வாள்
From Wikipedia, the free encyclopedia
வாள் (ஒலிப்புⓘ) (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. வாள் போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளன. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முதன்மையாக வாள் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதுமான வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
வரலாற்றியலாக, வாள் வெண்கலக் காலத்தில் குத்துவாளில் இருந்து தோன்றியது; மிகப் பழைய வெண்கலக்கால வாள் கி.மு 1600 அளவில் கிடைத்துள்ளது. பிந்தைய இரும்புக் கால வாள் மிகவும் குறுகியதாகவும் பிடியில் குறுக்குக் காப்பு இல்லாமல் அமைந்தது.
வாளைப் பயன்படுத்தும் தேர்ச்சி வாள்போர்க் கலை எனப்பட்டது. தொடக்க புத்தியல் காலத்தில் மேலைநாட்டு வாள் வடிவமைப்பு குத்துவாள், போர்வாள் என இரண்டு வடிவங்களாகப் பிரிந்தது.
உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் நேராக நீண்ட மெல்லிய சமனிலை வடிவமைப்பு இரட்டையர் போரில் அச்சமூட்டுவதக இருந்தது. ஆனால் வெட்டுவதிலும் தறிப்பதிலும் மிக பயனற்றதாக இருந்தது. குறிபார்த்து மேற்கொள்ளுக் குத்து போரை நொடிகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.
பட்டா(ள)க் கத்தியும் அகல்குறுவாளும் போன்ற வளைந்த அலகுகள் கொண்ட வாட்கள் போரிடுவதற்காக மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டன. இவை பல பகைவரைக் குதிரை மேலிருந்து வெட்டவும் தலைகளைச் சீவவும் ஏற்றவை. பட்டளக் கத்தியின் வளைந்த அலகின் முனைப்புற எடை போர்க்களத்தில் சமனிலையோடு அச்சமூட்டும் போர்நிகழ்த்த வழிவகுத்தன. இவை கூரிய முனையும் இருபுற வெட்டுவிளிம்பும் கொண்டவை. இவை காலாட்படையில் ஒவ்வொரு வீரராக்க் குடலை ஊடுறுவிச் சாய்க்க பொருத்தமாக அமைந்தன. எனவே இவை 20 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் விளங்கின. அமெரிக்க நாவாய்ப்படை இரண்டாம் உலகப்போர் வரை தன் படைக் கொட்டடையில் இவ்வகை அகல்குறு வாள்களைக் குவித்து வைத்திருந்தது. பின்னர் அவை காடுதிருத்த வழங்கப்பட்டன.
ஐரோப்பாவுக்கு வெளியே வாள்களாக நடுவண்கிழக்குப் பகுதியின் சுசிமிதார் ச்னாவின் தாவோ யப்பானியக் கடானா அகியவை அமைகின்றன. சீனாவின் யியான் இருகூர் விளிம்பு வாளாகும். இது ஐரோப்பிய இரும்ப்புக் கால இருகூர்விளிம்பு கொண்ட வாளாகும்.