2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்
| |
---|---|
நாள் | 8 ஜூன் 2014 |
தாக்குதல் வகை | தீவிரவாதத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 36 (10 தீவிரவாதிகள் உட்பட)[1] |
காயமடைந்தோர் | 18 |
தாக்கியோர் | பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் |
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தியதி பாக்கிஸ்தானில் அமைந்துள்ள ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தை பத்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று தாக்கியது. இந்த வானூர்தி நிலையம் கராச்சி நகரில் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 36 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் தீவிரவாதிகள் ஆவார். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.[1]
தாக்குதல்
8 ஆம் தியதி இரவு 11:20 க்கு ஆரம்பித்த தீவிரவாதிகளின் தாக்குதல் 9 ஆம் தியதி காலை அன்று வரை நடந்தது. தீவிரவாதிகள் பாதுகாப்புக் காவலாளிகளின் தடுப்பு அரண் வழியாக ஊர்தி (van) ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் சரக்கு விமான முனைக்கு தானியங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை வெடிகுண்டுகள் மற்றும் பிற வெடிபொருட்களோடு ஊடுருவினர்.[2] தீவிரவாதிகள் விமான நிலையப் பாதுகாப்பு வீரர்களைப் போன்ற சீருடை அணிந்திருந்தனர். அவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலுக்கான உடையையும் (suicide vests) அணிந்திருந்தனர். மேலும் விமான நிலையப் பாதுகாப்பு வீரர்களைப் போன்ற போலி அடையாள அட்டையையும் பயன்படுத்தி விமான நிலையத்தினுள் நுழைந்தனர்.[1] தீவிரவாதிகள் விமானம் ஒன்றைக் கடத்த முயற்சித்ததாகவும், ஆனால் அம்முயற்சி வெற்றியடையவில்லை எனவும் பாக்கிஸ்தானின் உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.[3]
தாக்குதல் தொடங்கி 90 நிமிடங்களுக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான சிறப்பு பாதுகாப்பு வீரர்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுடன் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர்.[4] தீவிரவாதிகள் முதலில் கட்டுப்பாட்டு அறையையும், ஓடுதளத்தையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். சிறிது நேரத்தில் 8 தீவிரவாதிகள் ராணுவச் சிறப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ள இருவரும் முடக்கப்பட்டனர்.[5][4] ஐந்து மணி நேரங்களுக்கும் பின்னர் இத்தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. இதில் 23 பேர் கொல்லப்பட்டனர், இதில் 10 தீவிரவாதிகளும், 9 ராணுவ வீரர்கள், இரண்டு பாக்கிஸ்தான் சர்வதேச விமான அதிகாரிகளும் மற்றும் ஒரு ரோந்து அதிகாரியும் அடங்குவர்.[6] காயமடைந்த 18 பேரும் அப்பாசி ஷாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[2]
தாக்குதலுக்குப் பின்
இவ்விமான நிலையத்தின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இராணுவவீரர்களின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் உள்ளது. விமானங்கள் அனைத்தும் வேறு விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டன.[1] மேலும் காலையில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் தொடர்வதாகவும், விமான நிலையத்தில் சோதனைகள் நடைபெறுவதாகவும் பிபிசி செய்தி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.[7]
டெகரிக்-இ-தாலிபான்
இத்தாக்குதலுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[8]
பாகிஸ்தானின் கிராமங்கள் மீது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்காகப் பேசிய ஷாஹிதுல்லா ஷாஹித் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.[9]
மீண்டும் தாக்குதல்
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தியதி பிற்பகல் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஏ.எஸ்.எஃப் அகெடமியில் துப்பாக்கிச் சத்தங்கள் மேலும் வெடிகுண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்டன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபானைச் சேர்ந்த ஓமர் ஹோரசானி (Omar Khorasani ) தனது டிவிட்டர் தளத்தில், "செவ்வாயன்று இரண்டாவது தாக்குதலைத் நடத்தினர்" எனக் குறிப்பிட்டார்.[10] இத்தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்கான ஆடையை அணிந்திருந்தனர். மேலும் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.[11]
தொடர்புடைய நிகழ்வுகள்
விமானங்கள் ரத்து
இத்தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேத்தே பசிபிக் விமான நிறுவனம், கராச்சிக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது.[12] இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 0.28 சதவீதம் ஹாங்காங் பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்தன.[13]
சந்திப்பு ரத்து
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் பாக்கிஸ்தான் அதிபரைச் சந்திப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இத்தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அவரின் பயணம் கடைசி நேரத்தில் காரணம் குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.[14] பாதுகாப்புப் காரணங்களுக்காகவே மாலத்தீவின் அதிபர் இப்பயணத்தினை ரத்து செய்தார் என பாக்கிஸ்தானிலிருந்து வெளியாகும் டாண் தினசரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.[15]
விளையாட்டு ரத்து
அயர்லாந்து கிரிக்கெட் அணியினர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் விளையாடுவதாகத் திட்டமிட்டிருந்தச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தனர்.[16] ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் காரணங்களுக்காக இச்சுற்றுப் பயணத்தை அயர்லாந்து அணியினர் ரத்து செய்தனர்.[17]
நடவடிக்கைகள்
இத்தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என அறியப்பட்ட அபு அப்துல் ரஹ்மான் அப் மானி வடக்கு வஸிரிஸ்த்தான்னில் பாக்கிஸ்தானிய விமானப்படையும், இராண் உவவும் இணைந்து நடத்திய தாக்குதலில் 15 ஜூன் 2014 அன்று காலை கொல்லப்பட்டார்.[18][19] இவர் உஸ்பெக்கித்தான் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர் ஆவார்.[20]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.