From Wikipedia, the free encyclopedia
ஈரானிய புரட்சி (பாரசீகம்: انقلاب اسلامی, Enghelābe Eslāmi or انقلاب بیست و دو بهمن) என்பது ஈரானின் இசுலாமிய புரட்சி என்றும் 1979 புரட்சி [4][5][6][7][8][9] என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பலவீ அரசமரபின் அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இசுலாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் அமைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது. இப்புரட்சிக்கு இடதுசாரி அமைப்புகளும் இசுலாமிய அமைப்புகளும்[10] ஈரானிய மாணவர் இயக்கமும் துணைபுரிந்தன. புரட்சியின் தொடக்கத்தில் சா அரசைக் காப்பாற்ற சோவியத் ஒன்றியம் முயன்றாலும் இசுலாமிய குடியரசைச் சோவியத் ஒன்றியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது.[11]
ஈரானியப் புரட்சி Iranian Revolution "Enqelābe Esteqlāl wa zādi" | |
---|---|
1979ல் தெக்ரானில் போராட்டக்காரர்கள் | |
தேதி | சனவரி 1978 - பிப்ரவரி 1979 |
அமைவிடம் | ஈரான் |
காரணம் |
|
இலக்குகள் | பஃலாவி அரசகுலத்தை வீழ்த்துதல் |
முறைகள் |
|
முடிவு |
|
தரப்புகள் | |
வழிநடத்தியோர் | |
முகம்மது ரெசா பஃலாவி ரூஃகூல்லா மூசவி கொமெய்னி | |
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |
532[1]-2,781 பேர் 1978–79 வரையான காலப்பகுதியில் எதிர்ப்பு ஊர்வலத்தில் கொல்லப்பட்டனர்[2][3] |
சா அரசுக்கு எதிரான போராட்டங்கள் அக்டோபர் 1977ல் ஆரம்பித்தன, அது பின்னர் சமயம் சார்ந்த போராட்டமாக மாறியது. சனவரி 1978ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. 1978 ஆகத்து மற்றும் திசம்பருக்குள் இப்போராட்டத்தால் நாடு முடங்கியது. 1979 சனவரி 16 அன்று தன் கடமைகளைப் பிரதமரிடம் ஒப்படைத்து விட்டு மன்னர் சா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். அயத்தோலா கோமெய்னி அரசு அமைக்க அழைக்கப்பட்டார். அவர் தெக்ரான் திரும்பியபோது அவரைப் பல மில்லியன் ஈரானியர்கள் வரவேற்றனர்.[12][13] பிப்ரவரி 11 அன்று மன்னரின் படைகளைப் புரட்சிப்படைகள் முழுவதுமாகத் தோற்கடிக்கத்ததும் மன்னர் ஆட்சி முழுவதுமாகக் குலைந்தது. கோமெய்னி அதிகாரபூர்வமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.[14][15][16] தேசிய வாக்கெடுப்பு மூலம் ஈரானியர்கள் ஈரானை இசுலாமிய குடியரசாக ஏற்றனர். ஏப்பிரல் 1, 1979 அன்று அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1979 திசம்பரில் புதிய அரசிலமைப்பு சட்டமும் ஏற்கப்பட்டது. இதில் அயத்தோலா கோமெய்னி நாட்டின் உயரிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இப்புரட்சி உலகுக்கு பெரும் வியப்பை தந்தது[17]. புரட்சிக்குத் தேவையானவையெனக் கருதப்படும் பொருளாதார நெருக்கடி, அடித்தட்டு மக்களின் புரட்சி, போரில் தோல்வி, கட்டுப்படாத இராணுவம் போன்ற காரணங்கள் இப்புரட்சிக்கு தேவைப்படாததே இதற்கு காரணம்[18] புரட்சி நடந்த சமயம் இங்கு ஒப்பீட்டளவில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருந்ததும், மக்கள் விரும்புவது விரைவாகக் கிடைத்ததும், பல ஈரானியர்கள் புரட்சிக்குப் பின் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்ததற்கு காரணம்.[19][20] இப்புரட்சி மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்புக் கொண்ட இசுலாமிய ஆதிக்க் கொள்கை உடையதாக மாறியது [21][22] . இப்புரட்சி ஒப்பீட்டளவில் வன்முறையற்றதாக இருந்தது. இது தற்கால புரட்சிகளுக்குப் புதிய வரையறையை அளித்தது (இப்புரட்சி நடந்த பின் வன்முறை இருந்தது.)[23]
புரட்சி வேகமாகப் பரவியதற்குத் தேசியவாதம், பெரும் திரள்வாதம் ஆகியவையும், கலாச்சாரம் மேற்கத்தியமாவதற்கும், மதச்சார்பற்ற முயற்சிகளும் எதிரான பழமைவாத சியா இசுலாமியர்களின் கிளர்ச்சியும் [24] சமூக அநீதிக்கு எதிரான இடது சாரிகளின் போராட்டமும் [25] 1973 எண்ணெய் வளத்தில் கிடைத்த பெரும்பணத்தால் நிறைவேற்றமுடியாத பொருளாதார திட்டங்களைத் தீட்டியதும், 1977-78ல் ஏற்பட்ட தற்காலிக கடும் பொருளாதார சிக்கலும் காரணமாகும்[26].
சாவின் ஆட்சி ஊழலும் அடக்குமுறையும் மிகுந்ததாக இருந்தது [27][28][29]. சா முசுலிம் அல்லாத மேற்கு நாடுகளின் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் கையாளாகப் பார்க்கப்பட்டார்[30][31]. அதே சமயத்தில் சா வுக்கு மேற்குலக அரசியல்வாதிகளிடமும் ஊடகங்களிடமும் செல்வாக்கு குறைந்தது. குறிப்பாக ஜிம்மி கார்டரின் நிருவாகத்தில் இவருக்கு ஆதரவு குறைந்தது. இதற்கு முதன்மையான காரணம் 1973 எண்ணெய் நெருக்கடி காலத்தில் அமெரிக்காவுக்கு பாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு எண்ணெய் அனுப்ப பிறப்பித்த தடைக்கு சா ஆதரவு கொடுத்தது[32]. ஜிம்மி கார்டரின் நிருவாகம் மனித உரிமை மீறிய நாடுகளுக்கு ஆயுத பொருளாதார உதவிகளை நிறுத்துவது என்று எடுத்த முடிவால் உந்தப்பட்டு அரசின் அடக்கமுறை குறையும் என்றெண்ணி சில ஈரானியர்கள் சா ஆட்சியின் அவலங்களைப் பற்றி நிறைய அமெரிக்க அரசுக்கு எழுதினர் [33].
மேற்கத்திய பாணியை எதிர்க்கும் பழைமையை விரும்பும் ஈரானியர்களிடம் சியா மதகுருமார்களின் செல்வாக்கு குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது[சான்று தேவை]. 1891ல் இங்கிலாந்துக்கு புகையிலை விற்க முழு உரிமையைத் தந்ததை எதிர்த்து மதகுருமார்கள் புகையிலையை புறக்கணிக்கச்சொல்லி போராடியபோது அரசு அவர்கள் கோரிக்கைக்கு இணங்கியது.
பல ஆண்டுகளுக்குப் பின் அரசும் மதகுருமார்களும் மோதியபோது அரசின் கை ஓங்கியது. முகமது ரிசா சா பலவீயின் தந்தை ரிசா சா பலவீ இசுலாமிய சட்டங்களை மாற்றி மேற்கத்திய பாணியிலான சட்டங்களைக் கொணர்ந்தார். பொது வெளியில் பெண்கள் முக்காடு அணிய தடைவிதித்தார். இதை மீறிய பெண்களின் முக்காடு வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதை நீக்கினார்.[34] 1935ல் சியாக்களின் புனித பள்ளிவாசலில் புனித பயணம் வந்த பல சியாக்கள் பலியானதற்கு இவரின் ஆணையே காரணமெனக் கருதப்படுகிறது.[35][36][37]
இரண்டாம் உலகப்போரில் ஈரானை ஆக்ரமித்த பிரித்தானிய மற்றும் சோவியத் படைகளின் துணையுடன் முகமது ரிசா சா பலவீயால் 1941ல் ரிசா சா பதவி நீக்கம் செய்யப்பட்டு முகமது ரிசா சா பலவீ பதவிக்கு வந்தார். ரிசா சா வெளிநாட்டுக்கு புகலிடம் தேடி சென்றுவிட்டார். 1953ல் முகமது ரிசா சா பலவீக்கு துணைபுரிந்த தேசியவாதியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருமான முகமது அவர்களை இராணுவ புரட்சிமூலம் தோற்கடிக்க பிரித்தானிய அமெரிக்க உளவு அமைப்புகள் துணைபுரிந்தன [38].
முகமது ரிசா சா பலவீ அமெரிக்க அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். அமெரிக்காவுடன் இணைந்து இவரும் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரம் பரவலாகாமல் இருக்க துணைபுரிந்தார். இவர் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். இசுலாமிய மற்றும் மக்களாட்சி அரசிலமைப்பை [39] புறக்கணித்து மேற்கத்திய முறையை ஈரானில் நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டினார். தேசியவாத, இடது சாரி, இசுலாமிய அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து கொண்டு இவருடைய ஆட்சியின் ஊழல், அரசிலமைப்பு மீறல், உளவு அமைப்பு கொண்டு எதிர்ப்பவர்களை அடக்குதல் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தன.
புரட்சிக்கு முன்பு சியா மதகுருமாரான அயத்தோலா ருகோல்லா கோமெய்னி 1963ல் சா அரசுக்கு எதிராக நடந்த நில உடைமையில் சீர்திருத்தம் வேண்டுமென்ற வெள்ளைப்புரட்சியின்போது அரசியல் உலகில் பெரும்பங்காற்றினார்.
சா 'வேதனையான புரிந்துகொள்ள முடியாத மனிதர்' அவரின் நடத்தைகள் ஈரானின் இசுலாமியத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்பவை என்று சொன்னதற்காக 1963ல் கோமெய்னி கைதுசெய்யப்பட்டார்[40] . இதைத்தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பெரும் கலவரம் நடந்தது. அச்சமயத்தில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் 15,000 மக்கள் இறந்ததாகக் கோமெய்னியின் ஆதரவாளர்களால் சொல்லப்பட்டது [41] . ஆனால் புரட்சிக்குப் பின் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 என்று தெரியவந்தது [42] . எட்டு மாத வீட்டுக்காவலுக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகும் அவர் அரசை எதிர்த்தார். குறிப்பாக இசுரேலுடனான நெருங்கிய உறவு, அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்த்தார். 1964 நவம்பர் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார். புரட்சி நடக்கும் வரை 15 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே இவர் இருந்தார்.
புரட்சிக்கு நடுவில் சிறிது காலம் நிலவிய அமைதியில் [43] சா ஆட்சியின் மதசார்பின்மைக்கு அடையாளமான மேற்குலகமயமாக்களுக்கு எதிராக ஈரானியர்களிடையே எதிர்ப்பு அரும்புவிட்டது. இதுவே 1979 புரட்சிக்கான கொள்கையாக மாறியது. சலால் அல்-இ-அகமதின் எண்ணமான மேற்குலக பண்பாடு தொற்றுநோய் போன்றது அல்லது அழிக்கப்படவேண்டிய நச்சு என்பதும் [44], அலி சரியட்டியின் இசுலாமிய பார்வையே மூன்றாம் உலக நாடுகளைக் குடியேற்றவாதத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் புதிய குடியேற்றவாதத்திலிருந்தும் முதலாளித்துவத்திலிருந்தும் காப்பாற்றக்கூடியது என்பதும் [45], மோர்டிசா மோடாகரயின் பரப்பியவாத சியா நம்பிக்கைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னதும் பெருமளவில் பரவியது. இவர்கள் சொல்லுவதை கேட்பதற்கும் படிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் நிறைய மக்கள் கிடைத்தார்கள்[44].
குறிப்பாகக் கொமெய்னி புரட்சியையும் உயிர்துறவையும் சியா இசுலாமிற்கு எதிராக நடக்கும் அநீதியையும் குறித்து அதிகம் பரப்புரை செய்தார் [46]. முசுலிம்கள் முதலாளித்துவத்தையும் பொதுவுடமைவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்றும் கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம் இசுலாமிய குடியரசே வேண்டும் என்ற சூளுரையை பரப்பினார்.
ஈரானிய மக்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் கோமெய்னி தம் கொள்கைகளை, இசுலாமிய அரசாங்கம் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்[47] , இதில் சட்டத்தின் வழி அரசு நடக்க வேண்டும் என்றும் அனைத்து மக்களுக்கும் இசுலாமிய நீதிபதிகள் அரணாக இருந்து அரசு தம் கடமையிலிருந்து வலுவாமல் மேற்பார்வையிடுவார்கள் என்று தெரிவித்தார். இசுலாமிய கடமைகளான நோன்பு, வழிபாட்டை விட இச்சட்டம் அவசியமெனக் கூறினார் [48]. இசுலாமிய சரியா சட்டத்தினாலயே இசுலாமை வலுவாமல் காக்க முடியும் என்றும் அநீதி, ஏழ்மை, முசுலிம்களின் நிலத்தை முசுலிம்கள் அல்லாத வெளிநாட்டவர் கைப்பற்றுவதை தடுக்க முடியுமெனக் கூறினார்.[49]
இவருடைய இசுலாமிய நீதிபதிகள்குறித்த எண்ணம் இவரின் புத்தகம், பள்ளிவாசல்களில் ஓதப்படும் பாங்கு, கடத்திவரப்பட்ட இவருடைய பேச்சுக்கள் அடங்கிய ஒலிநாடாக்கள்[50], பழைய மாணவர்கள், மரபுவழி வணிகர்கள்மூலம் பொதுமக்களிடம் பரப்பப்பட்டது.[50]
முற்போக்கான அரசிலமைப்பு வேண்டுவோர், மக்களாட்சிக்கு ஆதரவான சீர்திருத்த ஈரானின் இசுலாமிய விடுதலை இயக்கம், தேசிய முன்னனி போன்ற மதசார்பற்ற அமைப்புகள் நாட்டின் நகர நடுத்தர மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தன. அவைகள் 1906 அரசலமைப்பு சட்டத்தை மாற்றக் கூடாது எனப் போராடின[51]. ஆனால் அவர்களுக்கு, கோமெய்னிக்கு இருந்த பெரும் அமைப்பு பலம் இல்லை [52].
மார்க்சிய குழுக்கள் அரசால் பெரிதும் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும் [53] புரட்சியில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்[54]. அவர்களும் முற்போக்கு இசுலாமியர்களும் மதகுருமார்களின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்த்தார்கள். சில மதகுருமார்கள் கோமெய்னியின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த அயத்தோலா முகமது தெலெகானி இடது சாரிகளை ஆதரித்தார். மூத்தவரும் பெரிதும் செல்வாக்குடையவருமான அயத்தோலா முகமது காசிம் சரியட்மாடரி முதலில் அரசியல் நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பின் புரட்சியை ஆதரித்தார்.
கோமெய்னி மார்க்சிய குழுக்களைத் தவிர்த்து மற்ற எதிர்ப்பு குழுக்களைத் தன் கீழ் ஒன்றிணைக்க முயன்றார்[55][56]. இதற்காகச் சா ஆட்சியின் சமூக பொருளாதாரச் சிக்கல்களைக் கையிலெடுத்தார். குழுக்களிடையே பிளவு ஏற்படுத்தும் விடயதை தவிர்த்தார்[55][57][58] . குறிப்பாக மதகுருமார்களை நீதிபதிகளாகக் கொள்வதை மேற்குலக ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட பரப்புரையால் பெரும்பான்மையான ஈரானியர்கள் தம்கருத்தை ஓரவஞ்சனையுடனே பார்ப்பார்கள் என்று கருதினார்.[59]
புரட்சிக்குப் பின் இவரின் கொள்கையை எதிர்த்தவர்கள் இவரின் இயக்கத்தால் வஞ்சகர்கள் எனப்பட்டு அடக்கப்பட்டார்கள்[60]. அதேசமயத்தில் இவர் சா விற்கு எதிரான ஒற்றுமையைக் கட்டிக்காத்தார்.[61]
1971ம் ஆண்டு அரசு பெரும் பாரசீக பேரரசு தோன்றியதன் 2500 ஆண்டு விழாவைப் பெர்சிபோலிசு நகரில் கொண்டாடியது. இதில் செய்யப்பட்ட ஆடம்பர செலவுக்காக அரசைக் கடுமையாக மக்கள் குறைகூறினார்கள். இசுலாமால் தடைசெய்யப்பட்ட மது வகைகளைச் சில வெளிநாட்டவர் வெளித்தெரியும் படி குடித்தனர். இதில் கலந்து கொள்ள ஈரானிய பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் சிலர் பட்டினியால் வாடினார்கள்[62]. ஐந்து ஆண்டு கழித்து சா, இஜ்ரியின் படியிருந்த ஈரானிய சூரிய நாட்காட்டியின் முதல் ஆண்டை மாற்றிக் கிரேக்க சைப்ரசு முடியேறியதை தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்றார். இதனால் முசுலிம்களின் ஆண்டு 1355 என்பது மன்னர்களின் ஆண்டு 2535 ஆக ஒரே இரவில் மாறியது.[63]
1970ல் கிடைத்த பெரும் எண்ணெய் வள செல்வத்தால் அஞ்சத் தக்க வகையில் பணவீக்கம் அதிகரித்தது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகமாகியது[64]. ஈரானியர்களுக்கு அங்கிருந்த ஏராளமான திறமிகு வெளிநாட்டவர்கள்மீது வெறுப்பு கூடியது. எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதி சா குடும்ப உறுப்பினர்களை அடைந்தது பல ஈரானியர்களை கொதிப்படைய வைத்தது. அரசுக்கு வந்த வருமானம் அதிகரித்தது ஆனால் ஈரானியர்களின் குடும்ப வருமானம் குறைந்தது. 1976ல் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சா வுக்கு எண்ணெய் வருமானம் இருந்தது. அவர் குடும்ப அறக்கட்டளைக்குத் தோராயமாக மூன்று பில்லியன் டாலர் இருந்தது[65]. 1977ன் நடுப்பகுதியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கொணர்ந்த பொருளாதார சிக்கன நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான ஏழைகளும் நகர கட்டுமானத்துறையில் வேலை செய்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பண்பாடு, மத முறையில் பழமைவாதிக்களான[66] பலர் புரட்சியின் முதன்மை போராளிகளாக விளங்கினர்.[67]
அனைத்து அரசியல் கட்சிகளும் தடைசெய்யப்பட்டு இராச்டக்கிச்சு கட்சி மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இக்கட்சியில் அனைவரும் சேரவும் உறுப்பினர் கட்டணம் செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்[68]. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும் லாபமீட்டுவதற்கு எதிரான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வணிகர்கள் சிறையிலடைக்கப்பட்டனர் அபராதம் விதிக்கப்பட்டனர், இது வணிகர்களைக் கோபமடையச் செய்து அவர்களை அரசியலுக்கு இழுத்தது மேலும் கள்ளச்சந்தைக்கு வளர இந்நடவடிக்கை வித்திட்டது.[69]
1977ல் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு அரசியலில் சரியானது எது என்பதை நினைவூட்டும் விதமாகச் சா பல கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிச் செஞ்சிலுவை அமைப்பு சிறைச்சாலைக்குச் செல்ல அனுமதி வழங்கினார். அவ்வாண்டு பழமைவாதி அல்லாத இசுலாமிய தலைவர் அல் சரியடி இறந்தார். இது அவரது ஆதரவாளர்களைக் கோபமடையச்செய்தது. கோமெய்னிக்கு போட்டியாகக் கருதப்பட்ட இவர் ஈரானின் உளவுப்படையால் சாகடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. அக்டோபர் மாதம் கோமெய்னியின் மகன் முசுதபா நெஞ்சு வலியால் இறந்தார். அவரது இறப்புக்கு ஈரானின் உளவுப்படை மீது பழிசுமத்தப்பட்டது. தெக்ரானில் நடந்த அவரது இறுதி ஊர்வலத்தின்போது கோமெய்னி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார்.[70][71]
1977ல் சா அரசு அரசியலில் கெடுபிடிகளைத் தளர்த்தியதால் உளவுத்துறையின் கண்காணிப்பு குறைந்திருந்தது. பத்தாண்டுகளில் முதல்முறையாக எதிர்க்கட்சிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கூட முடிந்தது[72]. இடது சாரி அறிஞர் சையது சுல்டான்புர் (பின்னாளில் இசுலாமிய குடியரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்) தலைமையில் ஈரானிய எழுத்தாளர்கள் தெக்ரானில் பத்து நாட்கள் கூடி சா அரசுக்கு எதிராகக் கவிதைகள் படித்து எதிர்ப்பு [73] தெரிவித்தனர். இக்கூட்டத்துக்கு 2,000 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்தும் 10,000 பேர் அரங்கில் நுழைய முயன்றனர் அவர்களில் பலரை கலவர தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர் [23][74].
அலி சரியடி இங்கிலாந்தில் மரணமடைந்தது அறிந்ததும் 10,000க்கும் மேற்பட்டோர் கூடி சா ஆட்சியே இவரின் மரணத்துக்குக் காரணமெனப் பழிசுமத்தினர். 1977ன் இறுதியில் அயத்தோலா கோமெய்னியின் மகன் முசுதபா ஈராக்கில் மகிழுந்து விபத்தில் இறந்தார். அவரைக் கோமெய்னி தியாகியென அறிவித்தார். இவரின் இறுதி ஊர்வலம் இறுதியில் அரசியல் ஊர்வலமாக மாறியது. இதன்போதே பல ஈரானியர்கள் கோமெய்னியை நன்கு அறிந்தனர்.
அரசுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள்மூலம் கோமெய்னியின் புகழ் பெரிதும் பரவியது. இவரது செயல்களால் கோபமுற்ற சா 1978 சனவரி அன்று ஈரானிய செய்தித்தாளில் கோமெய்னி பிரித்தானியாவின் தரகர் என்றும் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் நாட்டை வெளிநாடுகளிடம் கையளித்துவிடுவார் என்றும் வேறு பெயரில் குற்றம் சுமத்தி எழுதினார்[75][76]. கோமெய்னியின் ஆதரவாளர்கள் குவோம் நகரில் அவருக்கு இழுக்கு ஏற்படுத்தியதை கண்டித்து ஊர்வலம் நடத்தினர். சில ஆதரவாளர்கள் நகரில் இசுலாமில் தடைசெய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் கடைகளையும் தீயிட்டு அழித்தனர் [77]. கலவர தடுப்பு காவல் துறையினருக்கும் கலகக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இரண்டு காவல்துறையினரும் ஆறு போராட்டக்காரர்களும் இறந்தனர். கோமெய்னி 70 போராட்டக்காரர்கள் தியாகி ஆனதாக அறிவித்தார்.[78][79]
அரசால் சியா மதகுருமார்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று அயத்தோலா சரியட்மடரி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். அதனால் அவரின் வீட்டை அரசு படையினர் தாக்கினர் அதில் அவரின் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக அயத்தோலா அரசு எதிர்பாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் முனைப்பாகப் பங்காற்றினார். எனினும் இவருக்கு எதிர்கால ஈரான் பற்றிய கோமெய்னியின் பார்வை குறித்து அச்சம் இருந்தது.
குவோம் நகர போராட்டத்தில் இறந்தவர்களுக்காக 40ம் நாள் நடந்த நினைவில் பெரும் ஊர்வலம் நடந்தது. பள்ளிவாசல்களில் இறந்தவர்களை ஆதரிக்கும்படியும் சா வை எதிர்க்கும்படியும் கூறப்பட்டது. பிப்ரவரி 18ல் பல நகரங்களில் போராட்டக்காரர்கள் சா வை எதிர்த்தும் கோமெய்னியை ஆதரித்தும் போராடினர்[80]. தபிரிச்சு என்ற நகரில் நடந்த கலவரத்தில் ஒரு போராட்டக்காரர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 நாட்கள் கலவரம் தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்சூட்டில் 16 போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கோமெய்னி நூறு பேர் தியாகிகள் ஆனதாக அறிவித்தார்.
போராட்டம் சா வுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் அவரின் உறுதியற்ற நடவடிக்கைகள் சிக்கலை அதிகப்படுத்தியது. மதவாதிகள், முற்போக்காளர்கள், மதசார்பற்றவர்கள் இணைந்து போராடினாலும் போராட்டம் இன்னும் விளிம்பு நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டது அரசுக்குத் தெம்பை அளித்தது. பெரும்பாலான ஈரானியர்கள் அரசியல் சார்பற்றவர்கள் என்றும் சா அரசை ஆதரிப்பவர்கள் என்றும் நம்பப்பட்டது. தபிரிச்சு நகரில் நடந்த கலவரத்தால் சா வுக்கு ஆதரவு கூடியது. தபிரிச்சு நகரில் சில ஈரானியர்கள் சா அரசுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர்.
அரசு ஆசை காட்டி மோசம் செய்வது என்ற உத்தியைப் போராட்டக்காரர்களிடம் கடைபிடித்தது. தெரு போராட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும் சா போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். போராட்டக்காரர்கள்மீது காவல்துறை உயிரைப் பறிக்கும் எந்தக் கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். முற்போக்குத்தனம் உடைய மத தலைவர்களைத் தன்னை ஆதரிக்குமாறு கோரினார். சரியட்மடரி இல்லத்தில் நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார். கைது செய்யப்படவேண்டியவர்கள் என்று 2,000 பேர் அடங்கிய பட்டியலை ஈரானிய உளவுத்துறை அளித்ததில் [76] சிலரை மட்டும் கைது செய்யச்சொல்லி அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்காமல் குடிசார் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டார் [80]. தபிரிச்சு நகரில் கவனக்குறைவாக இருந்த அனைத்து உளவு & பாதுகாப்பு துறையினரை பணியிடை நீக்கம் செய்தார்.[77][81]
முற்போக்கு கொள்கை உடைய மதவாதிகள் கோமெய்னியின் இயக்கத்தால் அச்சமுற்றார்கள். அவர்களை அரவணைக்கச் சா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை[23][72][75][76][77]. போராட்டக்காரர்களுடன் இணக்கம் காண முற்பட்ட அரசின் செயல்களால் அரசின் ஆதரவாளர்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்தார்கள் போராட்டக்காரர்கள் மேலும் நம்பிக்கை பெற்றார்கள். சா தன் ஆதரவாளர்களை ஒன்றுபடுத்தத் தவறினார்.[75]
மே 10 அன்று யாட்சு நகரில் இறந்தவர்களின் 40ம் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு காவல் துறையினரும் மோதியதில் 27 பேர் இறந்ததாகப் போராட்டக்காரர்கள் கூறினர்[72][74]. எனினும் அரசு, காவல் துறையினர் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தடை உள்ளதாகவும் மகிழுந்து விபத்தில் இறந்து பிணவறையில் உள்ளவர்களைக் காவல்துறையால் சுடப்பட்டு இறந்ததாகப் போராட்டக்காரர்கள் நம்புவதாகக் கூறியது[72][77]. பெரும்பாலான ஈரானியர்கள் அரசியல் சார்பு அற்றவர்களாகவோ தனது ஆதரவாளர்களாவோ இருப்பதாகச் சா கூறினார்.[82]
போராட்டத்தில் இறப்பைக் குறைக்கும் வகையிலும் கோமெய்னியின் கடும் போக்கை மட்டுபடுத்தும் விதமாகவும் சரியட்மடரி சூன் 17 அன்று மட்டும் அனைவரும் போராட அழைப்பு விடுத்தார்[83]. நிதான கொள்கையுடைய போராட்டக்காரர்களின் கோரிக்கைக்காகச் சா ஈரானினின் உளவு பாதுகாப்பு துறையின் தலைவரை நீக்கி அதற்குப் புதிய தலைவரை நியமித்தார். பிரதமர் ஜாம்சிட் அமுசிகரை சீர்திருத்தை கொண்டு வரப் பணித்ததோடு விலை கட்டுப்பாட்டு முறையை நீக்கினார். சா எவ்வித இடையூரும் இல்லாமல் தேர்தல் நடைபெறும் என்றும் அடுத்த சூனில் முழுமையான மக்களாட்சி ஈரானில் உண்டாகுமென்றார். தணிக்கை முறையை நீக்கி உத்தரவிட்டார் [72][80][84]. போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே இறுக்கமான நிலை இருந்தாலும் சா வின் உத்தி பலித்தது. மக்கள் கோமெய்னிக்கு பதிலாகச் சரியட்மடரி அவர்களின் பேச்சைக் கேட்டனர். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ புரட்சி நடக்காது என்றும் புரட்சிக்கு முந்தைய நிலை கூட இல்லை என்றும் கணித்தது [85].
இச்சமயத்தில் போராட்டத்தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான தேசிய முன்னனியைச் சேர்ந்த கரிம் சாசபி, சாப்பூர் பக்த்டியர், தாரியுச்சு ஃபோரோகர் ஆகியோர் சா ஈரானின் அரசமைப்புப்படி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவரின் அதிகார மீறல்களைக் கண்டித்தும் அவருக்குக் கடிதம் எழுதினர். இவர்களில் இருவர் புரட்சியால் உருவான இசுலாமிய குடியரசால் கொல்லப்பட்டனர்.[72][77]
ஆகத்து 19 அன்று அபடன் நகரில் ரெக்சு திரையரங்கிற்கு வேதிப்பொருட்களைக் கொண்டு தீ வைக்கப்பட்டது[86] . இதில் 422 பேர் இறந்தனர்[87]. கோமெய்னி இது சா வும் ஈரானின் உளவு & பாதுகாப்பு படைகளும் எதிர்கட்சிகள்மீது பழி சுமத்த செய்த சதி என்று குற்றம் சாட்டினார். அரசு தான் தீ வைப்புக்கு காரணமில்லை என்று மறுத்த போதும் பொதுமக்கள் இது அரசின் சதி என்று நம்பினர். தீ விபத்து போராட்டத்தைத் தீவிரமாக்கியது. திரையரங்க தீ விபத்து எதிர்கட்சிகளை ஒற்றுமைபடுத்தியது.
புரட்சிக்குப் பின் திரையரங்க தீ விபத்திற்கு இசுலாமிய அடிப்படைவாதிகள் காரணம் என்று அறியப்பட்டது [86][88][89][90][91][92] . இந்தத் தீ விபத்திற்கு காரணம் என்று காவல்துறை அதிகாரி ஒருவருக்கு இசுலாமிய குடியரசு மரண தண்டனை அளித்தது. அதை கேள்வியுற்ற உண்மையான குற்றவாளிகளில் உயிரோடு இருந்தவர் தாம் தான் தீ விபத்துக்குக் காரணமெனக் கூறினார்[93]. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டதால் பதவி விலகினர். உசைன் தலக்சாடே சா வின் உத்திரவுக்கிணங்க தீ வைத்ததாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவர் புரட்சிக்காகவே இதை செய்ததாகச் சொன்னார். கோமெய்னியே உத்தரவுப்படியே தீ வைக்கப்பட்டதாகக் கூறிய ஈரானிய நாளிதழ் மூடப்பட்டது.[94]
போராட்டம் பெரிதாகியதற்கு ரெக்சு திரையரங்க தீ விபத்தும் அரசின் புதிய பொருளாதார கொள்கையும் காரணங்களாகும். பிரதமர் அமுசகார் அதிகரித்த பணவீக்கத்தை குறைக்க அரசு செலவிடும் தொகையை வெகுவாகக் குறைத்தார். இதனால் வேலையிழப்பு ஏற்பட்டது. இவ்வேலையிழப்பினால் நாட்டுப்புறத்திலிருந்து நகருக்கு வலசைவந்த சா வின் ஆதரவாளர்களான திறன் குறைந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இருந்த போராட்டக்கார்களுடன் இணைந்து போராடியதால் போராட்டத்தை சா-வால் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது.
போராட்டத்தை நிறுத்த முடியாததாலும் தன் மற்ற தவறுகளுக்காகவும் பிரதமர் அமுசகார் பதவி விலகினார். சா முன்பு பிரதமராகப் பதவி வகித்திருந்த மதகுருமார்களோடு தொடர்புடைய ஜாபர் செரிப்-எமாமியை மீண்டும் பிரதமர் ஆக்கினார். இவர் எத்திட்டத்திற்கும் கையூட்டு பெறுபவர் என்ற பெயர் முன்பு பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இருந்தது [75][76]. சா வழிகாட்டுதலில் எமாமி எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்தார். இராச்டக்கிச்சு கட்சி கலைக்கப்பட்டது, ஈரானின் உளவு & பாதுகாப்பு படைகளின் அதிகாரம் குறைக்கப்பட்டது, பல கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டன, மன்னர்களின் ஆண்டு முறை நீக்கப்பட்டது.
போராட்டம் தீவிரமடைவதை ஒடுக்கச் செப்டம்பர் 8 அன்று சா படைத்துறை சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் தெரு போராட்டங்கள் தடைசெய்யப்பட்டன, போராட்டக்காரர்களின் குறிப்பிட்ட சில தலைவர்களைக் கைது செய்யப் படியாணை பிறப்பிக்கப்பட்டது. படைகளைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கிவிட முடியும் என்று சா நம்பினார். படைத்துறை சட்டம் நடைமுறைக்கு வந்த அறிவிப்பு மக்களைச் சென்றடையும் முன் போராட்டக்காரர்கள் தெருக்களில் தடையை அறியாமல் போராட ஆரம்பித்திருந்தனர்.[23][72][75][76][77][80][86]
தெக்ரானின் நடுவில் இருந்த சலாஹ் சதுக்கத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களைப் பீரங்கிகளுடன் இருந்த இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இராணுவத்தினரின் கலைந்து செல்லுமாறு கூறியதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. போராட்ட கூட்டத்திலிருந்து சில ஆயுததாரிகள் இராணுவத்தினரை சுட்டனர். இராணுவத்தினர் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டதில் 67 பேர் மரணமடைந்தனர்[72][76][77]. இருதரப்பும் மற்றவரே முதலில் சுட்டனர் என குற்றம்சாட்டினர்[72][72][76][76][77][81]. நாட்டின் மற்ற பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் இறந்ததை அடுத்து இறந்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 89 ஆகியது. இந்த நாள் கறுப்பு வெள்ளி என நினைவு கூறப்படுகிறது [23][72][75][76][77][80][86].
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோமெய்னி சீயோனிசியர்களால் 4000 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தார். இந்த இறப்புகள் சா அரசுக்கு எதிராக அனைத்து மக்களையும் திருப்பியது. படைத்துறை சட்டத்தை நடைமுறையில் இருந்த போதும் அரசு போராட்டத்தைத் தடைசெய்ய சிறு முயற்சியே செய்தது. இராணுவத்தையும், உளவு & பாதுகாப்பு படைகளையும் போராட்டக்காரர்களை எதிர்த்துப் போராட தடை விதித்ததால்[81] போராட்டம் மேலும் வலுப்பட்டது. இச்செயலால் சா வுக்கு ஆதரவாளர்களின் மனவுறுதி குழைந்தது [23][72][75][76][77].
பன்னாட்டு அளவில் சா அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகக் கோமெய்னி போராட்டக்காரர்களை ஒன்றுபடுத்த முயற்சியில் ஈடுபட்டார். அமெரிக்காவையும் மேற்குலகையும் போராட்டக்காரர்களின் பக்கம் கவர பல நடவடிக்கைகள் எடுத்தார். மேற்குலகின் மீதான தனது வெறுப்பை தற்காலிகமாக ஒதுக்கியது இதில் ஒரு பகுதியாகும்.[23][72][75][76][77][86]
கோமெய்னி ஈரான் மக்களாட்சி வேண்டும் என்றார் ஆனால் அது இசுலாமிய மதத்தின் படி நடக்க வேண்டும் என்றார். கோமெய்னி மதகுருமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது ஆர்வமில்லை என்று பலமுறை கூறினார்[23][72][75][76][77][86]. அவர்களுக்கு சா அவர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஈரானிய மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதே நோக்கம் என்றார். கோமெய்னியின் புத்தகங்களை ஈரான் அரசு தடை செய்திருந்ததால் பொது மக்களுக்கு அவரின் கொள்கைகளை முழுவதும் அறிய வாய்ப்பில்லாமல் போனது.
1978ன் இறுதியில் இடது சாரிகளின் ஆதரவை கோமெய்னி முழுவதுவதுமாகப் பெற்றார். ஈரானிய உளவு பாதுகாப்பு படையால் பெருமளவிலான ஆதரவாளர்களை இழந்திருந்த இடது சாரிகள் கோமெய்னியின் புகழைக்கொண்டு சா அவர்களை ஆட்சியிலிருந்து நீக்கலாம் என்று எண்ணினர்.[23][72][75][76][77][86] சிறையிலிருந்து விடுதலையானதும் தேசிய முன்னனி தலைவர் கரிம் சன்சபி பாரிசுக்கு சென்று கோமெய்னியுடன் இணைந்து கொண்டார். அங்கிருந்து அவர்கள் இருவரும் சா அவர்களை ஆட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றினர்.
சா-வின் மேற்குலக ஆதரவளார்ளின் ஆதரவை கோமெய்னி கோரினார். ஐக்கிய அமெரிக்காவுக்கும் சா-வுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. 1973 எண்ணெய் நெருக்கடியில் ஈரான் பங்கு வகித்ததால் இந்த விரிசல். கோமெய்னியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சில் இருந்ததால் மேற்குலக ஊடகங்களை அணுகவது சுலபமாக இருந்தது. அவர் தனக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசை இல்லையெனவும் சா-வின் கொடுங்கோல் ஆட்சியை நீக்குவதே குறிக்கோள் என்றும் கூறினார். தன்னை முற்போக்குவாதி என்றும் கூறிக்கொண்டார். இதனால் மேற்குலக ஊடகங்கள் இவருக்கு ஆதரவாக மாறின. மேற்குலக ஊடகங்கள் சா ஆட்சியின் மனித உரிமை மீறல்களை அடிக்கடி சொன்னதால் சா-ஆட்சிக்கு ஆதரவாக இருந்த ஜிம்மி கார்ட்டர் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஈரானிய புரட்சியே ஊடகங்களை ஆட்சிமாற்றத்துக்கு கருவியாகப் பயன்படுத்திய முதல் புரட்சியாகும் [23][72][75][76][77][86][95]. கோமெய்னி மேற்குலக ஊடகங்களை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவரது பெரும்பாலான செய்திகள் மொழிபெயர்ப்புடன் பிபிசி உள்ளிட்ட மேற்குலக ஊடகங்களால் ஈரானில் ஒலிபரப்பட்டன. ஊடகங்கள் கோமெய்னியின் போராட்டம் பலரை சென்றடைய காரணமாக இருந்தது.
அக்டோபர் 1978 லிருந்து சனவரி 1979 வரையான கால கட்டம் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இக்காலத்தில் போராட்டக்காரர்களிடையே பெருமளவிலான ஒற்றுமை நிலவியது இது போராட்டம் வேலைநிறுத்தம் போன்றவற்றில் எதிரொலித்தது. செப்டம்பர் 9 அன்று 700 தொழிலாளர்கள் தெக்ரானின் முதன்மையான எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் வேலை நிறுத்தம் செய்தனர். செப்டம்பர் 11 அன்று நாட்டின் மற்ற நகரங்களில் உள்ள ஐந்து எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்களில் வேலை நிறுத்தம் பரவியது. செப்டம்பர் 13 அன்று தெக்ரானில் உள்ள நடுவண் அரசின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் மாதத்தில் பெரும்பாலான தொழில்துறையினர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர். கறுப்பு வெள்ளியில் பலியானவர்களின் 40ம் நாள் நினைவுதினத்தில் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். அக்டோபர் கடைசியில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது, இதனால் எண்ணெய் சுத்தகரிப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களைச் சமாதானப்படுத்த சா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நிலைமை மிகவும் மோசமடைந்ததுடன் இராணுவ புரட்சி ஏற்படலாம் என்றும் அச்சம் நிலவியது. எனவே சா அவர்கள் ஜாபர் செரிப்-இமாமியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு [75][96] இராணுவம் நாட்டை ஆளும் என்று அறிவித்தார். தொலைக்காட்சியில் தோன்றி [75][76][97] தன் அரசின் குற்றங்களை மன்னிக்குமாறும் இனி அவ்வாறு நடக்காது என்றும் சா கூறினார்[95][97][98]. இராணுவ அரசு பொறுப்பேற்றவுடன் தெருப்போராட்டங்கள் நின்றன, வேலைநிறுத்தமும் முடிவுக்கு வந்தது[95][96] . இராணுவ தலைமை போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்களை சமாதானம் செய்யமுயன்றது[75][76][95][97] . பல அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்றதாக கைது செய்யப்பட்டனர். இராணுவ அரசுக்கு போராட்டத்தை முறியடிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிந்தவுடன் கோமெய்னி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்.[77][96]
இசுலாமிய மாதமான முகரத்தின் இறுதியில் அசுராவை கொண்டாட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெக்ரானின் சுதந்திர சதுக்கத்தில் கூடினர். அங்கு சா அவர்களின் ஆட்சியை நீக்கிவிட்டு, கோமெய்னியை ஈரானுக்கு தலைமையேற்க செய்ய ஈரானியர்கள் போராட வேண்டுமென்று போராட்டக்காரர்களால் கூறப்பட்டது[99][100]. சில வாரங்கள் கழித்து ஈரானில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதுவே ஈரானில் அதிக மக்கள் கலந்து கொண்ட போராட்டமாகும்[101]. 1978ன் இறுதியில் சா பழமைவாதிகள் அல்லாத பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களைப் பிரதமராகும் படி கேட்டார். சாப்பர் பக்டியர் அவர்கள் பிரதமராக ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொண்டதால் அவர் எதிர்கட்சிகளின் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1979 சனவரி 16 அன்று சா அவர்களும் இராணியும் ஈரானை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறியதும் பல்வீ அரசமரபை நினைவுபடுத்தும் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன [102]. பக்டியர் ஈரானின் உளவு பாதுகாப்பு படையைக் கலைக்கவும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கவும் உத்தரவிட்டார். இராணுவம் போராட்டங்களையும் ஊர்வலத்தையும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. புதிய தேர்தல் நடைபெறுமென உறுதியளிக்கப்பட்டது, கோமெய்னியும் மற்ற புரட்சியாளர்களும் தேசிய ஒற்றுமை அரசு அமைக்கக் கோரப்பட்டது[103]. ஈரானுக்கு 1979 பிப்ரவரி 1-ல் ஏர் பிரான்சின் போயிங் வானூர்தியில் தெக்ரானுக்கு வந்த [104] கோமெய்னியிடம் குவோம் நகரில் வாட்டிகன் போல் அரசை உருவாக்கக் கேட்கப்பட்டது. புரட்சியாளர்களிடம் அரசியலமைப்பை பாதுகாக்க உதவ கோரிக்கைவிடப்பட்டது.
கோமெய்னி பக்டியர் அவர்களின் அரசைக் கடுமையாக விமர்சித்தார். மக்களாட்சியையும் மனித உரிமையையும் ஆதரிக்கும் மெகதி பகர்சன் புதிய பிரதமராகப் பிப்ரவரி 4 அன்று கோமெய்னியால் அறிவிக்கப்பட்டார்[105] . ஈரான் கோமெய்னியின் முழு ஆளுகைக்கு வந்ததை அறிந்த படைவீரர்கள் சிலர் அவர் அணியில் இணைந்தனர். மன்னரின் ஆதரவு படைகளுக்கும் கோமெய்னி ஆதரவு வீரர்களுக்கும் சண்டை நடந்தது. பிப்ரவரி 11 அன்று தலைமை இராணுவ ஆணையகம் இந்த அரசியல் சண்டையில் தலையிடாமல் நடுநிலை வகிப்பது என்ற எடுத்த முடிவால் சா ஆட்சி முடிவுக்கு வந்தது[106][107].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.