வரைவிலக்கணம் என்பது ஒரு சொல் அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு கூற்று ஆகும்.

வரைவிலக்கண வகைகள்

வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும்.

  1. விளக்க வரைவிலக்கணம் (descriptive definition): இது ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குரிய பொதுவான பொருளை விளக்குவது ஆகும்.
  2. எடுபொருள் வரைவிலக்கணம் (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.

வழக்கு நிலையுடன் ஒப்பிட்டு ஒரு விளக்க வரைவிலக்கணம் சரி அல்லது பிழை எனக் காட்ட முடியும். ஆனால் எடுபொருள் வரைவிலக்கணம் அதனைக் கொடுப்பவரின் தேவைக்கானது என்பதால் அது பிழை, சரி என்பது கிடையாது.

துல்லியமாக்கல் வரைவிலக்கணம்

இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது துல்லியமாக்கல் வரைவிலக்கணம் (precising definition) எனப்படுகின்றது.

இணக்கமுறை வரவிலக்கணம்

சி. எல். ஸ்டீவன்சன் என்பவர் இணக்க முறை வரவிலக்கணம் (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் சட்டமுறை அல்லது கட்டாயமானவை என்கிறார். இவை, உரிமைகள், கடமைகள், குற்றங்கள் போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன.

பிழிவு

செந்நெறிக்காலச் சிந்தனையில் ஒரு வரைவிலக்கணம் என்பது ஒரு பொருளின் பிழிவைக் கொடுக்கும் ஒரு கூற்று என எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பொருளின் அடிப்படையான பண்புக்கூறுகளே அதன் அடிப்படை இயல்புகளை உருவாக்குகின்றன. ஆகவே ஒரு பொருளின் வரைவிலக்கணம் இந்த அடிப்படையான பண்புக்கூறுகளை உட்படுத்தி இருக்கவேண்டும் என்றார் அரிஸ்ட்டாட்டில்.[1]

பெயரளவுப் பிழிவு, உண்மைப் பிழிவு

வரைவிலக்கணம் ஒரு பொருளின் அடிப்படையான பிழிவைக் குறிக்கும் கூற்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், பெயரளவுப் பிழிவு (nominal essence), உண்மைப் பிழிவு (real essence) என்ற வேறுபாட்டுக்கு வித்திட்டது.

இதையும் அரிஸ்ட்டாட்டிலே தொடக்கி வைத்தார். உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பொருளை, அச் சொல் குறிக்கும் பொருளின் அடிப்படை இயல்புகளை அறிந்து கொள்ளாமலேயே, நாம் அறிந்து கொள்ளலாம் என்று, போஸ்ட்டீரியர் அனாலிஸ்ட்டிக் (Posterior Analytics) என்னும் அவரது உரையிலுள்ள ஒரு பத்தியில் அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார். இது மத்தியகாலத் தருக்க அறிஞர், பெயரின் என்ன தன்மை க்கும், அப்பெயர் குறிக்கும் பொருளின் எல்லாப் பொருட்களிலும் காணும் அடிப்படை இயல்பைக் குறிக்கும் பொருளின் என்ன தன்மை என்பதற்கும் இடையில் வேறுபாடு கண்டதில் முடிந்தது.

உண்மை வரைவிலக்கணம்

இது, பெயரளவு வரைவிலக்கணம், உண்மை வரைவிலக்கணம் என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பதற்கு வழி சமைத்தது. பெயரளவு வரைவிலக்கணம் என்பது சொல் எப்பொருள் குறிக்கிறது என்பதை விளக்குவதாகும். ஆனால், உண்மை வரைவிலக்கணம் அச் சொல் குறிக்கும் பொருளின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவது ஆகும்.

குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு

இந்தப் பிழிவு தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் பகுத்தாய்வு மெய்யியல், ஒரு பொருளின் பிழிவை விளக்கும் முயற்சியை விமர்சித்தது. ரஸ்ஸல் என்பார் இதை "சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு" என்று விமர்சித்தார்.

இருக்கக்கூடிய உலகம்

மிக அண்மைக் காலத்தில் கிரிப்கேயின் இருக்கக்கூடிய உலகச் (possible world) சூழ்பொருளியல் முறைப்படுத்தல் essentialism தொடர்பான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிகாட்டியது. இதன்படி, ஒரு பொருளுக்குரிய அடிப்படையான இயல்புகள் அதற்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அவ்வியல்புகளையே அப்பொருள் எல்லா "இருக்கக்கூடிய உலக"ங்களிலும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.