நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப் பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.

Thumb
ஜனவரி 30, 2018 அன்று ஏற்பட்ட முழுமையான நிலவு மறைப்பு. இடம்: கலிபோர்னியா

முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் கதிரவ ஒளியை புவி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, கதிரவ வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது. மேலும் புவியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு கதிரவ ஒளியைச் சிதறடிக்கிறது. இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிற ஒளியில் தோற்றமளிக்கும். எனவே இது குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.

உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய கதிரவ மறைப்பு போலல்லாமல், புவியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் நிலவு மறைப்பைக் காண முடியும். சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் முழு கதிரவ மறைப்பைப் போலில்லாமல் நிலவு மறைப்பு சில மணிநேரங்கள் வரை நீடிக்கும். மேலும் கதிரவ மறைப்பு போலில்லாமல் நிலவு மறைப்பை எந்தவொரு பாதுகாப்புக் கருவிகளும் இன்றி வெறும் கண்களால் காண இயலும்.

நிலவு மறைப்பின் வகைகள்

Thumb
ஜனவரி 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு
Thumb
நிலவு மறைப்பின் வகைகள்

புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். கருநிழலிற்குள், நேரடியாக கதிரவனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், கதிரவனின் பெரிய கோண அளவின் விளைவாக, கதிரவனின் ஒளி, புவியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும். எனவே இது புறநிழல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

Thumb
புவியின் நிழல் நிலவில் விழுவதை விளக்கும் வரைபடம்.

புறநிழல் நிலவு மறைப்பு என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் பகுதி இருண்டு காணப்படும். புவியின் புறநிழலிற்குள் நிலவு முழுமையாக கடந்து செல்லும் போது ஏற்படும் சிறப்பு வகை புறநிழல் மறைப்பு முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு எனப்படுகிறது. இது மிக அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது கருநிழலுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.

பகுதி நிலவு மறைப்பு என்பது நிலவின் ஒரு பகுதி மட்டும் கருநிழலிற்குள் நுழைவதால் ஏற்படும் நிகழ்வாகும். நிலவானது புவியின் கருநிழலிற்குள் முழுமையாக கடந்து செல்லும் போது, முழுமையான நிலவு மறைப்பு ஏற்படுகிறது. அந்த நிழலில் நிலவின் வேகம் வினாடிக்கு சுமார் ஒரு கிலோமீட்டராக (2,300 mph) இருக்கிறது. ஆகவே அந்த முழு மறைப்பானது கிட்டத்தட்ட 107 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனினும் புவியின் நிழலுடன் நிலவின் முதல் மற்றும் இறுதி தொடர்புக்கு இடையில் உள்ள மொத்த நேரம் மிகவும் நீண்டதாக இருக்கிறது. எனவே அது 3.8 மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.[1]

நடு நிலவு மறைப்பு என்பது புவியின் நடு நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இது அரிதாக ஏற்படும் நிகழ்வாகும்.

நேரம்

முழுமையான நிலவு மறைப்பின் நேரம் அதன் தொடர்புகளால் தீர்மானிக்கப்படுகிறது:[2]

P1 (முதல் தொடர்பு): புறநிழல் மறைப்பின் தொடக்கம். புவியின் புறநிழல் நிலவின் வெளி முனையைத் தொடுகிறது.

U1 (இரண்டாம் தொடர்பு): பகுதி மறைப்பின் தொடக்கம். புவியின் கருநிழல் நிலவின் வெளி முனையைத் தொடுகிறது.

U2 (மூன்றாம் தொடர்பு): முழுமையான மறைப்பின் தொடக்கம். நிலவின் மேற்பரப்பு முழுவதும் புவியின் கருநிழலிற்குள் இருக்கும்.

உச்ச மறைப்பு: முழுமையான மறைப்பின் உச்சநிலை. நிலவு பூமியின் கருநிழல் மையத்தில் நெருக்கமாக இருக்கும்.

U3 (நான்காம் தொடர்பு): முழுமையான மறைப்பின் முடிவு. நிலவின் வெளி முனை புவியின் கருநிழலை விட்டு வெளியேறும்.

U4 (ஐந்தாம் தொடர்பு): பகுதி மறைப்பின் முடிவு. புவியின் கருநிழல் நிலவின் வெளி முனையை விட்டுச் செல்லும்.

P4 (ஆறாம் தொடர்பு): புறநிழல் மறைப்பின் முடிவு. புவியின் புறநிழல் இனி நிலவுடன் தொடர்பில் இருக்காது.

நிலவு மறைப்பின் தோற்றம்

நிலவு புவியின் கருநிழலிற்குள் செல்லும் போது கதிரவ ஒளி புவியின் வளிமண்டலத்தால் ஒளிவிலகல் அடைந்து நிலவைச் சென்றடைகிறது. எனவே நிலவு முற்றிலும் இருண்டு விடுவதில்லை. ஒருவேளை புவியின் வளிமண்டலம் இல்லாதிருந்தால் மறைப்பின் போது நிலவு முற்றிலும் இருண்டு இருக்கும். மறைப்பின் போது கதிரவ ஒளி புவியின் நீண்ட மற்றும் அடர்த்தியான அடுக்கு வழியாக கடந்து சென்று நிலவை அடைகிறது. எனவே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. காற்று மூலக்கூறுகள் மற்றும் சிறிய துகள்கள் மூலம் குறுகிய அலைநீளங்கள் சிதறலடைய வாய்ப்பு அதிகம்.

மறைப்பு சுழற்சிகள்

ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் இரண்டு நிலவு மறைப்புகள் ஏற்படும், எனினும் முழுமையான நிலவு மறைப்பு குறிப்பிடத்தக்க அளவில் பொதுவானவையாக இல்லாமல் இருக்கின்றன. ஒருவருக்கு மறைப்பின் தேதி மற்றும் நேரம் தெரிந்தால், சாரோஸ் சுழற்சி போன்ற மறைப்பு சுழற்சியைப் பயன்படுத்தி மற்ற மறைப்புகள் எப்போது ஏற்படும் என்பதைக் கணிக்க இயலும்.

2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரிய நிலவு மறைப்புகள்

சனவரி 31, 2018 அன்று நிகழ்ந்த முழுமையான நிலவு மறைப்பு பெரு நீல இரத்த நிலவு என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் பெரு நிலவு, நீல நிலவு மற்றும் இரத்த நிலவு என மூன்றும் இந்நாளில் ஒன்றாக வந்தது. இதே போன்றதொரு நாள் 19 வருடங்கள் கழித்து சனவரி 31, 2037 அன்று வரவிருக்கிறது.

சூலை 27, 2018 அன்று நிகழ்ந்த முழுமையான நிலவு மறைப்பு ஒரு குறுநிலவு மறைப்பாகும். மேலும் இது நடுநிழல் நிலவு மறைப்பும் 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட மறைப்பும் ஆகும்.

இதையும் காண்க

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.