From Wikipedia, the free encyclopedia
புவிநடுக்கவியலின்படி (Seismology), புவியின் கருவம் (core) இரண்டு பாகங்களைக் கொண்டது. அவை உட் கருவம் மற்றும் வெளிக் கருவம் (Outer core) ஆகும். இந்த புவியின் வெளிக் கருவத்தின் அடுக்கு சுமார் 2,266 கிமீ (1.408 மைல்) தடித்தது. இது இரும்பு-நிக்கல் உலோகக்கவையினால் ஆனது. மேலும், இது மூடகத்திற்கும் மற்றும் உட் கருவத்திற்கும் இடையில் புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 5,150 கிமீ (3,200 மைல்) கீழே அமைந்துள்ளது.
வெளிக் கருவத்தின் வெப்பநிலை வெளிப்பகுதிகளில் 4400 டிகிரி செல்சியஸ் (8000 °F) வரையும், உட் கருவத்தின் அருகே 6100 டிகிரி செல்சியஸ் (11000 °F) வரையும் இருக்கிறது. அதை கணினியில் மாதிரி செய்து பார்த்த போது அதன் உயர் வெப்பநிலை காரணமாக, வெளிக்கருவம் மிகக் குறைந்த கூழ்மத்தன்மை உடைய திரவ நிலையில் இருப்பது தெரிய வருகிறது. மேலும், இதனால் தான் இதற்குக் கொந்தளிப்பு தன்மையும் உள்ளது என கருதப்படுகிறது[1]. இந்த இரும்பு-நிக்கல் உலோகக்கலவை கூழ்மத்தன்மை காரணமாக புவி சுழலும் போது வெளிக் கருவமும் சுழல்கிறது. இந்தச் சுழலோட்டம் காரணமாகத்தான் புவியின் காந்தப்புலம் உருவாகிறது என நம்பப்படுகிறது. இந்தக் காந்தப்புலத்தின் வலிமை புவியின் வெளிக் கருவத்தில் 25 காஸ் (Gauss) ஆகும். இது புவியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகம்[2][3]. உட் கருவத்தில் உள்ள அதே இரும்பு-நிக்கல் உலோகக்கலவை இதிலும் இருந்த போதிலும் இதன் அழுத்தம் உட்கருவத்தின் அதீத அழுத்தத்திற்கு இணையாக இல்லை (அதீத அழுத்ததில் இரும்பு தனது அணு பிணைப்பை விடுவித்து உருக முடியாது). எனவே, வெளிக் கருவம் திரவ நிலையில் உள்ளது. கந்தகம் மற்றும் ஆக்சிசனும் இதில் இருக்கலாம்.[4]
இதன் வெப்பம் மூடகத்தை நோக்கிச் செல்வதால் உட் கருவம் உறைந்து விரிவடைகிறது. இந்த விரிவடைதல் வருடத்திற்கு 1மி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.[5]
சூடான இரும்பு அணுக்கள் தொடர்ச்சியாக நகரும் போது காந்தப்புலம் உருவாகிறது. அதே போல, புவியின் அடியில் சூடான இரும்பு (வெளிக் கருவம்) திரவ நிலையில் சுழல்வதால் புவியின் காந்தப்புலம் உருவாகிறது. இந்த புவியின் காந்தப்புலம் இல்லையென்றால் நாம் சூரியனின் காஸ்மிக் கதிர்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவோம்.
Seamless Wikipedia browsing. On steroids.