சவுதி பயங்கரவாதி மற்றும் அல்-காயிதாவின் இணை நிறுவனர் (1957-2011) From Wikipedia, the free encyclopedia
உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957 - இறப்பு மே 1 2011)[1][2][3][4]) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.[5] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.
இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.[6] [7]
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.[8][9]
மே 1, 2011 அன்று ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சியில் பாக்கிஸ்த்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பில் லாதின் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார்[3][10] மரபணு சோதனைக்குப் பின் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது.[4]
உசாமா பின் முமது பி்ன் அவத் பின் லாதின்[11] சவுதி அரேபியாவின் ஜித்தாவில்[12] சவுதி அரசுக் குடும்பத்துக்கு நெருக்கமானவரும் பெருஞ்செல்வரும் கட்டிட வணிகருமான முகமது பின் அவத் பின் லாதினுக்கும்[13] அவரது பத்தாவது மனைவி அமீதா அல்-அட்டாசுக்கும் மகனாகப் பிறந்தார்.[14] 1998 நேர்காணல் ஒன்றில், பின் லாதின் தமது பிறந்த நாள் மார்ச்சு 10, 1957 எனக் கூறியுள்ளார்.[15]
உசாமா பின் லாதின் பிறந்த பின்னர் முமது பின் லாதின் தமது மனைவி அமீதாவிடமிருந்து மணமுறிவு பெற்றார். தமது கூட்டாளியான முகமது அல்-அட்டாசுக்குப் அமீதாவை திருமணம் செய்யுமாறு பரிந்துரைக்க 1950களின் பிற்பகுதியிலோ 1960களின் முற்பகுதியிலோ இருவரும் மணம் புரிந்து இன்றுவரை இணைந்துள்ளனர்.[16] பின் லாதின் குடும்பம் கட்டமைப்புத் தொழிலில் இருந்து $5 பில்லியன் பணம் ஈட்டியது; இதிலிருந்து உசாமாவிற்கு தன்பங்காக $25–30 மில்லியன் கிட்டியது.[17]
பின் லாதின் ஓர் நம்பிக்கையுள்ள வகாபி முசுலிமாக வளர்க்கப்பட்டார்.[18] 1968 முதல் 1976 வரை, சமயசார்பற்ற உயர்மட்ட அல்-தாகெர் மாடல் பள்ளியில் படித்தார்.[14][19] கிங் அப்துலாசிசு பல்கலைக்கழகத்தில் பொருளியலும் வணிக மேலாண்மையும் படித்தார்[20]. சில கூற்றுக்களின்படி 1979இல் குடிசார் பொறியியல் [21] அல்லது 1981இல் பொது நிர்வாகம் படித்ததாகவும் அறியப்படுகிறது.[22] ஒரு ஆதாரத்தின்படி அவர் "கடும் உழைப்பாளி" என்றும் அறியப்படுகிறது;[23] ஆனால் இன்னொன்று அவர் மூன்றாமாண்டிலேயே கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல்கலைக்கழகத்திலிருது வெளியேறினார் என்றும் கூறுகிறது.[24] பல்கலைக்கழகத்தில் உசாமாவின் முதன்மை ஆர்வமாக சமயத்துறை இருந்தது. "திருக்குர்ஆனையும் ஜிகாத்தையும் புரிந்துகொள்ளவும்" சமயத்தொண்டு குறித்தும் அறிய மிகுந்த ஆவலாயிருந்தார்.[25] மற்ற பொழுதுபோக்குகளாக கவிதை எழுதுவது,[26] பீல்டு மார்ஷல் பெர்னார்டு மொன்கொமரி, சார்லஸ் டி கோல் போன்றோரின் ஆக்கங்களைப் படிப்பது என்பனவாக இருந்தது; மேலும் கருப்பு ஆண் குதிரைகள், காற்பந்தாட்டம் ஆகியவற்றிலும் ஆர்வமுள்ளவராக இருந்தார்; காற்பந்தாட்டத்தில் நடு முன்னோக்கிய வீரர் இடத்தில் ஆடிய உசாமா இங்கிலாந்து காற்பந்தாட்ட அணியான ஆர்சனல் கழகத்தின் இரசிகராக இருந்தார்.[27]
1974இல் தமது 17வது அகவையில் சிரியாவின் லடாக்கியாவில் நஜ்வா பின் லாதினை கரம் பற்றினார்;[28] ஆனால் செப்டம்பர் 11, 2001க்கு முன்னரே இந்தத் திருமணம் முறிவடைந்தது. இவரது மற்ற மனைவிகளாக கதீஜா சரீஃப் (திருமணம் 1983, மணமுறிவு 1990s); கயிரியா சபர் (திருமணம் 1985); சிகாம் சபர் (திருமணம் 1987); அமல் அல்-சதா (திருமணம் 2000) ஆகியோர் அறியப்படுகின்றனர். சிலர் ஆறாவதாக ஒருவரைத் திருமணம் செய்து மணவிழா முடிந்த உடனேயே மணமுறிவு பெற்றதாகவும் கூறுகின்றனர்.[29] இந்த மனைவிகள் மூலமாக பின் லாதினுக்கு 20 முதல் 26 வரை மக்கள் பிறந்தனர்.[30][31] செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஈரானுக்கு ஓடினர். ஈரானிய அரசு 2010 வரை இவர்களது இடமாற்றங்களை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.[32]
பின் லாதினின் தந்தை 1967இல் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த வானூர்தி விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.[33] பின் லாதினின் மாற்றாந்தாய் அண்ணன் சலேம் பின் லாதின் 1988இல் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் சான் அன்டோனியோ அருகில் தனது வானூர்தி மின்கம்பிகளில் சிக்கிக்கொள்ள உயிரிழந்தார்.[34]
பின் லாதின் ஒல்லியான, உயரமான மனிதராக, 6 அடி 4 அங் - 6 அடி 6 அங் (193–198 செமீ) உயரமுள்ளவராக, 160 pounds (73 kg) எடையுள்ளவராக அமெரிக்கப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. இடது கை பழக்கமுள்ளவராகவும் ஒரு கைத்தடியின் உதவிநுடன் நடப்பவராகவும் விவரிக்கிறது. வெள்ளை வண்ண தலையணி அணிந்தவராகவும் அறியப்படுகிறார். சவுதி அரேபியாவின் வழமையான ஆண்களுக்கான தலையணியை இவர் அணியவில்லை.[35] மென்மையாகப் பேசும் பின் லாதின் மிகுந்த பண்புள்ளவராக விளங்கினார்.[36]
ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன.[37]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.