கடைசி சோழ மன்னர் From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக பொ.ஊ. 1246-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனது பட்டத்து உரிமை ஏற்கப்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு அவனது தந்தையான மூன்றாம் இராஜராஜ சோழன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது. பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது;
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34-ஆம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7-ஆம் ஆண்டில் பொ.ஊ. 1253-இல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் பொ.ஊ. 1246-இலேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம்.
சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15-ஆம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.
இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம்.
எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் பொ.ஊ. 1251-இல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும்.
மூன்றாம் ராஜேந்திர சோழன்
"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.
முதலாம் பாண்டிய போர்
தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயற்குணங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டனின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்கொண்டான்.
ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும்படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்த துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.
போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்
வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சோமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சோமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சோமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.
தெலுங்கு சோழர்களுடன் நட்பு
மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விஸ்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.
தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழனிடத்தே நெருங்கிய அன்பு கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கற்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.
போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை
குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசளனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசளன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசளனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.
பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்
பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37-ஆம் ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆக, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திரன் மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சோமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.