பண்டையக் கிரேக்க இதிகாசக் கவிஞர் From Wikipedia, the free encyclopedia
ஓமர் (Homer) என்பவர் பண்டையக் கிரேக்க இலக்கியத்தின் பெருங்காப்பியப் படைப்புகளான இலியது, ஒடிசி ஆகியவற்றை எழுதிய புகழ்பெற்ற இதிகாசக் கவிஞர் ஆவார். ஓமர் என்பவர் உண்மையில் வாழ்ந்தாரா, ஒடிசியும் இலியதும் அவரால் படைக்கப்பட்டனவா என்பது குறித்து மேனாட்டு அறிஞர்களிடையே ஐயமும் ஆராய்ச்சி விவாதங்களும் இருந்து வந்ததுண்டு. இன்றைய அறிஞர்கள் ஓமர் என்ற ஒரு கவிஞனே இவ்விரண்டு காவியங்களையும் படைத்தவன் என்று பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த ஓமர் என்பவர் யார், எங்கே வாழ்ந்தார், அவர் வாழ்ந்த காலம் எது என்பனவற்றைப் பற்றி திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லை. கிரேக்கர்கள் திராய் நகரை பத்து ஆண்டுகள் முற்றுகையிட்டு இறுதியில் அந்நகரை அழித்த கதையை இலியது காவியம் கூறுகிறது. திராய் போரின் கடைசி ஆண்டில் மன்னன் அகமோம்னனுக்கும் மாவீரனாகக் கருதப்படும் கிரேக்க கதாநாயகன்அக்கீலியசுக்கும் இடையில் நடந்த போரின்போது சில வாரங்கள் நீடித்த சண்டையில் இலியத் கவனம் செலுத்துகிறது. திராய் நகர் வீழ்ச்சியின்போது ஒடிசியசு என்ற மன்னன் தன்னுடைய நாடான இதாகா தீவுக்குத் திரும்ப முற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் தன் தாய்நாடு சேர்ந்த கதையை ஒடிசி காவியம் கூறுகிறது.
ஓமர் பற்றிய நம்பத் தகுந்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் செந்நெறிக் காலத்தில் இருந்தே கிடைக்கவில்லை. எத்தனையோ கதைகள் தோன்றி ஓமரின் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டன. இன்றைய துருக்கியிலுள்ள அனடோலியா கடற்கரையோரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஐயோனியாப் பகுதியிலிருந்து வந்தவர் ஓமர் என்று கருதப்படுகிறது. சிறுவன் ஒருவனைத் துணையாகக் கொண்டு கிரேக்க நகரமெங்கும் பாடல்களைப் பாடிக்கொண்டு போகும் பாணன் என்பது அவரைப் பற்றி வழங்கி வரும் பழமையான கதைகளில் ஒன்றாகும் [1][2][3]
இலியத், ஒடிசி காவியங்கள் யாரால், எப்போது, எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டவை போன்ற செய்திகள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. பரவலாகப் பேசும் நவீன அறிஞர்களின் கருத்து இவற்றுக்கான விடைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. ஓமர் என்ற தனிப்பெரும் கவிஞனே இலியத் என்ற காவியத்தசியும் ஒடிசி என்ற காவியத்தையும் இயற்றினான் என்கிறது ஒரு பிரிவு. பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் பாடப்பட்டு வந்த வீரச்சுவை மிகுந்த பாடல்கள் காலப்போக்கில் பெருங்காப்பியங்களாக தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பில் முக்கியப்பங்கு ஆற்றியவர் ஓமர் என்று மறு பிரிவும் கூறுகின்றன [3]. ஆனாலும், இவ்விரு இதிகாசங்களும் 2800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட காவியங்கள் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது [4]. ஐயோலிக், அயோனியன் போன்ற பிராந்தியக் கிரேக்க மொழிகள் கலந்த ஒரு மொழி ஓமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கிழக்கத்திய அயோனிக் மொழியின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் கருதப்படுகிறது [5][6].
பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இவ்விரு காவியங்களும் வாய்மொழி இலக்கியங்களாக தலைமுறைகள் கடந்து வந்தவையாக இருக்கலாம் என நம்புகின்றனர் [7].
கி.மு. எட்டாவது நூற்றாண்டுக்கு முந்தைய கிரேக்கச் சொற்கள் ஓமரின் நடையில் இடம்பெற்றுள்ளன. பழங்காலத்தில் இருந்து இன்றைய வரை மேற்கத்திய நாகரிகத்தின் மீது ஓமரின் புராணங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இலக்கியம், இசை, கலை மற்றும் திரைப்படம் போன்ற மிக பிரபலமான படைப்புகளில் இவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது [8]. ஓமரின் புராணங்கள் பண்டைய கிரேக்க கலாச்சாரம் மற்றும் கல்வியில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டிருந்தன; பிளேட்டோவிற்கு, ஓமர் வெறுமனே கிரேக்கத்தைக் கற்பித்தவர் என்று எளிமையாகச் சொல்வர் [9][10].
இன்று இலியத்தும் ஒடிசியும் மட்டுமே ஓமர் என்ற பெயருடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன. பண்டைய காலத்தில் ஓமர் பல படைப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. ஓமர் வாழ்க்கையைச் சுற்றியிருக்கும் புராணங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், பண்டைய கிரேக்க கலாசாரத்திற்கு மையமாக இருப்பதைக் காட்டிலும் ஓமருக்கு மிகக் குறைவாக உள்ளன[11][12][13].
பண்டைய உலகில் ஓமர் குறித்து பல மரபுகள் உலவி வந்தன. ப்மின்னாளில் அவையனைத்தும் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வரலாற்றில் எந்த மதிப்பும் இல்லை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். சில கதைகள் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. ஓமர் குருடாக இருந்தார் என்பது அவருடைய ஒடிசியில் டெமோடோக்சு என்ற பாத்திரப்படைப்புக்காக (அவர் குருட்டுத் தன்மையும் திமிர்த்தனமுமான பாணனாக புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்[14][15]),. ஓமர் சியோசில் பிறந்தார், அவர் தேவமங்கையான மெலிசு ஆற்றின் மகனாகப் பிறந்து ஒரு பாடகனாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார், அவர் பல்வேறு படைப்புகளை ஓமரிகா என்ற பட்டியலாக எழுதியுள்ளார். ஒரு மீனவனின் விடுகதையை விடுவிக்கமுடியாமல் ஓமர் ஐயோசில் இறந்தார் என்று ஓமரைப்பற்றி பலகதைகள் அந்நாளில் உலவிவந்தன. சூடோ-இரோடோட்டசு எழுதிய ஓமரின் வாழ்க்கை வரலாறு, ஓமரும் எசியாதும் என்ற இரண்டு நூல்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்களாகக் கருதப்படுகின்றன[16][17].
ஓமர் பற்றிய ஆய்வு பழமையான தொல்பொருள் ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் பழமையான தலைப்புகளில் ஒன்றாகும். ஓமர் குறித்த ஆய்வு நோக்கங்கள் ஆயிரக்கணக்கில் நீண்டன. முதலில் ஓமர் கவிதைகளுக்கான ஒரு பொழிப்புரையை எழுத பண்டைய கிரேக்க அறிஞர்கள் முற்பட்டனர். கடினமான மொழி நடையில் இருந்த கலாச்சார அல்லது மொழியியல் சிறப்புகளை விளக்க முயன்றனர் [18]. தெசலோனிக்காவின் யூசுடாத்தியசு மற்றும் யான் செட்சேசு போன்ற பைசாந்திய நாட்டு அறிஞர்கள் குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டில் ஓமரின் பாடல்களில் இருந்த கருத்துக்களை விளக்கி நீட்டித்து உரைகள் தயாரித்தனர்[19]. மறுமலர்ச்சிக் காலத்தில் விர்கிலின் ஆய்வுகள் பரவலாக வாசிக்கப்பட்டன. இதில் ஓமர் விர்கிலின் பார்வையில் அலசப்பட்டிருந்தார்[20]. பிரீட்ரிக் ஆகத்து வொல்ப்பின் ஆய்வுகள் ஓமர் இலக்கியம் குறித்த நவீன பார்வையை முன்வைத்தது. வாய்மொழியாகப் பாடப்பட்டுவந்த பாடல்கள் பல்வேறு எழுத்தாளர்கள் அடங்கிய பெரிய குழுவால் சின்ன சின்னப் பாடல்களாக எழுதப்பட்டு பின்னாளில் தொகுக்கப்பட்டன என்ற வாதம் எழுந்தது. வொல்ப்பும் அவருடைய ஆய்வுக்குழுவினரும் 19 ஆம் நூற்றாண்டில் ஓமரின் இலக்கியம் குறித்த இத்தகைய பார்வையை வழிநடத்தியது. அசலான உண்மையான கவிதைகளை மீட்டெடுக்கவும் முயன்றது. இதற்கு மாறாக பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை அனைத்தும் ஓமரால் ஈர்க்கப்பட்ட தனியொரு கவிஞரால் சேர்க்கப்பட்டவை என தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபையினர் வாதிட்டனர் [21][22].
20 ஆம் நூற்றாண்டில், மில்மான் பாரி மற்றும் ஆல்பர்ட் லார்ட் ஆகியோர் பால்கன் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்து முடித்த பிறகு வாய்மொழி அமைப்புக் கோட்பாட்டை உருவாக்கினர். ஓமரின் கவிதைகள் அசலாகவே வளர்ச்சிகண்டவை என்று அவர்கள் கூறினர். இக்கோட்பாடு அறிஞர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது[23]. பகுப்பாளர்களுக்கும் தனியொருமையை வலியுறுத்தும் திருச்சபையினருக்கும் இடயே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டுமென புதிய பகுப்பாளர்கள் எதிர்நோக்கினர். இன்றும் ஓமரைக் குறித்த ஆய்வுகள் அறிஞர்களிடையே தொடர்ந்து வருகிறது. இதிகாசங்களின் தோற்றம் பற்றிய பிற கேள்விகளில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் இலியத்தும் ஒடிசியும் ஒரே நபரால் உருவாக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். கதை விரிவடையும் முறை, இறையியல் கோட்பாடுகள், நன்னெறிகள், சொல்லகராதி மற்றும் புவியியல் கண்ணோட்டத்திலுள்ள பல வேறுபாடுகள் போன்றவை இதற்கு காரணமாகும் [24][25][26]. ஓமருடைய இதிகாசங்கள் காலத்தால் வேறுபட்டாலும் மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் கொண்டவையாக உள்ளன என்பதை பல அறிஞர்களின் கருத்துகள் சொல்லித்தான் வருகின்றன.
திராய் போருக்கு ஓமர் ஒரு முக்கியமான சாட்சி என்று சில பண்டைய அரிஞர்கள் கருதுகிறார்கள். போருக்கு பின்னர் 500 ஆண்டுகள் கழித்து அவர் வாழ்ந்ததாக சிலர் கருதுகின்றனர் [27]. சமகாலத்து அறிஞர்கள் கவிதைகள் உருவான நாளைப் பற்றிய விவாதத்தைத் தொடர்கிறார்கள். ரிச்சர்டு யாங்கோ போன்றவர்கள் கி.மு எட்டாம் நூற்றாண்டு என்றும் கிரிகோரி நாகி போன்றவர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றும் தங்கள் முடிவை தெரிவித்துள்ளனர் [28][29].
இலியது காவியத்திற்கு எசியாடு அடிப்படை என்பதால் இதன் காலம் கி.மு. 660-650 ஆகியவற்றுக்கு இடையிலான காலமாக இருக்கலாம் என மார்டின் வெசுடு கருதுகிறார் [30][31]. வாய்வழி பரிமாற்றத்தின் நீண்ட வரலாறு இக்கவிதைகளின் தொகுப்பிற்கு பின்னால் இருப்பதால் துல்லியமான காலத்தை கணிப்பது சீர்குலைகிறது [32]
ஆல்பிரெட் எயுபெக் என்பவர் ஓமரின் ஆக்கங்கள், கிரேக்கப் பண்பாடு முழுமைக்குமான வளர்ச்சிக்கு வடிவம் கொடுத்ததோடு அதன்மீது செல்வாக்குச் செலுத்தியதையும் பல கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் அவரைத் தமது குருவாகக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறுகிறார். ஓமர் 'என்ற பெயரே அறியப்படாத சொற்பிறப்பியல் வழியில் தோன்றிய பெயராகும், இதன் மூலம் பல கோட்பாடுகள் பழங்காலத்தில் நிறுவப்பட்டன. ஓமர் என்றால் பாடலுடன் ஒருங்கிணைந்தவன் என்று கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது
Seamless Wikipedia browsing. On steroids.