ஒளிப்படம் (Photograph) என்பது, பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற ஒளியினால், ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அப்பொருளின் ஒளியுருவை அல்லது தெறியுருவை அல்லது விம்பத்தைப் பதிவித்த படத்தைக் குறிக்கும். இது புகைப்படம் அல்லது நிழற்படம் ஆகிய சொற்களாலும் குறிப்பிடப்பிடப் படுகின்றது. மேற்குறித்த ஒளியுணர் மேற்பரப்பு வேதிப்பொருள்களால் பூசப்பட்ட ஒளிப்படத் தகடாகவோ, ஒளியால் தூண்டப்பெறும் மின்ம உணரியாகவோ இருக்கலாம். பெரும்பாலான ஒளிப்படங்கள், சிறு பெட்டி போன்ற ஒளிப்படக் கருவிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒளிப்படக் கருவியின் ஆங்கிலச் சொல்லான camera என்பதன் பொருள் (சிறு) அறை (பெட்டி) என்பதாகும். ஒளிப்படக் கருவிகள் ஒரு காட்சியிலிருந்து வரும் ஒளியை வில்லைகள் மூலம் குவித்து ஒளியுணர் மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலம் அக்காட்சியின் ஒளிப்படத் தெறியுருவை உருவாக்குகின்றன. இது பின்னர் பல்வேறு வழிமுறைகளின் வழியே தாள், அட்டை அல்லது வேறு பொருட்களில் நிலைத்து இருக்குமாறு பதிக்கப்படுகின்றன. பழங்காலங்களில் ரசாயனம் முதலான புகையினால் உருவாக்கப்பட்ட படங்களானதால் தான் 'புகைப்படம்' என்ற பெயரே பெற்றது.[1][2][3]

Thumb
தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஒளிப்படம். 1825 ஆம் ஆண்டில் நிசிபோர் நியெப்சால் எடுக்கப்பட்டது. படத்தில் 17 ஆம் நூற்றாடைச் சேர்ந்த ஓவியம் காணப்படுகிறது.
Thumb
சாளரத்தினூடாகத் தெரியும் ஒரு காட்சி 1826 ஆம் ஆண்டில் எடுக்கபட்ட ஒரு ஒளிப்படம். இயற்கைக் காட்சியொன்றைக் காட்டும் முதல் ஒளிப்படம் இதுவே எனக் கருதப்படுகின்றது.

வரலாறு

நிலைத்து இருக்கக்கூடிய முதல் ஒளிப்படம் 1825 ஆம் ஆண்டில் பிரான்சியக் கண்டுபிடிப்பாளரான யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1724 ஆம் ஆண்டில், வெள்ளித் தூளும், சுண்ணத் தூளும் கலந்த கலவை, ஒளி படும்போது கரு நிறமாக மாறுகின்றது என்ற யோகான் ஐன்றிச் சூல்ட்சு (Johann Heinrich Schultz) என்பவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒளிப்படம் உருவாக்கப்பட்டது. நியெப்சும், லூயிசு டாகுவேரே (Louis Daguerre) என்பவரும் இதனை மேலும் மேம்படுத்தினர். டாகுவரே, முதலில் ஒளி படவிடுவதற்கு முன்னர் வெள்ளியை அயடீன் ஆவியில் காட்டிப் பின்னர் ஒளி படவிட்ட பின்னர் பாதரச ஆவியில் காட்டினார். இதைப் பின்னர் உப்புநீர்த் தொட்டியில் இடுவதன் மூலம் தெறியுரு படமாக நிலையானது. இதிலிருந்தே டாகுவேரியோவகை எனப்படும் ஒளிப்பட வகை உருவானது.

டாகுவேரியோவகை ஒளிப்பட முறையில் பல சிக்கல்களும் இடர்களும் இருந்தன. குறிப்பாக, இதன் மூலம் ஒளிப்படத்தின் ஒரேயொரு படியை மட்டுமே உருவாக்க முடிந்தது. அதிலிருந்து பல படிகளை உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை. வேறு மேம்பட்ட முறைகளை உருவாக்குவதற்குப் பலர் முயன்று வந்தனர். இவர்களால் உருவாக்கப்பட்ட பல வழிமுறைகள் குறுகிய காலங்களுக்குப் பயன்படுத்தபட்டன. 1848 ஆம் ஆண்டில் கொலோடியன் முறை எனப்படும் முறை அறிமுகமானது. இது கொலோடியன் எனப்படும் கரைசல் பூசிய கண்ணாடித் தகட்டை ஒளியுணர் மேற்பரப்பாகக் கொண்டது. இதில் உருவாக்கப்பட்ட எதிர்மறைத் தெறியுருவிலிருந்து வேறு தாள்களில் பல படிகளை எடுக்க முடிந்தது. 1871ல் இதிலும் மேம்பட்ட ஊன்பசை முறை (gelatin process) அறிமுகமானது. எனினும், கொலோடியன் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவந்தது. இன்று வரை பயன்பாட்டில் உள்ள கறுப்பு வெள்ளை ஒளிப்படங்கள் முன் குறிப்பிட்ட ஊன்பசை முறையை அடிப்படையாகக் கொண்டனவே. ஒளி பதிவாகும் தகட்டை உருவாக்கப் பயன்படுத்திய பொருட்கள் மாறினவேயன்றி அடிப்படைகளில் அதிக மாற்றம் ஏற்படவில்லை.

பல நிற ஒளிப்படங்களை உருவாக்கும் முயற்சிகளும் கறுப்பு வெள்ளைப் படங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் போலவே மிகவும் பழையன. எனினும் 1903 ஆம் ஆண்டுக்குப் பின்னரே நிற ஒளிப்படங்கள் ஓரளவு நடைமுறைக்கு வந்தன.

வகைகள்

தற்காலத்தில் ஒளிப்பட முறைகள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பொது ஒளிப்பட முறை. மற்றது எண்மிய ஒளிப்பட முறை.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.