From Wikipedia, the free encyclopedia
பொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். எளிமையான மிகச் சிறிய குடிசைகள் முதல் சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட பெரிய மாளிகைகள் வரையான கட்டிடங்களை வீடு என்னும் பொதுப் பெயரால் குறிக்கலாம். பல்வேறு அடிப்படைகளில் வீடுகளைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். பயன்படும் கட்டிடப் பொருட்களின் அடிப்படையில் வீடுகளைத் தற்காலிகமானவை அல்லது நிரந்தரமானவை என்றும்; கட்டுமானத் தன்மையின் அடிப்படையில் நிரந்தரமாக ஓரிடத்தில் அமையும் வீடுகள் அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய வீடுகள் என்றும்; அளவின் அடிப்படையில் குடிசைகள், மாளிகைகள் என்றும்; இவை போன்ற வேறு அடிப்படைகளிலும் வீடுகளை வகைப்படுத்த முடியும்.
மரபு வழியாக, நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தினரே ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இக் குடும்பம் தாய், தந்தை பிள்ளைகளை மட்டும் உள்ளடக்கிய தனிக் குடும்பமாகவோ, பல தலைமுறைகளையும், பல தனிக் குடும்பங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். சில வேளைகளில் இக் குடும்பங்களின் பணியாட்களும் அவர்களுடன் வாழ்வதுண்டு. தற்காலத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் உறவினரல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது பல தனியாட்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதும் உண்டு.
வீடு என்பதற்கு இணையாகத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இல், இல்லம், மனை, உறையுள், அகம் போன்றவை இவற்றுட் சில. பழந் தமிழ் இலக்கியங்களில் இல், இல்லம், மனை ஆகிய சொற்களே பெரும்பாலும் வழக்கில் இருந்தன. தற்போது எடுத்துக்கொண்ட பொருளில் வீடு என்னும் சொற் பயன்பாடு காலத்தால் பிற்பட்டது. வீட்டின் பல்வேறு வகைகளைக் குறிக்கப் பலவகையான சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குடில், குடிசை, குரம்பை, குறும்பு போன்ற சொற்கள் சிறிய உறையுள்களைக் குறித்தன. மனை, மாடம், நெடுநகர் போன்றவை நிலையான பெரிய வீடுகளைக் குறித்தன.
மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்றும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்றும் பொதுவான கருத்து உண்டு. எனினும், வீடுகளின் வரலாறு பற்றி எழுதிய நோபர்ட் இசுக்கோனர் (Norbert Schoenauer) என்பவர் இதை மறுத்து உலகின் பல பகுதிகளில் குடிசைகளே மக்களின் முதல் வாழிடங்களாக இருந்தன என்கிறார்[1]. வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவர வகை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன.
வளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எசுகிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்ற வகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.
மனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன.
முற்காலத்திலும், தற்காலத்தில், நகராக்கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன.
தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன.
நகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல் மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும்.
மிகவும் எளிமையான வீடுகள் அல்லது குடிசைகள் ஒரு அறையை மட்டும் கொண்டனவாக இருக்கலாம். இந்த ஒரு அறையிலேயே அவ்வீட்டில் வாழ்பவர்களின் பல வகையான செயற்பாடுகள் இடம்பெறும். பெறுமதியான பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைத்தல், பெண்கள் உறங்குதல், உடை மாற்றுதல் என்பன இத்தகைய செயற்பாடுகளிற் சில. இத்தகைய வீடுகளில் வாழ்பவர்கள் சில செயற்பாடுகளை வீட்டுக்கு அருகில் திறந்த வெளியிலேயே வைத்துக்கொள்வர். விருந்தினரை வரவேற்றல், சமையலுக்கான ஆயத்தங்கள் செய்தல், ஆண்கள் இளைப்பாறுதல் போன்றவை வீடுக்கு வெளியில் இடம்பெறக் கூடியவை. ஒரு அறையை மட்டும் கொண்ட வீடுகள் சிலவற்றில் வாயிலுக்கு முன் திண்ணை அல்லது விறாந்தை போன்ற அமைப்புக்கள் இருப்பது உண்டு. இது கூரையால் மேலே மூடப்பட்டிருந்தாலும், பக்கங்கள் பெரும்பாலும் திறந்திருக்கும். சூடான காலநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இவ்வாறான அமைப்புக்கள் பெரிதும் விருப்பத்துக்கு உரியனவாக உள்ளன. இவ்வாறான சில வீடுகளில் அவற்றில் ஒரு பக்கத்தில் தாழ்வாரத்தைச் சற்று நீட்டி அதன் கீழ் சமைப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. சற்றுக் கூடிய வசதி உள்ளவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியான சமையல் அறையைக் கட்டிக்கொள்வர். இவ்வாறு வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி வீட்டுக்கு அருகில் தனித்தனியான அமைப்புக்களைக் கட்டுவது உண்டு. இம்மாதிரியாக வெவ்வேறு செயற்பாடுகளுக்கான தனித்தனி அமைப்புக்களைக் கொண்ட வீடுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளுள் பெரும்பாலானவை மரம், மண், புல், ஓலை போன்ற நீடித்துழைக்காத பொருட்களால் ஆனவையாக இருக்கின்றன.
கூடிய பணவசதி உள்ளவர்கள் தமது தேவைக்கு ஏற்றபடி பல அறைகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவர். பல்வேறு செயற்பாடுகளுக்கும் தனித்தனியான அறைகளும், கூடங்களும் இவ்வீடுகளில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள் இருப்பதும் உண்டு. இவ்வாறான பெரிய வீடுகள் பெரும்பாலும், செங்கல், காங்கிறீட்டு, கூரை ஓடுகள், உலோகம் போன்ற நீடித்துழைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களால் கட்டப்படுகின்றன. பெரிய வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டவையாக அமைக்கப்படுவது உண்டு.
வீடுகள் உருவாகும் சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து, அவை, உள்நோக்கிய வகையினவாக அல்லது வெளி நோக்கிய வகையினவாக இருக்கலாம். பழமை பேணும் கீழைநாட்டுச் சமுதாயங்கள் பலவற்றில் மரபுவழி வீடுகள் உள்நோக்கிய தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இவ்வீடுகளில் வெளிப்புறம் திறப்பதற்கான பெரிய சாளரங்கள் காணப்படுவதில்லை. மாறாக வீட்டுக்கு நடுவே முற்றம் அமைக்கப்பட்டு அறைகளும் கூடங்களும் இம்முற்றத்துக்குத் திறந்திருக்கும்படி அமைக்கப்படுகின்றன. வெளிநோக்கிய தன்மை கொண்ட வீடுகள் பெரிய சாளரங்களைக் கொண்டவையாகவும், சுற்றிலும் மரங்கள், செடிகளுடன் கூடிய நிலத்தோற்ற அமைப்புக்களுடன் கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது சில அறைகளை அருகிலுள்ள திறந்த வெளிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்படியான வடிவமைப்புக்களும் இருப்பதுண்டு.
இன்றும் உலகில் கட்டப்படும் மிகப் பெரும்பாலான வீடுகளைக் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைப்பதில்லை. அத்தகைய வீடுகளில் பலவற்றை மரபுவழியான வடிவமைப்புக்களின் அடிப்படையிலேயே கட்டிக்கொள்கின்றனர். எனினும், பல தலைமுறைகளின் அனுபவத்தின் அடிப்படையிலான வடிவமைப்பில் அமைவதால், அதில் வாழ்பவர்களின் செயற்பாடுகளுக்கும், உடல் நலத்துக்கும், பண்பாட்டுத் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இவ்வீடுகள் அமைகின்றன. எப்படியானாலும், ஒரு வீட்டின் பல்வேறு பகுதிகளின் அமைவிடங்களும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் வீட்டு வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன. சமூக பண்பாட்டுக் காரணிகளைப் பொறுத்து வெவ்வேறு சமூக பண்பாட்டுச் சூழல்களில் இத்தகைய தொடர்புகளுக்கான தேவைகள் வேறுபட்டு அமைவது உண்டு. முக்கியமாகப் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளினால் இத்தொடர்புகள் தீர்மானிக்கப்பட்டாலும், சில சமுதாயங்களில், பல்வேறு வகையான நம்பிக்கைகளும்கூட வீட்டு வடிவமைப்பில் பங்கு வகிப்பதைக் காணலாம். சோதிடம், வாசுது, பெங் சுயி போன்றவற்றின் மீதான நம்பிக்கை இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
தற்காலத்தில் வீடுகளின் வடிவமைப்பில் மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கங்கள் பெருமளவில் காணப்படுவதால் செயற்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலான வடிவமைப்புக்களில் பெருமளவு பொதுமை காணப்படுகின்றது. மூன்று படுக்கை அறைகள், வரவேற்பறை, சாப்பாட்டறை என்பவற்றுடன் தொடர்புடைய பிற பகுதிகளையும் கொண்ட வீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை அருகில் உள்ள வரைபடம் காட்டுகிறது. விருந்தினர் அறை, வரவேற்பு அறை போன்ற வெளியார் வரக்கூடிய பகுதிகள் நுழைவாயிலுக்கு அண்மையில் அமைந்திருக்கும். வரவேற்பு அறைக்கு வரும் விருந்தினர்கள் சில வேளைகளில் சாப்பாட்டு அறைக்கும் செல்லவேண்டி இருக்கும் என்பதால் வரவேற்பு அறையில் இருந்து சாப்பாட்டு அறைக்கு நேரடித் தொடர்பு இருப்பது வழக்கம். சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலேயே சமையல் அறையும் இருக்கும். படுக்கை அறைகள் பொதுவாக வெளியார் வரக்கூடிய பகுதிகளில் இருந்து விலகி உட்புறமாக இருப்பது விரும்பப்படுகிறது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட வீடுகளில், வரவேற்பறை, சாப்பாட்டறை, விருந்தினர் அறை, சமையல் அறை போன்றவை நிலத் தளத்திலும் அமைத்துப் படுக்கை அறைகளைப் பெரும்பாலும் மேற்தளங்களில் அமைக்கின்றனர். தற்காலத்தில் ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனியான குளியல் அறையும் இருப்பது வழக்கம். விருந்தினர் பயன்படுத்துவதற்காக, வரவேற்பறை, சாப்பாட்டறை ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கழுவறை ஒன்றும் இருப்பது உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.