From Wikipedia, the free encyclopedia
லே-மணாலி நெடுஞ்சாலை (Leh–Manali Highway) வட இந்தியாவில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியையும், லடாக் ஒன்றியப் பகுதியின் லே நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இச்சாலையின் மொத்த நீளம் 430 கி.மீ. ஆகும். பனிப்பொழிவு முடிந்த பின்னர் கோடை காலத்தில் மே அல்லது சூன் மாதங்களில் தொடங்கி சுமார் நான்கரை மாதங்களுக்கு மட்டும் சாலை போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. மீண்டும் அக்டோபர் மாதம் மத்தியில் பனிப்பொழிவு மீண்டும் தொடங்கியதும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மணாலியை லடாக்கிலுள்ள லாகௌல் மாவட்டம் மற்றும் சுப்தி மாவட்டம், சான்சுகார் துணை மாவட்டம் ஆகியவற்றுடன் இச்சாலை இணைக்கிறது.
லே-மணாலி நெடுஞ்சாலையை வடிவமைத்து, கட்டி முடித்து அந்தச் சாலையை பராமரிப்பது அனைத்தும் இந்திய இராணுவத்தின் கீழ் இயங்கும் இந்திய எல்லைப்பகுதி சாலைகள் நிறுவனம் ஆகும். கனமான ஆயுதந்தாங்கி வாகனங்கள் விரைந்து செல்லும் அளவுக்கு இந்த சாலை வலிமை கொண்டது ஆகும்.
லே-மனாலி சாலையின் சராசரி உயரம் 4,000 மீ அல்லது 13,000 அடிகளாகும் [1]. இச்சாலையின் அதிகபட்ச உயரம் 5.328 மீ அல்லது 17,480 அடிகள் ஆகும். இந்த உயரமான இடத்தை டாங்லாங் மலைக்கணவாய் என அழைக்கிறார்கள். இந்த மிகச் சிக்கலான அபாயகரமான சாலை இரண்டு பக்கங்களிலும் மலைத் தொடர்கள், சில இயற்கையாகத் தோன்றிய மணல் மற்றும் பாறை உருவாக்கங்கள் புடை சூழ செல்கிறது. கோடை காலத்தில் பனி மூடிய மலைகளும் பனிப் பாறைகளும் உருகும்போது பல புதிய சிறு சிறு நீரோடைகள் உருவாகி பாலங்கள் ஏதுமின்றி இந்த சாலையை கடக்கும் என்பதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். ரோதங் கணவாயை கடந்ததும் மழை மறைவு பிரதேசமான லாகௌல் பிராந்தியத்தில் உள்ள சந்திரா நதி பள்ளத்தாக்குக்குள் நுழைந்தவுடன் நிலப்பகுதியானது திடீரென மாறும். மலைக்கணவாயின் தென்பகுதியிலிருந்த பசுமை மறைந்து மழைமறைவு பிரதேசத்தின் மலைச் சரிவுகள் பழுப்பாகவும் வறட்சியோடும் காட்சியளிக்கும். இருப்பினும் மலை உச்சிகள் பனியால் மூடப்பட்டு சூரிய ஒளியில் பிரகாசமாய் ஒளிரும்.
லே-மனாலி நெடுஞ்சாலை பொதுவாக இரண்டு பாதைகள் (இரு திசையில் ஒரு பாதை) சேர்ந்த இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதைகள் சாலை-பிரிப்புக் குறியீடுகள் ஏதும்னின்றி செல்கின்றன. ஆனால் சில நீட்சிகளில் ஒன்று அல்லது ஒன்றரை பாதைகள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட பனிரெண்டுக்கும் மேற்பட்ட நிற்கும் பாலங்கள் இச்சாலையின் நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாழடைந்த நிலையில் உள்ளன.
இந்த நெடுஞ்சாலையில் பல சேதமடைந்த நீட்சிகளும், பராமரிப்புப் பகுதிகளும் உள்ளன, ஒரு சிறிய மழை கூட மிகவும் ஆபத்தான நிலச்சரிவை ஏற்படுத்தி அபாயமான விளைவுகளை உண்டாக்கக்கூடும். அதனால் நிதானமான வேகத்தில் பயணிக்க வேண்டும் [2]
லே-மனாலி நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 490 கிலோ மீட்டர்கள் அல்லது 300 மைல்களாகும்[3]. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மனாலிக்கும் சார்ச்சுக்கும் இடையில் உள்ள தொலைவு 230 கிலோமீட்டர்கள் அல்லது 140 மைல்களாகும்[4]. லடாக் மண்டலத்தில் சார்ச்சுக்கும் லே வுக்கும் இடையில் உள்ள தொலைவு 260 கிலோமீட்டர்கள் அல்லது 160 மைல்களாகும். 2019 ஆம் ஆண்டில் ரோட்டாங்கு குகைப்பாதை செயல்படத் தொடங்கினால் இமாச்சலப் பிரதேசத்தில் இச்சாலையின் தொலைவு 60 கிலோமீட்டர்கள் அல்லது 37 மைல்கள் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.
சார்ச்சுவில் இமாச்சல் பிரதேசத்தின் எல்லை லாகௌல் மண்டலம் முடிவுக்கு வருகிறது. இங்கிருந்து சம்மு காசுமீர் மாநிலத்தின் லடாக் மண்டல சான்சுகார் மண்டலம் தொடங்குகிறது.
மணாலி – ரோதங் கணவாய் யோட் – கோக்சார் – தண்டி – கீலாங்கு – இசுப்பா – தார்ச்சா – சிங்சிங்பார் – பாராலாச்சா லா – பாரத்பூர் – சார்ச்சு (மாநில எல்லை) – டாட்டா லூப்சு – நாக்கீ லா – லாச்சுலங் லா – பாங் – தாங்லாங் லா – கயா – உப்ச்சி – கரு – லே என்பது இந்த தேசிய நெடுஞுசாலையின் பாதையாகும்.
சுமார் 430 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையை 14 மணி பயண நேரம் ஆகும். சாலை மற்றும் வாகனங்களின் நிலைமைக்கு ஏற்ப கடக்கும் நேரம் கூடவும் வாய்ப்புண்டு. இந்த பயணத்தையே மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமே தவிர வேகமாக இலக்கை அடையவேண்டும் என்பது குறிகோளாக பயணம் இருக்கக்கூடாது. பெரும்பாலும் பயணிகள் இரவு நேரத்தில் இசுப்பாவில் நிறுத்தி சார்ச்சு வில் தங்கி செல்வது வழக்கம். மாறாக கீலாங்கு சென்று அங்கு தங்குவதும் உண்டு.
எப்படியிருந்தாலும் பயண நேரத்தை உறுதியாகக் கூற இயலாது. எதிர்பாராத காலநிலை மாற்றமும் சாலைகளின் அபாயகரமான நிலையும் இப்பயண நேரத்தை மாற்றிவிடக்கூடும். லே-மனாலி நெடுஞ்சாலையில் பொதுவாக மோசமான சாலைகள், பனிச்சரிவுகள் மற்றும் பனி உருகல்கள் காரணமாக அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு. மேலும் இச்சாலை 5,000 மீட்டர் உயரத்தில் கடந்து செல்கிறது.
மே மற்றும் சூன் மாதங்களில் சுற்றுலா பயணிகள் பலர் ரோதங் கணவாய்க்கு வருகை தருகின்றனர். உள்நாட்டு பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மணாலிக்கு திரும்பி வருகின்றனர். இக்கணவாயைக் கடந்து அவர்கள் வடக்கு நோக்கி செல்வதில்லை. கோடை காலத்தில் கூட ரோதங் கணவாய் பனிப்பிரதேசமாக பனி மூடியிருக்கும். மனாலியிலிருந்து கீலாங்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒன்றாக பனிரெண்டு மணி வரை சென்று வருகின்றன. பிற்பகலில் செல்லும் பேருந்துதான் கடைசிப் பேருந்தாகும். கீலாங்கு வரை செல்லும் பயணம் 4 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நீடிப்பது உண்டு. போக்கு வரத்து நெரிசல் சாலையின் தன்மை ஆகிய நிலைகள் பயண் நேரத்தில் மாற்றத்தை உண்டாக்குகின்றன. எனவே ரோதங் கணவாயை காலை 8 மணிக்கு முன்னால் கடந்து விடுவது சிறந்ததாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.