From Wikipedia, the free encyclopedia
கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா (Tumor Necrosis Factor - alpha; TNF-α) உள்பரவிய அழற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு உயிரணு தொடர்பி/செயலூக்கியாகும் (சைட்டோக்கைன்). இது, தீவிரப்பிரிவு வினைகளைத் தூண்டும் உயிரணு தொடர்பி/செயலூக்கி குழுமத்தில் ஒரு உறுப்பினராக உள்ளது. முதன்மையாக, கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா பெருவிழுங்கிகளால் உருவாக்கப்படுகிறது என்றாலும் மற்றைய உயிரணு வகைகளாலும் இது சுரக்கப்படுகின்றது. இதன் முதன்மைப் பணியானது எதிர்ப்பு உயிரணுக்களைக் கட்டுப்படுத்துதலாகும்.
அகவழி காய்ச்சலூட்டியான TNF-α பின்வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளது: காய்ச்சலைத் தூண்டுவிக்கும்; கட்டளைக்குட்பட்ட உயிரணு இறப்பைத் தூண்டும்; வெள்ளையணு தொடர்பி/செயலூக்கி (இன்டெர்லியுகின்) - ஒன்று மற்றும் ஆறு (IL-1 & IL-6) உற்பத்தி மூலமாக சீழ்ப்பிடிப்பினைத் தூண்டும்; உடல் மெலிவுச் சீர்கேட்டினை உருவாக்கும்; அழற்சியினை உண்டாக்கும்; கழலை உருவாக்கத்தைத் தடுக்கும்; நச்சுயிரி (வைரஸ்) பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
பலவித மனித நோய்களில் [மூளையசதி நோய்[1]), புற்று நோய்[2], பெரும் மனத்தளர்வு[3], மற்றும் வயிற்று அழற்சி நோய்[4]], TNF-α வின் கட்டுபாடற்ற உருவாக்கம் ஒரு உள்ளார்ந்த காரணியாகக் கருதப்படுகிறது. முரணாகக் கருதப்பட்டாலும், பெரும் மனத்தளர்வு மற்றும் வயிற்று அழற்சி நோய்கள் தற்போது TNF-α அளவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன[5].
மனித TNF-α மரபணு 1985-ல் படியாக்கப்பட்டது[6]. இது மரபுப்புரி 6p21.3 -உடன் கோர்வையாக்கப்பட்டுள்ளது, மூன்று கிலோபேஸ் நீட்சியில் நான்கு வெளியன்களைக் (புரத குறியீடு செய்யும் மரபணுக்கோர்வைகள்) கொண்டுள்ளது. எண்பது சதவிகிதத்திற்கும் (80%) மேலான, சுரக்கப்படுகின்ற TNF-α புரதத்தினை கடைசி வெளியன் குறிமுறை செய்கிறது[7]. TNF-α வின் 3' UTR பகுதியில் செய்தி பரிமாற்ற ரைபோநியூக்ளிக் அமிலத்தை (ஆர்.என்.ஏ) நிலைபடுத்தும் AU குறிமுறையன்கள் செறிவாகக் காணப்படுகின்ற ஒழுங்காற்று பகுதி (ARE) அமைந்துள்ளது.
முதன்மையாக, கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா 212-அமினோ அமிலங்களினாலான நிலையான ஒற்றமுப்படிகளைக் கொண்ட இரண்டாம் வகை மாறுபக்கச்சவ்வு புரதமாக உருவாக்கப்படுகின்றது[8][9]. இந்த சவ்வில் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்திலிருந்து கரைவடிவ ஒற்றமுப்படி சைடோகைன் (sTNF) கனிம புரதச்சிதைப்பியினால் [கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா மாற்றுநொதி (TACE; ADAM17)] வெளிபடுத்தப்படுகின்றது[10]. ஐம்பத்தி ஒன்று கிலோடால்டன் நிறையுள்ள (51 kDa) கரைவடிவ ஒற்றமுப்படி சைடோகைன், மீநுண் மூலக்கூற்றிற்கும் கீழான செறிவில் பிரிந்து செல்லும் இயல்பினை கொண்டதால், உயிர் ஊக்கத் திறனை இழந்துவிடுகின்றது.
கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா இரண்டு ஏற்பிகளுடன் [கழலை நசிவுக்காரணி ஏற்பி வகை ஒன்று (TNF-R1 ; CD120a; p55/60) மற்றும் கழலை நசிவுக்காரணி ஏற்பி வகை இரண்டு (TNF-R2; CD120b; p75/80)] இணையக்கூடியது. முதலாம் வகை ஏற்பி (CD120a) பெரும்பாலான திசுக்களில் காணப்படுகின்றது. சவ்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் கரைவடிவ ஒற்றமுப்படி கழலை நசிவுக்காரணியால் முழுமையாகத் தூண்டப்படக் கூடியது. ஆனால், இரண்டாம் வகை ஏற்பி (CD120b) எதிர்ப்பு அமைப்பிலுள்ள உயிரணுக்களில் மட்டும் காணப்படுகின்றது. இது (CD120b) சவ்வில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றமுப்படி கழலை நசிவுக்காரணியால் தூண்டப்படக் கூடியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.