சுடுமண் சிற்பம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் என்பதனால் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப்படுகின்றன. இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர். சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும்.
டெர்ரா என்றால் மண் என்று பொருள்[1]. மண்ணால் சிற்பம் செய்வது[2], உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும். இது, மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும்.
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் சுடுமண் சிற்பங்களாக அந்த கால மக்கள் உருவாக்கினர். இவை பல்லாயிரம் ஆண்டுகளானாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும்.
சுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப்படுவதாகும்.
தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன[3]. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம்புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப்படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன. மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.
வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்துக் கிராமங்களில் இன்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. பொதுவாக ஐயனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும் இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர்.
இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் புகழ்பெற்றதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது.[4]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி உயரமான குதிரை அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில் இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம் என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது. திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் ஐயனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி ஐயனார் தனியாக மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் கோயில்களில் மட்டுமின்றின்றி அம்மன் (காளி)சிலைக்கு முன்னால் குதிரைக்கு நிறுத்தி வைக்கப்படும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம் காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.
சில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் ஐயனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும்.
இது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப்படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது.
சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. அவர்கள் பொதுவாக சப்த கன்னிகள் என்றும் ஆகாச கன்னிகள் என்றும் கன்னிமார்கள் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள் உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டுக் கிராம தேவதைகளில் ஒன்று மாரியம்மன் ஆகும். இது அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற வேனிற்காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச் சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் கிராம தேவதை என்று போற்றப் படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன், முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும்.
பூதவழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர்.சதுக்க பூதம் என்று சிலப்பதிகாரம் இவற்றை அழைக்கிறது. இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும், மாடன்(மாடசாமி, சுடலைமாட சாமி)வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது.
ஐயனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.