு (5 மே 1818 – 14 மார்ச்சு 1883) செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார். 1848 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை துண்டுப் பிரசுரம், நான்கு-பாகங்களில் மூலதனம் (1867–1883) ஆகியவை இவரது மிகவும் பிரபலமான தலைப்புகள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் அடுத்தடுத்த அறிவார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.

விரைவான உண்மைகள் கார்ல் மார்க்சுKarl Marx, பிறப்பு ...
கார்ல் மார்க்சு
Karl Marx
Thumb
பிறப்புகார்ல் கென்ரிக் மார்க்சு
(1818-05-05)5 மே 1818
திரீர், புருசியா, செருமனி
இறப்பு14 மார்ச்சு 1883(1883-03-14) (அகவை 64)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்
கல்வி
  • பொன் பல்கலைக்கழகம்
  • பெர்லின் பல்கலைக்கழகம்
  • செனா பல்கலைக்கழகம் (முனைவர், 1841)[1]
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்குறைந்தது 7,[2] (செனி, இலாவ்ரா, எலனோர் உட்பட)

மெய்யியல் பணி
கார்ல் மார்க்சு
காலம்19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளி
இயற்கை பற்றிய டெமாக்கிரெட்டிய, எபிக்கியூரிய மெய்யியல் வேறுபாடு (1841)
முனைவர் பட்ட ஆலோசகர்புரூனோ பவர்
முக்கிய ஆர்வங்கள்
  • மெய்யியல்
  • பொருளியல்
  • வரலாறு
  • அரசியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்Thumb
மூடு

செருமனியின் திரீர் நகரில் பிறந்த மார்க்சு, பான், பெர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டமும் மெய்யியலும் கற்றார். செருமானிய நாடகத் திறனாய்வாளரும் அரசியல் ஆர்வலருமான செனி வான் வெசுட்பலெனை 1843 இல் மணந்தார். இவருடைய அரசியல் வெளியீடுகள் காரணமாக, மார்க்சு நாடற்றவராகி, பல தசாப்தங்களாக இலண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாடுகடத்தப்பட்டார், அங்கு செருமானிய மெய்யியலாளரான பிரெட்ரிக் எங்கெல்சுடன் இணைந்து தனது சிந்தனையைத் தொடர்ந்தார். எங்கெல்சுடன் இணைந்து பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு தனது ஆக்கங்களை வெளியிட்டார்.

கூட்டாக மார்க்சியம் என்று புரிந்து கொள்ளப்படும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய மார்க்சின் விமர்சனக் கோட்பாடுகள், மனித சமூகங்கள் வர்க்க மோதலின் மூலம் உருவாகின்றன எனக் கூறுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில், இக்கோட்பாடுகள் உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கங்களுக்கும் (முதலாளித்துவம் என அறியப்படுகிறது), தொழிலாள வர்க்கங்களுக்கும் (பாட்டாளி வர்க்கம் என அறியப்படுகிறது) இடையேயான மோதலில் வெளிப்படுகிறது. ஊதியத்திற்கு ஈடாக தொழிலாளிகளின் உழைப்பாற்றலை விற்பதன் மூலம் இந்த வழிமுறைகளை செயல்படுத்துகிறது.[3] வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் விமர்சன அணுகுமுறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் முந்தைய சமூகப் பொருளாதார அமைப்புகளைப் போன்ற உள் பதற்றங்களை உருவாக்கியது என்றும், இந்தப் பதற்றங்கள் அதன் சுய-அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் சோசலிச உற்பத்தி முறை எனப்படும் ஒரு புதிய முறையால் இது மாற்றப்படும் என்றும் மார்க்ஸ் கணித்தார். மார்க்சைப் பொறுத்தவரை, முதலாளித்துவத்தின் கீழ் உள்ள வர்க்க விரோதங்கள் - அதன் உறுதியற்ற தன்மை, நெருக்கடிக்கு ஆளாகும் தன்மை ஆகியவற்றின் காரணமாக - தொழிலாள வர்க்கத்தின் வகுப்பு மனப்பான்மையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் இறுதியில் வர்க்கமற்ற, பொதுவுடைமை சமூகத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கும்.[4] முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கும் சமூக-பொருளாதார விடுதலையைக் கொண்டுவருவதற்கும் தொழிலாள வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டு, மார்க்சு அதைச் செயல்படுத்த தீவிரமாக அழுத்தம் கொடுத்தார்.[5]

மார்க்சு மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார், அவரது பணி பாராட்டப்பட்டும், அதே வேளையில் விமர்சிக்கப்பட்டும் உள்ளது.[6] பொருளாதாரத்தில் இவர் ஆற்றிய பணி, உழைப்பு மற்றும் மூலதனத்துடனான அதன் தொடர்பு பற்றிய சில தற்போதைய கோட்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.[7][8][9] உலகெங்கிலும் உள்ள பல அறிஞர்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள் மார்க்சின் படைப்புகளால் தாக்கம் அடைந்துள்ளனர். நவீன சமூக அறிவியலின் நிறுவனர்களில் ஒருவராக மார்க்சு பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார்.[10][11]

வாழ்க்கைக்குறிப்பு

கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். காரல் மார்க்சின் தந்தை யூதரான ஐன்றிச் மார்க்சு கிறித்தவராக எப்போது மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்.[12] இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் இரைனிசு சைத்துங்கு எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

திருமணம்

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெசற்பாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த சென்னியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த சென்னியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, சென்னிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

பிள்ளைகள்

மார்க்சுக்கும் சென்னிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் சென்னிக்கும் பிறந்த பிள்ளைகள், செனி கரோலின் (1844–1883), செனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), என்றி எட்வார்ட் கை (1849–1850), செனி ஈவ்லின் பிரான்சிசு (1851–1852), செனி சூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.[13]

பணியும் இடர்களும்

சார்ச்சு வில்லியம் பிரெடரிக் எகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் இழான் இழாக்கு உரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசெல்சு சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், செருமனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்கசு, இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.

நிதி உதவிகள்

மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.
மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.

Thumb
கார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது

நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

மூலதனம் நூல்

அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.

மார்க்சின் சிந்தனைகள்

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.[14] மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்[சான்று தேவை]. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை[சான்று தேவை]. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை

மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில:

  • ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
  • ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
  • பிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
  • முந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.
  • பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார்.

மார்க்சின் மெய்யியல் கொள்கைகள்

மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.

ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."[15]

கார்ல் மார்க்சின் கடிதம்

கார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது.

" நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான் புதிதாகச் செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்.

1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.
3. இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவுக்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும். "

இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்சு

1853 ஆம் ஆண்டு, லண்டனில் இருந்து வெளியான "நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்" என்ற பத்திரிகையில் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவின் கருத்தை கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இப் பத்திரிகையில், இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி, பிரித்தானிய ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், இந்தியா இராணுவத்தில் புரட்சிக் கலகம், இந்தியாவில் நடந்த சித்ரவதைகள் முதலியன ஆராய்ந்து விவரிக்கப்பட்டன. மேலும், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷருக்குக் கிடைக்கும் வருமானம், இந்தியாவில் வரும் வரிகள் முதலியன கருத்துக்களையும் தெரிவித்துளார் .[16]

இறுதிக் காலம்

1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜென்னி வான் வெசுட்பலென் காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,

"மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்" என்றார்.

கார்ல் மார்க்சின் கல்லறை

Thumb
இலண்டன், ஹைகேட் இடுகாட்டில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறை

இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

மார்க்சுசின் ஆக்கங்கள்

மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்

  • 1814 - மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது
  • 1818 - காரல் மார்க்சு பிறந்தது
  • 1820 - பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு
  • 1836 – 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு
  • 1838 - மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்
  • 1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்
  • 1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு - ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்
  • 1844 - முதல் மகள் பிறப்பு.
  • 1845 - பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.
  • 1847 - சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.
  • 1848 - பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்
  • 1849 - கோலோனிலிருந்து வெளியேற்றம்.
  • 1849–1883 - இங்கிலாந்தில் வாழ்ந்தார்.
  • 1850 - இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.
  • 1852 - பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.
  • 1864 - முதல் இன்டர்நேசனல் தோற்றம்.
  • 1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.
  • 1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.
  • 1873 - மார்க்சு உடல் நலம் குன்றினார்.
  • 1881 - மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.
  • 1883 - மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.
  • 1883–1894 - மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.
  • 1895 - ஏங்கெல்சின் மரணம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.