தினப்பதிவியம், நாட்பதிவியம், ஊடகவியல் அல்லது இதழியல் (journalism) என்பது அன்றாட நிகழ்வுகள், உண்மைகள், எண்ணங்கள், நபர்கள் ஆகியவற்றுடனான இடைவினைகளைக் குறைந்தபட்சம் ஓரளவுக்கு சமூகத்திற்கு தெரிவிக்கும் அறிக்கைகளின் தயாரிப்பு, மற்றும் பகிர்வு ஆகும். செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் போன்ற ஊடகங்கள் இவற்றுள் அடங்கும். இதழியல் என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே செய்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது தனக்குள் உள்ளடக்கியது. எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக தகவல்களை வெளியிட வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் உள்ளூர், மாநில, தேசிய என அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. ஊடகவியல்; அரசு, பொதுத்துறை அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.

தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. மேலும், 21ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்கள், நிகழ்வு நடைபெற்ற இடம் அல்லது செய்தி நடைபெறும் இடத்திற்கே சென்று, களத்தில் இருந்து நிருபர்கள் மூலமாக தகவலை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் செயல்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுடப் வளர்ச்சியின் காரணமாக, இணைய இதழியல், குறுஞ்செயலி வழியாக செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, என செய்தி துறை மற்றும் இதழியல் துறை வளர்ந்து கொண்டே செல்கின்றது.

சொல் விளக்கம்

ஆங்கிலச் சொல்லான journalism என்ற சொல்லின் மூலம் diurnal என்ற பழைய இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இலத்தீன் மொழியில் இதற்கு “அன்று” என்று பொருள். “journal” என்றால் “அன்றாடம் நடந்ததை எழுதி வைக்கும் ஏடு” என்று பொருள். இப்போது இது என்பது “இதழ்கள்” என்பதை மட்டும் குறிக்கும் சொல்லாகிவிட்டது. இதழ் என்பது “பத்திரிகை”, “செய்தித்தாள்”, “தாளிகை” என்றும் குறிப்பிடப்படுகிறது. இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாள்களுக்கும் எழுதும் தொழிலைத்தான் முதலில் “இதழியல்” என்ற சொல் குறித்தது. ஆனால் தற்போது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறிவிட்டது.

அகராதி விளக்கம்

  • வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில், “வெளியிடுவதற்காகவோ, பதிப்பிப்பதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் “இதழியல்” என்ற விளக்கமுள்ளது.
  • சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி, “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல்” என்று கூறுகிறது.

அறிஞர்கள் கருத்து

  • ஹரால்டு பெஞ்சமின் எனும் அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்கமுடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் லட்சியத்தை நோக்கி நடை போடுகிறது” என்கிறார்.
  • ஜி.எப்.மோட் என்பவர், “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும், பொது பொழுதுபோக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்” என்கிறார்.
  • லார்டு கிரே என்பவர், “பத்திரிகைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி” என்கிறார்.
  • மேத்யூ அர்னால்டு என்பவர், “இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்கிறார்.
  • பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.
  • இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், "வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்" என்கிறார்.

ஊடக வடிவங்கள்

ஊடகவியலானது வேறுபட்ட பார்வையாளர்களைக் கொண்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது. இந்த ஊடகத்துறையே அரசுகளின் செயல்பாடுகளை காவல் செய்யும் காவல் நாய் போல இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் இத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது. ஒரு ஒற்றை வெளியீடு (ஒரு செய்தித்தாள் போன்றது) பலவிதமான ஊடக வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் அதாவது ஒரு நாளிதழாகவோ, ஒரு பத்திரிகையாகவோ, அல்லது ஒரு வலைத்தளமாகவோ இருந்து ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்.[1][2]

Thumb
ஒளிப்பட ஊடகவியலாளர் அமெரிக்க அதிகர் பராக் ஒபாமா அவர்களை 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2013 அன்று நடைபெற்ற நிகழ்வில் பேட்டியளிக்கிறார்
சில ஊடக வடிவங்களின் வகைகள்
  • வழக்காற்று ஊடகவியல்- குறிப்பிட்ட கருத்துரைகளுக்கு ஆதவாக அல்லது பார்வையாளர்களின் கருத்துக்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக எழுதுதல்.
  • ஒளிபரப்பு ஊடகவியல்-வானொலி அல்லது தொலைக்காட்சிகளில் எழுத்து அல்லது பேச்சு வடிவிலான ஊடகவியல்
  • குடிமகன் ஊடகவியல்- பங்கேற்பு ஊடகவியல்
  • தரவுத்தள ஊடகவியல்- எண்கள் மற்றும் தரவுகளில் இருந்து செய்திகளைத் திரட்டுதல் கண்டுபிடித்தல், செய்திகளைக் கூற தரவுகளையும் எண்களையும் பயன்படுத்துதல். தரவு பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கையை ஆதரிக்க இத்தகைய தரவுகளை பயன்படுத்தலாம். தரவுகளின் பயன்பாடுகள் மற்றும் அமைப்புகள் , அரசாங்கங்களால் தவறாக பயன்படுத்தப்பட்ட விவகாரங்களை அறிக்கைகளாக வெளியிடுவர். அமெரிக்க செய்தி அமைப்பான புரோபப்ளிக்கா (ProPublica) ஒரு முன்னோடி தரவுத்தள பத்திரிகையாக அறியப்படுகிறது.
  • வானியல் புகைப்பட ஊடகவியல்- ஆளில்லாத பறக்கும் ஒளிப்பட கருவிகளை இயக்கி சம்பவங்களை நேரடியாக படம்பிடித்தல் [3]
  • கொன்ஸோ ஊடகவியல்- இம்முறை ஊடவியலானது ஹன்டர் எஸ். தாம்சன் என்பவரால் புகழ் பெற்ற இவ்வகை ஊடகவியலானது செய்தியை மிகவும் தனிப்பட்ட பாணியில் வெளிப்படுத்துவது.[4]
  • ஊடாடும் ஊடகவியல்-இணைய வழியிலான பத்திரிக்கை வகைகள் வகை
  • துப்பறிதல் ஊடகவியல்- சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமாகவும் விரிவாகவும் துப்பறிந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளை நோக்கி செய்திகளை வெளியிடுவது
  • ஒளிப்பட ஊடகவியல்- புகைப்படங்கள் மூலமாக செய்திகளை வெளியிடுதல்

சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களின் தீவிர எழுச்சியும் வளர்ச்சியும் ஊடகவியலி்ல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு ஊடகத்தில் வெளிவரும் உண்மைத்தன்மைகள் சமூக ஊடகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படும் போது இக்னும் கவனமாக செய்திகளை வெளியி்டுவதற்கான நிர்பந்தங்கள் ஏற்படுகின்றன..[5]

வரலாறு

பிரான்சு நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள ஸ்திராஸ்பூர்க் என்ற நகரத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு ஜோகன் கார்லசு என்பவரால் வெளியிடப்பட்ட "அனைத்து கொள்கைகளுக்குமான தொடர்பும் மறக்கமுடியாத வரலாறுகளும்" என்ற பிரெஞ்சு மொழி நாளிதல் வெளியிடப்பட்டது. இதுவே உலகின் முதல் செய்தித்தாளாக அங்கீகரிக்கப்பட்டள்ளது. [சான்று தேவை] 1702 முதல் 1735 வரை வெளிவந்த தி டெய்லி கொரண்ட் (Daily Courant) என்ற ஆங்கில செய்தித்தாள் வெற்றிகரமாக வெளிவந்த முதல் ஆங்கில செய்தித்தாளாகும்.1950 களில் டயாரியோ கரியோகா என்ற செய்தித்தாளின் சீர்திருத்தம் பொதுவாக பிரேசிலில் நவீன பத்திரிகைகளின் பிறப்பு என்று குறிப்பிடப்படுகிறது.[6]

ஊடகத்தின் பங்கு

Thumb
1914 இல் வால்டர் லிப்மேன்

1920 களில் நவீன இதழியல் ஒரு முழுமையான வடிவம் பெற்றது.[7] எழுத்தாளர் வால்டர் லிப்மேன் மற்றும் அமெரிக்க தத்துவியலாளர் ஜான் டிவே சனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு பற்றி விவாதித்தனர். அவர்களுடைய வேறுபட்ட விவாதக் கருத்துக்கள் தேசம் மற்றும் சமுதாயத்தில் இதழியலின் பண்புகளை வரையறுக்க ஏதுவாகின்றன.

இதழியலின் கூறுகள்

பில் கோவாச் மற்றும் டாம் ரோசன்டைல் ஆகியோர் இதழியலின் கூறுகள் (The Elements of Journalism) என்ற புத்தகத்தில் இதழியலாளர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளனர்.[8] ஏனெனில் இதழியலின் முதல் விசுவாசம் குடிமகள்களுக்கானதாக இருக்க வேண்டும். இதழியலாளர்கள் என்பவர்கள் உண்மையை கட்டாயம் கூறவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களாவர். சக்தி மிக்க தனி நபர்கள் மற்றும் அரசுகள் அதன் அமைப்புகளை வெளிப்படைத்தன்மையோடும் சுதந்திரமாகவும் கன்காணிக்கும் பொறுப்பும் ஊடகவிலாளர்களுக்கு உள்ளது. தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி நம்பகமான தகவல்களை குடிமக்களுக்கு வழங்குவதே இதழியலின் முக்கியச் சாரம்சம் ஆகும்.

தொழில்முறை மற்றும் நெறிமுறைகள்

தற்போதுள்ள பல்வேறு இதழியல் குறியீடுகளில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும் பெரும்பாலான கொள்கைகள் உட்பட பொதுவான அம்சங்களான உண்மை, துல்லியத்தன்மை, புறவயத்தன்மை , பாரபட்சமற்ற, ஒரு பாற் கோடாமை, நேர்மை மற்றும் பொதுப் பொறுப்புடைமை ஆகியவை ஊடகங்கள் பொதுமக்களுக்காக செய்திகளை திரட்டி வெளியிடுதலில் கடைபிடிக்கப்பட வேண்டிய கூறுகளாகும். [9][10][11][12][13]

சில ஊடக நெறிமுறைகளில் ஐரோப்பிய இதழியல் நெறிகள் குறிப்படத்தக்கதாகும்.[14] அவை இனம் , மதம், பால் மற்றும் உடலியல் மனம் சார் குறைபாடுகள் அடிப்படையிலான பாகுபாட்டுச் செய்திகள் குறித்து கவலை கொள்கிறது.[15][16][17][18]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.