கர்நாடக அருங்காட்சியகம், அரண்மனை From Wikipedia, the free encyclopedia
அரசு அருங்காட்சியகம் (சிவப்ப நாயக்கர் அரண்மனை) 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெலாடி நாயக்க வம்சத்தின் பிரபலமான மன்னரான சிவப்ப நாயக்கர் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும்.
இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமோகா மாவட்டத்தின் தலைமையகமான ஷிவமோகா நகரில் (முன்பு இவ்வூர் ஷிமோகா என்று அழைக்கப்பட்டது) அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு நாயக்க மன்னரின் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், கலை வரலாற்றாசிரியர் ஜார்ஜ் மைக்கேலின் கூற்றுப்படி, இந்த அரண்மனை பங்களா உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஹைதர் அலியால் கட்டப்பட்டது . இரண்டு மாடி கட்டிடத்தில் ஒரு தர்பார் மண்டபம் அமைந்துள்ளது. அது "நோபல் கோர்ட்" எனவும் அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பெரிய மரத் தூண்கள் மற்றும் அலங்கார வளைவுகள் போன்றவை அமைந்துள்ளன. பக்கங்களிலும் வாழும் அறைகள் உள்ளன. மேல் மட்டத்தில் உள்ள பால்கனி அமைப்புடன் மண்டபத்திற்குள் கூடமும் அமைந்துள்ளது. அருகேயுள்ள பகுதிகளிலுள்ள கோயில்கள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஏராளமான தொல்பொருட்கள், ஹொய்சாலா காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் நடு கற்கள் மற்றும் பிற்காலத்தைச் சேர்ந்தவையும் அரண்மனை மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
இந்த கட்டிடம் கர்நாடக மாநிலத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வின் பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது.[2]
பத்ராவதி, குருபுரா, பள்ளிகேவ், சளுரு, பசவப்பட்டினா, ஷிகரிபுரா, பருரு, பெலகுட்டி, கல்குரே போன்ற ஷிமோகாவைச் சுற்றி அமைந்துள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களும், அருகிலிள்ள கோயிலிருந்து கொணரப்பட்ட பொருள்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் ஷிமோகாவைச் சுற்றி அமைந்துள்ள நகரங்களாகும். ஹரப்பா, மொகஞ்சாதாரோ கலை அமைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள கலைப்பொருள்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பல அரிய பொருள்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு வரலாற்றுக் கால ஓலைச்சுவடிகள் அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில் மகாபாரதம், ராமாயணம், குமார விசயரின் பாரதம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகளும், பிரபலமான பொருண்மைகளில் அமைந்துள்ள பிற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த காசுகள், படைக் கருவிகள், அரச முத்திரைகள் காணப்படுகின்றன. மேலும் அரச வம்சத்தினரின் பரம்பரையினர் பயன்படுத்தி வந்த பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கேளடி மன்னர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வில்கள், கத்தி, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் காணப்படுகின்றன. ஹோய்சல மன்னர்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட பல வகையான அரிய வகைக் கற்களும் இங்கு காட்சியில் உள்ளன. சிவப்ப நாயக்கர் சிஷ்டின சிவப்ப நாயக்கர் என்றழைக்கப்படுகிறார். அதற்கான ஒரு காரணமும் உண்டு. அவர் சிஸ்ட் எனப்படுகின்ற ஒரு வரியை விதித்ததால் அதனை நினைவுகூறும் வகையில் அவர் அவ்வாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளார். விரைவில் இந்த அருங்காட்சியகம் ஒரு தனித்த சிறப்பான இடத்தை ராக்கெட்டுகளின் மூலமாகப் பெறவுள்ளது. உலகில் முதன்முதலாக இந்த அருங்காட்சியகத்தில் 150க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவை பல்வேறு வகைகளைச் சார்ந்தவையாக அமைந்திருக்கும். நகரா என்னுமிடத்தில் உள்ள நகராஜா ராவ் பண்ணையில் நூற்றாண்டு கால குளத்தினை வெட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த பொருள்கள் கிடைத்துள்ளன.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.