உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் செருமனி வெற்றியீட்டியது.
தோற்றம் | 1930 |
---|---|
மண்டலம் | உலகளாவியது (ஃபீஃபா) |
அணிகளின் எண்ணிக்கை | 32 (இறுதி) 204 (2010க்கு தகுதி பெற்றன) |
தற்போதைய வாகையாளர் | பிரான்சு (2 வெற்றிகள்) |
அதிக முறை வென்ற அணி | பிரேசில் (5 வெற்றிகள்) |
இணையதளம் | World Cup |
2018 உலகக்கோப்பை காற்பந்து |
ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக ஒரு அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் வகையில் உலகக்கோப்பை காற்பந்து போட்டியானது வடிவமைக்கப்படுகிறது. இப்போட்டிகள் உலககோப்பை இறுதியாட்டம் என்றழைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் போட்டியை நடத்தும் நாடு உட்பட பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன.
இதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. செருமனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும், அர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை இரண்டு முறையும், இங்கிலாந்து, பிரான்சு, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.
உலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. செர்மனியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக பதிவாகியுள்ளது. .
உருசியா, கத்தார் ஆகிய நாடுகளில் முறையே 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.
வரலாறு
தொடக்ககால சர்வதேசப் போட்டிகள்:-
உலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
1904 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர், 1906 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கட்டமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளிடையே ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை சுவிச்சர்லாந்தில் இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய முயற்சித்தது. சர்வதேச கால்பந்து போட்டிகள் அப்போது மிகவும் ஆரம்ப நாட்களில் இருந்த காற்பந்துப் போட்டிகள் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வரலாறு போட்டிகளின் நோக்கம் தோல்வி என்றே விவரிக்கிறது. ம இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் திட்டமிடலால் லண்டன் 1908 கோடை ஒலிம்பிக் போட்டிகளில், கால்பந்து ஒரு அதிகாரப்பூர்வ போட்டியாக இடம்பெற்றது. பயிற்சி வீரர்கள் மட்டுமே விளையாடிய இப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் ஐயத்திற்கிடமின்றி கண்காட்சியாக இருந்தது. தங்க பதக்கங்களை வென்ற கிரேட் பிரிட்டனின் இங்கிலாந்து தேசிய தன்னார்வ கால்பந்து அணி ஸ்டாக்ஹோமில் 1912 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வென்று சாதனையை நிகழ்த்தியது.
ஒலிம்பிக் நிகழ்வுகளில் தன்னார்வ அணிகள் மட்டுமே போட்டியிடுவது தொடர்ந்து கொண்டு இருந்த அந்நாளில், சர்தாமஸ் லிப்டன் என்பவர் சர்தாமஸ் லிப்டன் பரிசுக்கோப்பை போட்டியை 1909 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார். லிப்டன் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனியார் குழுக்கள் அவை சார்ந்த நாட்டின் சார்பில் போட்டியிட்டன. இப்போட்டிகள் முதலாவது உலகக்கோப்பை போட்டிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளின் மிக மதிப்புமிக்க தொழில்முறை விளையாட்டுக் குழுக்களும் பங்கேற்ற இப்போட்டியில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் அந்நாட்டின் தொழில்முறை அணியை அனுப்ப மறுத்து போட்டியை நிராகரித்தது. லிப்டன் இங்கிலாந்துக்குப் பதிலாக துர்காம் கோட்டத்தைச் சார்ந்த மேற்கு ஆக்லாந்து தொழில்முறை விளையாட்டுக் குழுவை இங்கிலாந்தின் பிரதிநிதியாக விளையாட அழைப்பு விடுத்தார். மேற்கு ஆக்லாந்து அப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிகரமாக 1911 ஆம் ஆண்டில் அவ்வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற தன்னார்வர்கள் கலந்துகொண்டு விளையாடிய காற்பந்து போட்டிகளை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு 1914 ஆம் ஆண்டில் ஒரு " உலக கால்பந்து போட்டி “ என அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது. இவ்வொப்புதல் 1920 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் உலகின் முதல் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறவும் வழிவகுத்தது. எகிப்து மற்றும் பதிமூன்று ஐரோப்பிய அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. 1924 மற்றும் 1928 – களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் உருகுவே பட்டம் வென்றது. இவர்களே முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் வென்றனர். 1924 ஆம் ஆண்டு தொழில்முறை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு சகாப்தத்தின் தொடக்கமாகும்.
இரண்டாம் உலக போருக்கு முந்தைய உலக கோப்பைகள்
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜூல்ஸ் ரிமெட், ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளின் வெற்றியை உந்து சக்தியாக கொண்டு மீண்டும் ஒலிம்பிக் அமைப்பிற்கு வெளியே அவ்வமைப்பின் சொந்த சர்வதேச காற்பந்து போட்டிகளை நடத்த ஆரம்பித்தார்.
1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. இரண்டு முறை அதிகாரப்பூர்வ கால்பந்து உலக சாம்பியனான உருகுவை நாட்டின் 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக அந்நாடு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.
போட்டிக்காக ஒரு குழுவை அனுப்புமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் போட்டி நடத்தப்படும் நாடாக உருகுவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. உருகுவே நாட்டுத் தேர்வு ஐரோப்பிய நாடுகளுக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு குறுக்கே ஒரு நீண்ட மற்றும் விலை உயர்ந்த பயணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அதனால் எந்த ஐரோப்பிய நாடும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்புவரை தங்கள் நாட்டு அணியை போட்டிக்கு அனுப்புவதாக உறுதி மொழியைத் தரவில்லை. இறுதியில் ரைமெட் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, மற்றும் யூகோஸ்லாவியா நாட்டு அணிகளை அழைத்து உருகுவே வந்து விளையாடுமாறு வ்ற்புறுத்தினார். இறுதியில் தென் அமெரிக்காவில் இருந்து ஏழு, ஐரோப்பாவில் இருந்து நான்கு மற்றும் வட அமெரிக்காவில் இருந்து இரண்டு என மொத்தம் பதிமூன்று நாடுகள் போட்டியில் பங்கேற்றன.
ஜூலை மாதம் 13 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலக கோப்பை போட்டிகளில் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலக கோப்பை காற்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலககோப்பையை வென்ற முதல் தேசம் என்ற பெருமையைப் பெற்றது.
அமெரிக்க மக்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்த அளவிலேயே இருந்த காரணத்தால் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் உருவாக்கப்பட்ட பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 1932 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போட்டிகள் அட்டவணையில் கால்பந்து விளையாட்டு சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் தொழில்முறை அல்லாத காற்பந்து வீரர்களை மறுத்து வந்ததால் அந்த ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்து போட்டிகள் கைவிடப்பட்டன. 1936 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் காற்பந்து சேர்த்துக்கொள்ளப்பட்டது. மதிப்புமிக்க உலக கோப்பை காற்பந்து போட்டிகளின் காரணமாக ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளுக்கு பொதுவில் அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
ஆரம்ப காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் போர் முதலிய பிரச்சினைகள் உலக கோப்பை போட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருந்தன. சில தென் அமெரிக்க அணிகள் மட்டுமே 1934 மற்றும் 1938 போட்டிகளுக்காக ஐரோப்பியப் பயணம் செய்ய தயாராக இருந்தனர். தென் அமெரிக்க அணியான பிரேசில் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டது. செருமணி மற்றும் பிரேசில் நாடுகள் நடத்துவதாயிருந்த 1942, 1946 போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக கோப்பை போட்டிகள்
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கு விருப்பமின்மையும், கால்பந்தாட்டத்தில் வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு எதிர்ப்பைக் காட்டவும் இங்கிலாந்து 1920 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பிலிருந்து தமது அணிகளை விலக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் 1946 ல் கூட்டமைப்புடன் இணைந்தது. பிரேசிலில் நடைபெற்ற 1950 உலக கோப்பை போட்டியில்தான் , இங்கிலாந்து நாட்டவர் முதன்முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முந்தைய இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்திருந்த உருகுவே அணியையும் போட்டியில் காணமுடிந்தது. 1930 உலக கோப்பையை வெற்றி கொண்ட சாம்பியன் உருகுவே 1950ல் போட்டியை நடத்திய பிரேசிலை இறுதியாட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மீண்டும் பட்டம் வென்றது. பிரேசிலின் இத்தோல்வி மரக்காணசோ வீழ்ச்சி என்று வர்ணிக்கப்படுகிறது.
1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் செர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இப்போட்டியில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் பெரும்பான்மையாகவும் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகள் சிறுபான்மையாகவும் பங்கேற்றன. இச்சிறுபான்மை அணிகள் வழக்கமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளால் எளிதாக தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்கா 1930 போட்டியில் அரையிறுதி, 1938 போட்டியில் கியூபா கால் இறுதி, கொரியா 1966 போட்டியில் காலிறுதி, மெக்சிகோ 1970 போட்டியில் காலிறுதி என்று முன்னேறியதே சிறுபான்மை நாடுகளின் முதல்சுற்று ஆட்டங்களைத் தாண்டிய சாதனையாக இருந்தது.
32 அணிகளாக விரிவாக்கம்
உலககோபை போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.. உதாரணமாக 1994,1998 மற்றும் 2006 போட்டிகளில் காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் யாவும் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா நாடுகளாகவே இருந்தன. 2002 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 200 அணிகளும், 2006 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 198 அணிகளும், 2010 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 204 அணிகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டமைப்பின் பிற போட்டிகள்
ஆண்கள் காற்பந்து போட்டிகளுக்கு சமமான முதலாவது மகளிர் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் சீன மக்கள் குடியரசில் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பெண்கள் போட்டியில் குறைந்த அளவு அணிகளே பங்கேற்றன என்றாலும் 2007 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 120 அணிகளாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி 1991 பங்கேற்ற அணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
கால்பந்து போட்டிகள் 1896 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இடம் பெற்றாலும் கால்பந்து போட்டிகள் மற்ற விளையாட்டுகளைப் போல் உயர் மட்ட போட்டியாகக் கருதப்படவில்லை.
1992 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அணியிலும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க மூன்று வீரர்களுக்கு வயது மீறல் சலுகை அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் கால்பந்து போட்டி 1996 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் வயது கட்டுப்பாடு ஏதுமின்றி முழுமையான தேசிய அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்றது.
கோப்பை
1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கோப்பை திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கோப்பை கண்டுபிடிக்கப்படவில்லை.[1]
1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.[2]
இந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கோப்பைப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.[3]
தற்போது, முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் (விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள்) உலகக்கோப்பை சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களைப் பெறுவர்: தங்கம் (வாகையர்), வெள்ளி (இரண்டாம் இடம்) மற்றும் வெண்கலம் (மூன்றாம் இடம்). 2002 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்ற தென் கொரிய அணிக்கும் பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன. 1978-ஆம் ஆண்டுவரை, இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியின் முடிவில் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு அணியின் 11 வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 2007-இல் ஃபிஃபாவினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1930-இலிருந்து 1974-வரையிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதக்கங்கள் அளிக்கப்படுவதென தீர்மானம் செய்யப்பட்டது.[4][5][6]
முடிவுகள்
- கூ.நே.பி: கூடுதல் நேரத்திற்கு பின்னர்
- ச: சமன்நீக்கி மோதலிற்குப் பின்னர்
- குறிப்புகள்
- 1930இல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் மூன்றாமிடத்தைத் தெரிவுசெய்யும் அலுவல்முறையான ஆட்டம் எதுவும் நடக்கவில்லை; ஐக்கிய அமெரிக்காவும் யூகோசுலாவியாவும் அரையிறுதியில் தோற்றன. போட்டியில் நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் ஃபிஃபா தற்போது ஐக்கிய அமெரிக்காவை மூன்றாமிடத்திலும் யூகோசுலாவியாவை நான்காமிடத்திலும் அங்கீகரித்துள்ளது.[7]
- அன்சுலூசு எனப்பட்ட நாசி செருமனியின் ஆத்திரிய ஆக்கிரமிப்பினால் ஆத்திரியா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்ட பிறகு விலகிக் கொண்டது. சில ஆத்திரிய விளையாட்டு வீரர்கள் பின்னர் செருமன் அணியில் இணைந்தனர். இதனால் இப்போட்டியில் 15 அணிகளே பங்கேற்றன.
- 1950இல் அலுவல்முறையான உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறவில்லை.[8] உலகக்கோப்பை வெற்றியாளர் நான்கு அணிகள் (உருகுவை, பிரேசில், சுவீடன், எசுப்பானியா) பங்கேற்ற இறுதிச் சுழல்சுற்று முடிவுகளைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டார். தற்செயலாக, கடைசி இரு ஆட்டங்களில் ஒன்றில் உயரிய இரு அணிகள் போட்டியிட்டன; உருகுவை 2-1 என்ற கணக்கில் பிரேசிலை வென்றது. இதுவே நடைமுறைப்படி 1950 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டமாகக் கருதப்படுகிறது.[9] அதேபோல, தரவரிசையில் குறைந்த இரு அணிகளுக்கிடையே, உருகுவை பிரேசில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே சுவிடனுக்கும் எசுப்பானியாவிற்கும் இடையே நடந்தது; மூன்றாமிடத்திற்கான ஆட்டமாக கருதப்படும் இந்த ஆட்டத்தில் சுவீடன் 3-1 கணக்கில் எசுப்பானியாவை வென்றது. எனவே சுவீடன் மூன்றாமிடத்திலும் எசுப்பானியா நான்காமிடத்திலும் வந்தன.
- 1950 உலகக்கோப்பையில் 13 அணிகளே பங்கேற்றன.[10] 16 அணிகள் போட்டித் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இருப்பினும், துருக்கியும் இசுக்காட்டுலாந்தும் போட்டிநிரல் தயாரிக்கும் முன்னரே விலகிக் கொண்டன; 15 அணிகளுடன் நடத்துமாறு பிரான்சு (தகுதிநிலைப் போட்டிகளில் தோற்றிருந்தாலும்) மாற்றாக போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். போட்டி நிரல் தயாரித்த பிறகு இந்தியாவும் பிரான்சும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால் 13 அணிகளே பங்கேற்குமாறு அமைந்தது.
குறிப்புதவிகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.