வேதியியலாளர்

From Wikipedia, the free encyclopedia

வேதியியலாளர்

ஒரு வேதியியலாளர் (A chemist) (from Greek chēm (ía) alchemy; replacing chymist from Medieval Latin alchimista[1]) என்பவர் வேதியியல் ஆய்வுகளில் பயிற்சி பெற்ற ஒரு அறிவியலாளர் ஆவார். வேதியியலாளர்கள் பொருட்களின் இயைபு மற்றும் அவற்றின் பண்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்கள். வேதியியலாளர்கள் மிகக் கவனமாக மூலக்கூறுகளைப் பற்றி அவற்றில் இயைந்துள்ள அணுக்கள் பற்றி விரிவாகவும் அளவுகளின் வாயிலாகவும் குறிப்பிடுகிறார்கள். வேதியியலாளர்கள் மிகக்கவனமாக பொருட்களின் விகிதாச்சார இயைபுகள், வினையின் வேகங்கள், மற்றும்  இதர வேதிப்பண்புகளை  அளந்தறிகிறார்கள்.  வேதியியலாளர்  என்ற  வார்த்தை  பொதுநலவாய  ஆங்கிலத்தில்  மருந்தாளுநர்களைக் குறிப்பிடும் வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலாளர்கள் தங்களின் இந்த அறிவை பொருட்களின் இயைபு மற்றும் பண்புகளை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துகின்றனர். அதே போல், பெருமளவில் பயனுள்ள இயற்கையாக கிடைக்கும் பொருட்களை ஆய்வகத்தில் மறு ஆக்கம் செய்வது, தொகுப்பது மற்றும் புதிய செயற்கை பொருட்கள், பயனுள்ள செயல்முறைகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் வேதியியலாளர்கள் செய்கிறார்கள். வேதியியலின் எந்தவொரு உட்பிரிவுகளிலும் வேதியியலாளர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம். பொருளியல் அறிவியலாளர்கள் மற்றும் உலோகவியல் வல்லுநர்கள் ஆகியோர் வேதியியலாளர்களுடன் தங்கள் திறமைகளையும், அறிவையும் பகிர்ந்துகொள்கின்றனர். வேதியியலாளர்களின் வேலை பெரும்பாலும் வேதியியல் பொறியியலாளர்களின் பணியுடன் தொடர்புடையது, அவை, மிகவும் இலாபகரமான அளவில் பெரிய அளவிலான இரசாயன ஆலைகளின் முறையான வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் மதிப்பீட்டைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர். மேலும், புதிய செயல்முறைகளை மேம்படுத்துவதில் தொழில்துறை வேதியியலாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்கின்றனர். வேதிப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களின் வணிக அளவிலான உற்பத்திக்கான வழிமுறைகளை உருவாக்குவதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

Thumb
கேப்ரியேல் மெட்சு என்பவரால் வரையப்பட்ட மருந்து செய்பவர் அல்லது வேதியியலாளர் (c. 1651–67).

வேதியியலின் வரலாறு

Thumb
ருஷ்ய வேதியியலாளர் திமீத்ரி மெண்டலீவ் - முதல் தனிம வரிசை அட்டவணையின் உருவாக்குநர்

வேதியியலின் வேர்கள் எரிதல் நிகழ்விலிருந்து தொடங்கப்படலாம். நெருப்பு ஒரு மாய சக்தியைப் போன்று இருந்தது. அது ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியது. இதனால் மனிதகுலத்திற்கு நெருப்பைப் பற்றி அறிவதில் முக்கிய ஆர்வம் இருந்தது. நெருப்பே இரும்பு மற்றும் கண்ணாடியின் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகமாக மாறியதும், மற்ற பொருள்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டுபிடிப்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இது ரசவாதம் என அழைக்கப்படும் பிரிவிற்கு வழிவகுத்தது. வேதியியல் என்பது அல்கிமிஸ்டா (இரசவாதி என்பதன் சுருக்கமான, புதிய இலத்தீன் பெயர்ச்சொல் கிமிஸ்டா என்பதிலிருந்து பெறப்பட்டது. நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல வேதியியல் செயல்முறைகள் வேதியியல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1783 ஆம் ஆண்டில் வேதியியல் அந்துவான் இலவாசியே என்பவரால் பொருண்மை அழியா விதி கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் தனிமங்களின் கண்டுபிடிப்பு, தனிம வரிசை அட்டவணை உருவாக்குவதற்கான முயற்சியின் நீண்ட வரலாறு, திமீத்ரி மெண்டலீவால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணை போன்றவை தற்காலத்தில் நாம் படிக்கும் வேதியியலுக்கான அடிப்படையாக இருந்தன எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசு ஒரு சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.

வேதியியலுக்கான வேலைகளுக்காக பொதுவாக குறைந்தபட்சம் ஒரு இளங்கலை பட்டம் வேண்டியுள்ளது. ஆனால், பல நிலைகளில், குறிப்பாக ஆராய்ச்சிகளில், முதுகலை அறிவியல் அல்லது ஆய்வியல் நிறைஞர் (PhD) பட்டம் தேவைப்படுகிறது. வேதியியல் என்பது அறிவியலின் மையமாகக் கருதப்படுகிறது. இதனால் வேதியியலாளர்கள் அறிவியலைப் பற்றிய நன்கு அறியப்பட்ட முழுமையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான இளங்கலை பட்டப்படிப்புகள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. முதுகலைப் பட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள படிப்புகளில் மாணவர்கள் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணத்துவம் பெறுகின்றனர். உயிர் வேதியியல், அணுசக்தி வேதியியல், கரிம வேதியியல், கனிம வேதியியல், பலபடி வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், இயற்பியல் வேதியியல், கருத்தியல் வேதியியல், குவாண்டம் வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் வெப்ப இயக்கவியல் வேதியியல் போன்ற பல சிறப்பு வாய்ந்த பிரிவுகள் வேதியியலில் உள்ளன. சில பணிகளுக்கு ஆராய்ச்சி பட்டத்திற்குப் பிறகான பணி அனுபவம் தேவைப்படலாம்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.