From Wikipedia, the free encyclopedia
அசோகாவதானம் (Aśokāvadāna; சமக்கிருதம்: अशोकावदान) இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்நூல், அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகர் பௌத்த சமயத்தை ஆதரித்து, வளர்த்து, பரத கண்டத்திலும், பரத கண்டத்தின் வெளியே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலும் பௌத்தத்தை பரப்பிய வரலாறும், பௌத்த பிக்குகள், இல்லற உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பௌத்த நெறிகளையும் குறித்து பாறைக் கல்வெட்டுகளிலும், குகைகளிலும், தூபிகளிலும் அரசாணையாக வெளியிட்டதைக் குறித்து விவரிக்கிறது.[1]
நூலாசிரியர் | மதுராவின் பிக்குகள் |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | ஜான் எஸ். ஸ்டிராங் |
நாடு | மௌரியப் பேரரசு |
மொழி | சமசுகிருதம் |
தொடர் | திவ்வியவதனம் |
பொருண்மை | அசோகரின் வாழ்க்கை |
வகை | வரலாற்று நூல் |
ஆங்கில வெளியீடு | 1983, ஜான் ஸ்டிராங்கின் மொழிபெயர்ப்பு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அச்சகம் |
ISBN | 9788120806160 |
OCLC | 9488580 |
அசோகாவதானம் எனும் நூல் மதுரா பகுதியில் இருந்த பௌத்த பிக்குகளால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டதாகும். பேரரசர் அசோகர் பௌத்த சமயத்தை பரப்பிய வரலாற்றையும், மதுராவையும், மதுரா பகுதியின் பௌத்த விகாரைகளையும், பிக்குகளின் பெருமைகளையும் இந்நூல் விளக்குகிறது. [2][3] அசோகவர்தனன் என்றும் அழைக்கப்படும் இந்நூலை சீன பௌத்த அறிஞராக பாசியான் என்பவர் கிமு 300ல் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். கிபி 500ல் ஆ-வு-வாங் எனும் பெயரில் சீன மொழியில் இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது. [4]. 1923ல் ஜீன் பிர்சிலுஸ்கி என்பவரால் பிரான்சு மொழியிலும், 1983ல் ஜான் எஸ். ஸ்டிராங் என்பவரால் ஆங்கிலத்திலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது.
அசோகாவதானம் நூலிற்கு, இராஜேந்திர லாலா மித்திரர் (1822–91) என்பவர் சமசுகிருத மொழியில் விளக்க உரை எழுதியுள்ளார். [5]
கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு முடிய அசோகவதனம் நூல் பல பதிப்பாசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளது. [6] சைமன் கோல்மேன் மற்றும் ஜான் எல்சனர் போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி, கிமு 2ம் நூற்றாண்டிற்கு முன் வாய்மொழியாக பரப்பப்பட்ட அசோகவதனம் நூல், கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடிகளில் பதிக்கப்பட்டது என அறியப்படுகிறது.[7]
அசோகரின் ஆன்மீக குருவான உபகுப்தரின் முந்தைய பிறவிகள், தற்போதைய பிறப்பு, உபகுப்தர் இளமையில் மதுராவில் கழித்த பொழுதுகள் குறித்தான விவரங்களுடன் அசோகவதனம் நூல் துவங்கிறது. சித்தார்த்தர் போதிசத்துவ நிலையை அடைவதற்கு முன்னர், உருவேலா வனத்தில் மாறனுடன் நடைபெற்ற உரையாடலும், முடிவில் புத்தர் மாறனை வென்ற நிகழ்வும் இந்நூலில் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது.[4]
இளமையில் உடல் தோற்றப் பொலிவு குறைந்த அசோகரை, மகத மன்னரான அவரது தந்தை விரும்பவில்லை என்பதையும், அசோகர் தனது சிற்றன்னையின் மகனைக் கொன்றதையும், மகத நாட்டின் ஐநூறு அமைச்சர்களைக் கொன்றதையும், பின்னர் தானே மகத நாட்டு மன்னர் என அறிவித்துக் கொண்டதையும் விளக்குகிறது. அந்தப்புரப் பெண்களில் சிலர், அசோகரின் உடல் தோற்றத்தை அவமரியாதை செய்ததால், அவர்களை தீயில் தள்ளி எரித்துள்ளார். மேலும் தன்னை அவமரியாதை செய்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் சித்திரவதை செய்ய, அரண்மனை வளாகத்தில் அசோகரின் நரகம் என அழைக்கப்பட்டப் பெரிய சித்திரவதை கூடத்தை நிறுவினார்.[3]
ஒரு முறை சாதுவான ஒரு பௌத்த பிக்குவைச் சந்தித்த பின்னரே, அசோகர் அன்பு மற்றும் சமாதானத்தின் பெருமையை உணர்ந்து பௌத்த சமயத்தை பின்பற்றத் துவங்கி, தனது பேரரசில் 84,000 பௌத்த தூபிகளை நிறுவினார். [8].
அசோகவதனம் நூல், பௌத்த சமயத்தை மௌரியப் பேரரசு முழுவதும் பரப்பிய நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. அசோகர் முதலில் தனது உடன்பிறந்தவரான விதாசோகரை பௌத்த சமயத்திற்கு மாற்றினார். பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள், பேரரசில் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என தனது அமைச்சர்களுக்கு அசோகர் ஆணையிட்டார். பின்னர் உபகுப்தருடன் அசோகர், புத்தர் தங்கியிருந்த இடங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார்.
புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தரின் அறிவுரைப்படி, அந்தணரான பிந்தோல பரத்துவாஜர் என்பவர் பௌத்த சமயத்தில் சேர்ந்த நிகழ்வை பிக்குகள் கொண்டாடும் விதமாக, ஐந்தாண்டு பெருந்திருவிழாவிற்கு அசோகர் ஏற்பாடு செய்தார். [8]
இந்நூலில் அசோகரின் இளையராணி திஸ்யாரக்சிதாவின் தூண்டுதலில் பேரில், அசோகரின் மகனான குணாளனின் கண்கள் பிடுங்கப்பட்டதையும், பின் குணாளன் பௌத்த பிக்குவாக மாறி போதி ஞானத்தை அடைந்ததையும், இறுதியில் குணாளன் தந்தையான அசோகரிடம் மீண்ட கதையும் கூறப்பட்டுள்ளது. [9] இலங்கையில் பௌத்த சமயம் பரப்பியவராக மகாவம்சம் மற்றும் தீப வம்ச நூல்களில் அறியப்படும் அசோகரின் மகனான மகிந்தனைக் குறித்து இந்நூலில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
அசோகர் பௌத்த சமயத்திற்கு மாறிய பின்னரும் இரண்டு கொடுஞ்செயல்களைச் செய்ததைக் குறித்து அசோகவதனம் நூல் விளக்குகிறது. ஒரு நிகழ்வில், கௌதம புத்தர், மகாவீரர் காலடியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியத்தை வரைந்த சமணத் துறவியைக் கைது செய்து கொல்ல ஆணையிட்டதாகக் குறிப்பிடுகிறது. மற்றொரு நிகழ்வில் மௌரியப் பேரரசில் வாழ்ந்த 18,000 ஆசீவகத் துறவிகளை கொல்ல அசோகர் ஆணையிட்டதாக கூறுகிறது.[10]
சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு ஆசீவகர், புத்தரை இழிவு படுத்தி ஓவியம் வரைந்தமைக்கு, அசோகர் ஆசீவகரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் வீட்டில் வைத்து உயிருடன் எரித்ததாகக் கூறுகிறது.[11]
சமணத் துறவிகளின் தலையைக் கொய்து கொண்டு வருபவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் பரிசளிக்கப்படும் என அசோகர் அறிவித்ததையும் இந்நூலில் விளக்கப்படுகிறது. அசோகரின் இந்த ஆணைப்படி, ஒரு இடையர் அசோகரது தம்பியும், பௌத்த துறவியுமான விதாசோகரை, சமணத் துறவி எனத் தவறாக நினைத்து, விதாசோகரின் தலையைத் துண்டித்தான். பின்னர் சமணத் துறவிகளின் தலையைத் துண்டிக்கும் ஆணையை, அமைச்சர்களின் ஆலோசனையின் படி, அசோகர் ரத்து செய்தார். [12]
அசோகவதனம் நூலின் படி, இறுதியில் அசோகர், மௌரியப் பேரரசைத் துறந்து, பிக்குவாக மாறி பௌத்த சங்கத்தில் இணைந்து கொண்டார். [3]
மௌரியப் பேரரசை கைப்பற்றிய புஷ்யமித்திர சுங்கன் (கிமு 185–151) குறித்தான தகவல்களுடன் அசோகவதனம் நூல் நிறைவடைகிறது. இந்நூலில் புஷ்யமித்திர சுங்கன் மௌரியக் குடும்பத்தினராக தவறாக குறித்துள்ளது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.