இராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இராஜிவ் காந்தி தவிர குறைந்தது 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.[1]. இத்தாக்குதல் தேன்மொழி இராசரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.

Thumb
இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஓவியம்

படுகொலை விவரம்

ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராசரத்தினம் எனும் தனு என்ற மனிதப்பெண் வெடிகுண்டால் தாக்குதல் நடத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்[2].அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி, மற்றும் பதினான்கு பேர் அந்த மனித குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Thumb
இராசுவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடந்து சென்ற பாதை

பாதுகாப்புக் குறைபாடு:

உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைபுலிகளின் முடிவை அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவேன் என்று 21-28 ஆகஸ்டு 1990, சன்டே (Sunday) இதழின் பதிப்பில் அவரது பேட்டியில் கூறியதே காரணம் என்றது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பீஸ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

ஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தன என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது[3].

நரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் எடுக்கப்படவில்லை.

புலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச் 1991 அன்றும் 14 மார்ச் 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருந்தார்[4].

பாதிக்கப்பட்டவர்கள்

1991 மே 21 அன்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரி தேன்மொழி இராசரத்தினம் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்:[5]

  • ராஜீவ் காந்தி: முன்னாள் பிரதமர்
  • தர்மன்: காவலர்
  • சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர்
  • ராஜகுரு: காவல் ஆய்வாளர்
  • சந்திரா: மகளிர் காவலர்
  • எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர்
  • கே. எசு முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர்.
  • லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்
  • டேனியல் பீட்டர்: பார்வையாளர்.
  • கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள்.
  • லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர்
  • சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவர்
  • பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர்
  • எத்திராஜூ
  • முருகன்: காவலர்
  • ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர்

மேலும் காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர்.[5][6]

புலனாய்வு

படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. இதன் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக கே. இராகோத்தமன் செயல்பட்டார்.

படுகொலைக்கு காரணமானவர்கள்

இராசீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமானவர், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராசரத்தினம் எனும் தனு எனும் காயத்ரி ஆவார். இச்சதிக்கு தலைமை தாங்கியவர் சிவராசன் எனும் ஒற்றைக் கண் சிவராசன் ஆவார். சிவராசனுக்கு உதவியாக இருந்தவர் சுபா எனும் பெண். இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர் ஆவார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்திய உச்ச நீதிமன்றம், இராசீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது. தீர்ப்பு மேலும் அக்டோபர் 1987 இல் ஒரு கப்பலில் 12 புலிகளின் தற்கொலைகளையும் , ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் திலீபன் என்பவரின் மரணத்தையும் குறிப்பிடுகிறது. இச்சம்பவம் இராசீவ் காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்கு சான்று இல்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும் இது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாக தெரியவில்லை என்று கூறி இது ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று கூறியது.[7] [8]

விசாரணை

விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. சென்னையில் நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது.[9] மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன[10][11]. இராசீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்[12]. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.[13]

முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆகத்து 30, 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராசீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.[14] மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.[15]

பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை

இராசீவ் காந்தி படுகொலை குறித்து விசாரணை செய்த செயின் ஆணையத்தின் பரிந்துரையின் படி, இராசீவ் காந்தி படுகொலையில் இருந்ததாக கருதப்படும் பெரிய அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சதித் திட்டங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு இந்திய அரசால் திசம்பர், 1998-ஆம் ஆண்டில் பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை நிறுவப்பட்டது. இந்த விசாரணை முகமையில் இந்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, ரா, இந்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.[16]

நினைவிடம்

Thumb
மனித வாழ்வின் நெறி கொண்ட ஏழு தூண்கள், இராசீவ் காந்தி நினைவிடம்

இராஜீவ் காந்தி நினைவகம் அவ்விடத்தில் கட்டப்பட்டு இன்று சிறு தொழில் நகரமான திருப்பெரும்புதூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.

"மிசன் 90 டேஸ்" (Mission 90 Days) என்ற திரைப்படம் இச்சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது. த டெரரிசுட்டு என்னும் படம் இந்த படுகொலை சம்பந்தமான கதையோட்டம் கொண்டது.

இதனையும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.