கோரமண்டல் கரை என்பது, இந்தியக் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும்.வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதியான பாண்டிச்சேரியிலும் உள்ளது.

Thumb
கோரமண்டல் கரையை அண்டியுள்ள மாவட்டங்கள்

பெயர்க்காரணம்

இச்சொல் வழக்கு சோழர்களின் பகுதி என்னும் பொருள்தரும் தமிழ்ச் சொல்லான சோழ மண்டலம் என்பதில் இருந்து போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][2][3]. இப்பெயர் கரைப்பகுதி என்னும் பொருள் தரக்கூடிய கரை மண்டலம் என்னும் தொடரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள். அதற்கு போதிய வரலாற்று அடிப்படை இல்லை. அராபியர்கள் சோழமண்டல கடற்கரையை "ஷூலி மண்டல்"[சான்று தேவை] என்னும் பெயரால் அழைத்தனர்.

புவியியல்

கோரமண்டல் கரை பொதுவாகத் தாழ்ந்த பகுதியாகும். காவிரி, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா உள்ளிட்ட பல ஆறுகளின் கழிமுகங்கள் இக்கரையோரத்தைத் துண்டாடுகின்றன. இவ்வாறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகித் தக்காணத்துச் சம வெளிகள் ஊடாக வங்காள விரிகுடாவைச் சேருகின்றன. இந்த ஆறுகளால் உருவான வண்டற் சமவெளிகள் வளமானவையும் வேளாண்மைக்கு வாய்ப்பானவையும் ஆகும். இங்கே அமைந்துள்ள துறைமுகங்களாலும் இக்கரை பெயர் பெற்றுள்ளது. பழவேற்காடு, சென்னை, சதுரங்கப்பட்டினம், பாண்டிச்சேரி, காரைக்கால், கடலூர், தரங்கம்பாடி, நாகூர், நாகபட்டினம் என்பவை இவ்வாறான துறை முகங்களிற் சில.

சோழமண்டல கடற்கரையின் வரலாற்று முதன்மை

சோழமண்டல கடற்கரைக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பண்டைய உரோமையர் காலத்திலிருந்தே வணிகத் தொடர்புகள் இருந்துவந்துள்ளன. ஆயினும் பருவமழைக் காலத்தில் (அக்டோபர் - திசம்பர்) இப்பகுதியில் கடல்பயணம் இடர் மிகுந்தது.

மார்க்கோ போலோ என்னும் வெனிசு நகர பயணி இப்பகுதிக்குப் பயணமாகச் சென்றதை தாம் எழுதிய (கிபி சுமார் 1295) "மிலியோனே - உலக அதிசயங்கள்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தென்னிந்திய பகுதிகள் அனைத்தும் பாண்டியர் ஆளுமையில் இருந்தது. "சோழமண்டலக் கரையில் செல்வம் கொழித்தது. அங்குக் காணப்படுகின்ற முத்துக்களைப் போல பெரியனவும் அழகுமிக்கவையும் வேறெங்கும் கிடைப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.[4]

சோழமண்டலக் கரையின் முதன்மை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அங்கிருந்துதான் சோழ மன்னர்கள் இலங்கை, மலேசியா, சாவகம் (ஜாவா) போன்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள். அச்சமயம் மாமல்லபுரம் துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஐரோப்பியர் ஆதிக்க காலத்தில் சோழமண்டலக் கரை

16-17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாட்டவர் இந்தியாவோடு வாணிகம் செய்ய வந்தபோது சோழமண்டலக் கரையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போட்டியிட்டார்கள். பிரித்தானியர்கள் புனித ஜார்ஜ் கோட்டை (சென்னை), மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களை நிறுவினார்கள். ஒல்லாந்து நாட்டவர் பழவேற்காடு, சதுரங்கபட்டினம் {சாத்ராஸ்) பகுதிகளைக் கட்டுப்படுத்தினார்கள். பிரான்சு நாட்டவர் பாண்டிச்சேரி (புதுச்சேரி), காரைக்கால், நிசாம்பட்டினம் ஆகிய இடங்களில் குடியேற்றம் அமைத்தார்கள். டென்மார்க்கு நாட்டவர் தரங்கம்பாடியில் கோட்டை கட்டினார்கள்.

பல போர்களுக்குப் பின், பிரித்தானியர் பிற ஐரோப்பிய நாட்டவர்களை முறியடித்து, சோழமண்டலக் கரையில் தம் ஆதிக்கத்தை நிறுவினர். பிரான்சு நாட்டவர் மட்டும் பாண்டிச்சேரியிலும் காரைக்காலிலும் 1954 வரை ஆதிக்கம் செலுத்தினர்.

சிறப்புகள்

"கோரமண்டல் அரக்கு" என்பது புகழ்பெற்றது. சீன நாட்டில் செய்யப்பட்டு, அரக்கு பூசப்பெற்ற பெட்டிகள், குவளைகள் "கோரமண்டல் சரக்குகள்" என்னும் பெயர்பெற்றுள்ளன.

சோழமண்டலத்தின் சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்டவை. அங்கு பறவைகள் பாதுகாப்பிடங்கள் உள்ளன (பழவேற்காடு பறவைகள் காப்பகம்).

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.