கத்தோலிக்கத் திருச்சபையின் 264வது திருத்தந்தையும் (1978-2005) புனிதரும் From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope St. John Paul II),[1] (இலத்தீன்: Ioannes Paulus PP. II - யோவான்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) | |
---|---|
264ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 16 அக்டோபர் 1978 |
ஆட்சி முடிவு | 2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்) |
முன்னிருந்தவர் | திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் |
பின்வந்தவர் | திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1 நவம்பர் 1946 ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 28 செப்டெம்பர் 1958 இகுனுஸ் பாசிக்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 26 ஜூன் 1967 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | கரோல் யோசேப் வொய்த்திவா |
பிறப்பு | 18 மே 1920 |
இறப்பு | 2 ஏப்ரல் 2005 84) | (அகவை
குடியுரிமை | போலந்து நாட்டவர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
கையொப்பம் | |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 22 அக்டோபர் |
ஏற்கும் சபை | கத்தோலிக்கம் |
பகுப்பு | திருத்தந்தை |
முத்திப்பேறு | 1 மே 2011 புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல் |
புனிதர் பட்டம் | 27 ஏப்ரல் 2014 புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் திருத்தந்தை பிரான்சிசு-ஆல் |
பாதுகாவல் | உலக இளையோர் நாள் |
அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6]. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7] தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.[9]
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர் இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.[10][11].
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தா ரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது.[12] இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.[13]
2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது.
இரு திருத்தந்தையர்களுக்கும் புனிதர் பட்டம் 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் வழங்கப்பட்டது.[14] இந்த நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது.[15][16]
இரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும்.
புனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள், 2014, ஏப்பிரல் 14, ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் "இறை இரக்க ஞாயிறு" என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல்.[17][18]
புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிசு, தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றிய இரு புதிய புனிதர்களான திருத்தந்தையரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் கடவுளின் இரக்கத்தை வலியுறுத்தினார்கள் என்று அவர் கூறினார். திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார்."[19]
திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய புனிதர் பட்டமளிப்பு விழாவில் அவரோடு முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூட்டுப் பலி நிறைவேற்றினார். மேலும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 150 கர்தினால்மார், 700 ஆயர்கள் மற்றும் 1000 குருக்களும் கலந்துகொண்டனர். புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது.
திருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தா ரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை.
புதிய புனிதர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது.
சுமார் 500 ஆயிரம் திருப்பயணிகள் கோவில் வளாகத்திலும் அதன் முன் டைபர் நைதி நோக்கிச் செல்லும் பெருஞ்சாலையிலும் கூடி நின்று பங்கேற்றனர். போலந்து நாட்டவரான திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான போலந்து திருப்பயணிகள் தம் நாட்டுக் கொடியை அசைத்தவண்ணம் நின்றனர்.
93 உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அவற்றுள் 19 தூதுக்குழுக்கள் நாட்டு அதிபர்கள் தலைமையின்கீழும் 24 குழுக்கள் நாட்டுப் பிரதமர்களின் தலைமையின்கீழும் வந்தன. எசுப்பானியாவின் அரசரும் அரசியும், பெல்ஜியத்தின் முன்னாள் அரசியும் பங்கேற்றனர்.[20]
போலந்தில் இவருடைய மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம் எடையும் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே இவரின் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயரமுடைய இவரின் சிலையே உலகில் மிகப்பெரியதாக இருந்தது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார்.
2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தார். அதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையே காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோகோவா என்ற இடத்தில் இந்த சிலையை செஸ்டோகோவா நகரின் பேராயர் வாட்சுவா தேபோ திறந்து வைத்தார்.
உலகிலேயே இயேசு கிறித்துவின் மிக உயரமான சிலையும் போலந்து நாட்டில்தான் உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இச்சிலை 2011இல் ஸ்வீபோட்சின் நகரில் எழுப்பப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.