ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் (United Nations, UN, ஐநா) என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.[2] இது உலகின் மிகப்பெரியது பன்னாட்டு அமைப்பாகும்.[3] இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள பன்னாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனீவா, நைரோபி, வியென்னா, டென் ஹாக் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் இருந்து மதிப்பிடப்பட்ட மற்றும் தன்னார்வப் பங்களிப்புகளால் நிதியளிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் United Nations
| |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தலைமையகம் | 760 ஐக்கிய நாடுகள் பிளாசா, மன்ஹாட்டன், நியூயார்க்கு நகரம் (பன்னாட்டுப் பிராந்தியம்) | ||||||||||
அதிகாரபூர்வ மொழிகள் | |||||||||||
வகை | அரசுகளுக்கிடையேயான அமைப்பு | ||||||||||
அங்கத்துவம் | 193 உறுப்பு நாடுகள் 2 பார்வையாளர் நாடுகள் | ||||||||||
தலைவர்கள் | |||||||||||
அந்தோனியோ குத்தேரசு | |||||||||||
• துணைப் பொதுச் செயலாளர் | அமீனா ஜெ. முகம்மது | ||||||||||
அப்துல்லா சாகிது | |||||||||||
• பொருளாதார, சமூகப் பேரவைத் தலைவர் | கொலென் விக்சன் கெலாப்பிலி | ||||||||||
நிறுவுதல் | |||||||||||
• ஐநா பட்டயம் கைச்சாத்து | 26 சூன் 1945 | ||||||||||
• பட்டயம் நடைமுறையில் | 24 அக்டோபர் 1945 | ||||||||||
|
ஐநா அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த பன்னாட்டு அமைப்பான உலக நாடுகள் சங்கம் பயனற்றது என்று வகைப்படுத்தப்பட்டு கலைக்கப்பட்டது.[4] 1945 ஏப்ரல் 25 , 50 அரசுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாட்டிற்காகச் சந்தித்து, ஐக்கிய நாடுகளின் பட்டயத்தை உருவாக்கத் தொடங்கின, இது 1945 சூன் 25 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1945 அக்டோபர் 24 இல் நடைமுறைக்கு வந்தது. ஐநாவின் பட்டயத்தின்படி, அமைப்பின் நோக்கங்களில் பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், பன்னாட்டு சட்டத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை அடங்கும்.[5] இவ்வமைப்பு நிறுவப்பட்ட போது, இது 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது; 2011 இல் தெற்கு சூடானின் சேர்க்கையுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, இது உலகின் அனேகமாக அனைத்து இறையாண்மை நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[6]
உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் நோக்கம் அதன் ஆரம்ப தசாப்தங்களில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் அந்தந்த நட்பு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரால் சிக்கலானது. அதன் பணிகளில் முதன்மையாக நிராயுதபாணியான இராணுவப் பார்வையாளர்கள், இலேசான ஆயுதம் ஏந்திய துருப்புகள் ஆகியன முதன்மையாகக் கண்காணிப்பு, அறிக்கை தயாரித்தல், நம்பிக்கையை வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டிருந்தன.[7] 1960களில் தொடங்கிய பரவலான குடியேற்ற விலக்கத்தைத் தொடர்ந்து ஐநா உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது. அப்போதிருந்து, 80 முன்னாள் குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றுள்ளன, இதில் 11 ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள் அறக்கட்டளை பிரதேசங்கள் ஐநா அறங்காவலர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தன.[8] 1970களில், பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்டம், அமைதி காக்கும் பணிக்கான செலவினங்களை விட அதிகமாக இருந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐ.நா. தனது களச் செயல்பாடுகளை மாற்றியும், விரிவுபடுத்தியும், பல்வேறு சிக்கலான பணிகளை மேற்கொண்டது.[9]
ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபை; பாதுகாப்புப் பேரவை; பொருளாதார, சமூகப் பேரவை (ECOSOC); பொறுப்பாட்சி மன்றம்; அனைத்துலக நீதிமன்றம்; ஐக்கிய நாடுகள் செயலகம் ஆகிய ஆறு முக்கிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை விட உலக வங்கிக் குழுமம், உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனெசுக்கோ, சிறுவர் நிதியம் ஆகிய சில சிறப்பு நிறுவனங்கள், நிதி அமைப்புகள், திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது. அத்துடன், கூடுதலாக, அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ECOSOC மற்றும் பிற நிறுவனங்களுடன் ஐ.நா.வின் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.
ஐநாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுச் செயலாளர் ஆவார். தற்போதைய பொதுச் செயலாளராக போர்த்துகீசிய அரசியல்வாதியும் தூதருமான அந்தோனியோ குத்தேரசு பதவியில் உள்ளார். இவர் தனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தை 2017 சனவரி 1 தொடங்கினார், 20121 சூன் 8 அன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் அமைதிக்கான நோபல் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளன, இருப்பினும் அதன் செயல்திறன் பற்றிய பக்கசார்பற்ற மதிப்பீடுகள் கலவையாக உள்ளன. சிலர் இவ்வமைப்பு அமைதி மற்றும் மனித மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாக நம்புகிறார்கள், வேறு சிலர் இது பயனற்றது, பக்கச்சார்பானது அல்லது ஊழல் மிகுந்தது என்றும் கூறுகின்றனர்.[10]
வரலாறு
தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.
1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.
நோக்கங்கள்
- கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;
- பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
- மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
- மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
- இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.
- உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
- உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
ஐக்கிய நாடுகள் முறைமை
ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
- ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
- ஐக்கிய நாடுகள் செயலகம்
- அனைத்துலக நீதிமன்றம்
1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன.[11] இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன.[12] அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா,[13] வியன்னா,[14] நைரோபி[15] போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.
அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன.[16] செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை - அனித்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளினதும் ஒன்று கூடல். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு. - |
ஐக்கிய நாடுகள் செயலகம் - ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாக அலகு - இதன் தலைவரே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராவார் - |
அனைத்துலக நீதிமன்றம் - சர்வதேச சட்டங்களுக்கான நீதிமன்றம் (based in The Hague) - | ||||
|
|
| ||||
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை - சர்வதேச பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் அமைப்பு - |
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை -சர்வதேச பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் - |
ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் - (தற்போது செயற்பாட்டில் இல்லை) - | ||||
|
|
|
பொதுச் சபை
பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர்.
பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.
பாதுகாப்புச் சபை
நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு.[17] இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.
பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.[18] நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.
செயலகம்
ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.
ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.
பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.
பொதுச் செயலாளர்
ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.[19]
"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்"[20] என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம்[21] உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.[22]
பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.[23] கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.[24] இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.