தென்னிந்தியாவில் உருவான இசை மரபு From Wikipedia, the free encyclopedia
கருநாடக இசை அல்லது கருநாடக சங்கீதம் தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
விசயநகரப் பேரரசுக்கும் அவர்கள் வழியாக வந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த பகுதிகள் கருநாடக பிரதேசம் என்று அழைக்கபட்டது. எனவே இந்தப் பகுதியில் பாடபட்ட இசையானது கருநாடக இசை என்று பிற்காலத்தில் பெயர் பெற்றது.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[1] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.[2]
தியாகராய சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரிகள் என்னும் மூவரும் கருநாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கருநாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராய சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. சட்சம், இரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. இரிடபம், காந்தாரம், தைவதம், நிசாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புகளைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.[3]
செவிக்கு இனிமை கொடுக்கும் தொனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து சுரமும், சுரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன.
பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...
சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிசாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் சுரங்கள் சபசு (சா பாசாபாசா).
இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி சுரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான சுரங்கள் ஏழு ஆகும். இவை சப்த சுரங்கள் எனப்படும். தமிழிசையில் சுரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு சுரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.
சப்த சுரங்கள் | வடமொழிப் பெயர்கள் | தமிழ் பெயர்கள் |
---|---|---|
ச | சட்சம் | குரல் |
ரி | இரிடபம் | துத்தம் |
க | காந்தாரம் | கைக்கிளை |
ம | மத்யமம் | உழை |
ப | பஞ்சமம் | இளி |
த | தைவதம் | விளரி |
நி | நிசாதம் | தாரம் |
கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.
பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.
அவையாவன,
ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு / உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.
தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.