Remove ads
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் இடம்பெற்றது. இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பே ர் வரையில் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள்[4], இலங்கை அரசு[1], மற்றும் மனித உரிமைக் குழுக்கள்[3][2][5][6] போன்றவை இப்படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன. அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தெரிவித்தார்[7]. இத்தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லை[3].
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் Jaffna hospital massacre | |
---|---|
இலங்கையின் அமைவிடம் | |
இடம் | யாழ்ப்பாண நகரம், இலங்கை |
நாள் | அக்டோபர் 21 – 22, 1987 (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | தமிழ் நோயாளர்கள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள்[1][2] |
தாக்குதல் வகை | துப்பாக்கிச் சூடு, கிரனைட்டுத் தாக்குதல்[2][3] |
ஆயுதம் | துப்பாக்கிகள், கிரனைட்டுகள் |
இறப்பு(கள்) | 68[4] – 70[2] |
காயமடைந்தோர் | 50+ (அண்.) |
தாக்கியோர் | இந்திய அமைதிப் படை[2][5][6] |
யாழ்ப்பாண மருத்துவமனை (யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, அல்லது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை) இலங்கையின் வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும். இது யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ளது. ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர். 1987 அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.[3]
மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்து வருகிறது.[8] லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.[7] ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தெரிவித்துள்ளன. இலங்கை அரசு இத்தாக்குதலை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என 2008 ஆம் ஆண்டில் கூறியது.[1] யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள்[6] மற்றும் பலர்[2][5][9] இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.