2 பேதுரு (நூல்)

திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia

2 பேதுரு (நூல்)

2 பேதுரு அல்லது பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] of Peter) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்திரண்டாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou B (Επιστολή Πέτρου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II Petri எனவும் உள்ளது.

பேதுரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: எருசலேம்.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம் என்றிருந்தது.

பேதுருவின் முதல் திருமுகம் போலவே இதுவும் திருமுகப் பாணியில் அமைந்த மறையுரையே. யூதா திருமுகத்தோடு இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக் கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம்.பிற்கால மடலாக இருப்பதால் இது கிறிஸ்துவைப் பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துகளைக் குறிப்பிடுகிறது[2].

2 பேதுரு திருமுகத்தின் ஆசிரியர்

இத்திருமுக ஆசிரியர் தம்மை "இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு" என எழுதினாலும் பேதுருதான் இத்திருமுகத்தை எழுதினார் என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. ஏனெனில் பேதுரு வாழ்ந்தபோது இறுதி வருகை பற்றிப் பெரும் ஐயப்பாடு எதுவும் எழவில்லை. இது பிற்காலச் சூழ்நிலை ஆகும் (2 பேது 3:2-4). எனவே பேதுருவின் வாரிசுகளில் ஒருவர் அவர் பாணியில் இத்திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும்.

2 பேதுரு எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

இத்திருமுகத்தின் சூழலும் நோக்கமும் தெளிவாக இல்லை. யாருக்கு எழுதப்பட்டது என்றும் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. அக்காலத்தில் பல போலிப் போதகர்கள் தோன்றி உண்மையைத் திரித்து மக்களைத் தவறான நெறியில் வாழத் தூண்டினர் (2 பேது 2:2). இச்சூழ்நிலை இக்கடிதத்தை எழுத வைத்திருக்கலாம்.

2 பேதுரு திருமுகத்தின் உள்ளடக்கம்

வாசகர்கள் கடவுளைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உண்மையான அறிவைப் பெற வேண்டும். இந்த அறிவு இயேசுவை நேரில் பார்த்தும் அவர் போதனைகளைக் கேட்டும் இருந்த திருத்தூதர்களால் தரப்பட்டுள்ளது.

கிறிஸ்து இனி வரமாட்டார் எனச் சிலர் பேசிவந்ததால் அவர் வருவது உறுதி என்பதை மீண்டும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; எவரும் அழிந்துவிடாமல், எல்லாரும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து வரக் காலம் தாழ்த்துகிறார் என்கிறார்.

2 பேதுரு திருமுகத்திலிருந்து சில பகுதிகள்

2 பேதுரு 1:3-8

"தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார்.
அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத்
தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார்.
தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள்.
இதற்கென்றே கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும்,
தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும்,
இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும்,
இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள்
சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது."

2 பேதுரு 3:8-9, 13, 18

"அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம்.
ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும்,
ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.
ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை.
மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார்.
யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்...
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும்
புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்...
நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள்.
அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்."

1 பேதுரு திருமுகத்தின் உட்பிரிவுகள்

மேலதிகத் தகவல்கள் பொருளடக்கம் - பகுதிப் பிரிவு, அதிகாரம் - வசனம் பிரிவு ...
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 450
2. கிறிஸ்தவ அழைப்பு 1:3-21 450 - 451
3. போலி இறைவாக்கினர்களும் போலிப் போதகர்களும் 2:1-22 451 - 452
4. ஆண்டவருடைய வருகை 3:1-18 452 - 453
மூடு

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.