மருதமலை
மருதமலை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள ஒரு மலை ஆகும். இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. ஆனால் இது தற்போது கோவை மாநகராட்சியின் வார்டு எண் 17-ல் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.