நோபல் பரிசு
From Wikipedia, the free encyclopedia
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
நோபல் பரிசு The Nobel Prize | |
---|---|
விளக்கம் | இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு. |
நாடு | சுவீடன் நோர்வே (அமைதிப் பரிசு மட்டும்) |
வழங்குபவர் | சுவீடன் அக்காதமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரொலீன்ஸ்கா கல்விநிலையம், நோர்வே நோபல் குழு |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | nobelprize.org |
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.
பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.