From Wikipedia, the free encyclopedia
மொலியர் (Molière) [1] என்பவர் பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான யான்-பப்டிசுட்டு போக்யுலின் (Jean-Baptiste Poquelin) (பிறப்பு: ஜனவரி 15, 1622 – இறப்பு: பெப்ரவரி 17, 1673) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் நகைச்சுவையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார் [2]. மிசாந்திரோப் , மனைவிகளுக்கான பள்ளி தார்த்தூஃபே போன்றவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.
மொலியர் | |
---|---|
மொலியரின் உருவப்படம் நிக்கோலாஸ் மிக்னார்டால் வரையப்பட்டது. | |
பிறப்பு | யான்-பாப்டிசுட் போகுவெலின் சனவரி 15, 1622 பாரிசு, பிரான்சு |
இறப்பு | பெப்ரவரி 17, 1673 51) பாரிஸ், பிரான்சு | (அகவை
புனைபெயர் | மொலியர் |
தொழில் | நாடகாசிரியர் |
தேசியம் | பிரான்சியர் |
காலம் | 1645-1673 |
வகை | நகைச்சுவை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தார்த்தூஃபே; மிசாந்திரோப்; படித்த பெண்; மனைவிகளுக்கான பள்ளி |
துணைவர் | ஆர்மண்டே பேசார்டு |
துணைவர் | மடெலீன் பேசார்டு |
வசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து இயேசுசபையினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், அரங்கியலில் ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன் சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார் [3].
பிலிப்பே I , 14 ஆம் லூயின் சகோதரர் உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சால்லே டு பெட்டிட் போர்போன் என்ற பெரிய அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் பாரிசு நகரத்தின் புகழ்மிக்க அரண்மனையான பாலைசு இராயலைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் மொலியருக்குக் கிடைத்தது. இவ்விரு அரங்குகளிலும் மொலியர் அபெக்டேடு லேடீசு, போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நிகழ்த்தினார். இவ்வெற்றியின் மூலமாக மொலியரின் குழுவினருக்கு அரசின் ஓய்வூதியமும் பட்டங்களும் கிடைத்தன. மொலியர் தொடர்ந்து அரசாங்க ஆதரவு பெற்ற நாடக ஆசிரியராக இயங்கினார் [3].
நாடகத்துறையில் மொலியரின் கடின உழைப்பு காரணமாக இவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 1667 ஆம் ஆண்டில் சிறிதுகாலம் மொலியர் நாடக அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது காசநோயால் அவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் என்றாலும் பின்னர் அவர் சில மணி நேரங்களுக்கு பின் காலமானார் [3].
யீன் போக்யுலின் பல்வேறு செல்வச் செழிப்புகள் கொண்ட வளமான முதலாளித்துவ குடும்பத்தின் மகளான மேரி கிரேசே தம்பதியருக்கு மகனாக மொலியர் பாரிசு நகரில் பிறந்தார் [4], தன்னுடைய பத்தாவது வயதில் தாயை இழந்த இவர் தன் தந்தைக்கு நெருக்கமானவராக இருந்ததாக தெரியவில்லை. தாயின் மரணத்திற்குப் பின் பாரிசு நகரிலுள்ள செழிப்பான பகுதியான செயிண்ட்-ஒனாரே தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். இயேசு சபைக்குச் சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். கண்டிப்பு நிறைந்த கல்விச் சூழலில் படித்த இவர் தன்னுடைய முதலாவது மேடை அனுபவத்தை இங்குதான் சுவைத்தார் [5].
1631 ஆம் ஆண்டு தந்தை செய்துவந்த அரண்மனை சேவகர் பணியையே மொலியரும் 1641 இல் செய்யத் தொடங்கினார் [6].1642 களில் அநேகமாக ஒர்லியன்சில் போக்யுலின் ஒரு மாகாண வழக்கறிஞராகவும் சில காலம் பணிபுரிந்ததாக்வும் அறியப்படுகிறது. ஆனால் அவர் அதற்குத் தகுதிவாய்ந்தவர் என்ற பதிவு எங்கும் காணப்படவில்லை.
1643 ஆம் ஆண்டு சூன் மாதம் மொலியருக்கு 21 வயதாக இருந்தபோது தனது சமூகத் தொழிலை கைவிட்டு மேடையில் தனது தொழிலைத் தொடர முடிவு செய்தார். தனது தந்தையிடன் இருந்து விடுதலையடைந்து அவர் நடிகை மாடெலெய்ன் பெயார்ட்டுடன் சேர்ந்தார், அவருடன் இல்லசுட்ரே அரங்கை 630 லிவரர்களுடன் நிறுவினார். பின்னர் இவர்களுடன் மாடெலினின் சகோதரரும் சகோதரியும் சேர்ந்து கொண்டனர்.
புதிய நாடகக் குழுவானது 1645 ஆம் ஆண்டில் திவாலானது. செயல்பாட்டு வலிமை மற்றும் அவரது சட்ட பயிற்சி காரணமாக மொலியர் குழுவின் தலைவராக இருந்தார். இருப்பினும், அந்தக் குழு மிகப் பெரிய கடன்களைப் பெற்றது, பெரும்பாலும் அரங்கின் வாடகைக்கு மட்டுமே குழுவினர் 2000 லிவெரக்கு மேல் கடனாகப் பெற்றிருந்தனர். அவரது தந்தை அல்லது அவரது குழுவில் உறுப்பினராக இருந்த அன்பர் ஒருவர் கடன்களைச் செலுத்தினார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். ஒருமுறை 24 மணிநேர சிறைச்சாலைக்குச் சென்று வந்த பின்னர் மொலியர் நடிப்புச் சுற்றுக்கு திரும்பினார். அந்த நேரத்தில் இருந்தது மொலியர் தன் புனைப்பெயரை பயன்படுத்தத் தொடங்கினார். அநேகமாக அது லே விகனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராக இருக்கலாம். அவரது தந்தையின் குடும்பத்தில் ஒரு நடிகராக இருப்பது கேவலம் என்று நினைத்தும் கூட இவர் தன்னுடைய பெயரை மாற்றியிருக்கலாம்.
சிறைத்தண்டனைக்குப் பிறகு மொலியரும் மடலியினும் சேர்ந்து புதிய நாடகக் குழுவுடன் மாகாணங்களில் நாடக வட்டாரத்தை ஆரம்பித்தனர்.இந்த வாழ்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆரம்பத்தில் சார்லசு டப்ரெசன்னின் நிறுவனத்தில் நடித்தார். அதன்பிறகு இவர் தனது சொந்த ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் அவருக்குப் போதுமான வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. ஓர்லியனின் பிரமுகரிடமும் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இந்நேரத்தில் சில நாடகங்கள் வெற்றி பெற்றன. இந்நாடகங்களின் உதவியால் மொலியர் தன் திறமையை நிருபித்தார். இதற்கான பயணங்களின் போது அவர் அர்மாண்டை சந்தித்தார். நாளடைவில் அர்மாண்டு மொலியரின் புரவலர் ஆனார். இதனால் நிறுவனத்தின் பெயர் புரவலின் பெயருக்கு மாறியது. சிறிது காலத்தில் மதக் கருத்து வேறுபாடு காரணமாக இந்நட்பு முறிந்தது.
மத்தியக் கிழக்கு பிரான்சில் உள்ள லையனில் மார்க்குவசு மொலியரின் நிறுவனத்துடன் சேர்ந்தார். பியர் கோர்னீய்லால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பின்னாளில் யீன் ரேசினின் காதலர் ஆனார். ரேசின் மொலியருக்கு கொடுத்த துன்பியல் நாடகத்தை மொலியர் நடிக்கவில்லை. தனது கலைவாழ்க்கையைத் தொடரவேண்டும் என ரேசினை ஊக்கப்படுத்தினார். ஒல்டெல் டி பர்கோனின் நிறுவனத்திற்கு இரகசியமாக தனது துன்பியல் நாடகத்தை வழங்கியதாகக் கூறப்பட்டதைக் கேட்டு மொலியர் ரேசின் மீது கோபம் கொண்டார்.
மொலியரை பாரிசுக்குப் போகச் சொல்லி பலர் வற்புறுத்தினர். சமுதாயப் பெரும்பான்மையினருடன் தன்னை முன்னேற்றுவதற்காகவும், அவரது புகழை பாரிசில் பரப்புவதற்கும் ஒரு சில வாரங்களுக்கு வெளியே தங்கினார். 1658 ஆம் ஆண்டில் மொலியர் பாரிசுக்கு சென்று சேர்ந்தார். அரசர் முன்னிலையில் கொர்னேய்லின் துன்பியல் நாடகத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். மொலியரின் திறமைக்கு மன்னரால் பரிசளிக்கப்பட்டது. மான்சியூரின் உதவியுடன், அவரது நிறுவனம் பெரிட்-போர்போன் பெரிய மண்டபத்தில் பிரபலமான இத்தாலியன் காமடியா டெல்லியோ நிறுவனமான டிபெரியோ பியோரிலோ உடன் சேர்ந்து நாடகத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் வெவ்வேறு இரவுகளில் மண்டபத்தில் காட்சிகளை நடத்தின. மொலியரின் தி அபெக்டேடு யங் லேடீசு என்ற நாடகம் 1659 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நடைபெற்றது.
பிரான்சில் சில பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் பாதிப்புகளைத் திருப்தி செய்வதற்காக பல முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் லெசு பிரெசியசு ரிடிகுல்சு முதல் முயற்சியிலேயே அதை நிறைவு செய்தது. 1656 ம் ஆண்டு சாமுவேல் சாப்புகியோவின் லே செர்கள் டெசு பெம்மெசு களத்தின் அடிப்படையில்தான் அந்த கதை அமைந்திருந்தது. எனவே பார்வையளர்களால் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரஞ்சு நாடகத்தின் விதிகளை நிறுவ ராயல் காப்புரிமை கீழ் மொலியர் ஒரு குழுவை உருவாக்கினார். நேரம், செயல், மற்றும் வசனம் ஆகியவற்றின் ஒற்றுமையைப் பற்றிய பிரசங்கத்தை குழுவுக்கு அளித்தார். நகைச்சுவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் [7].
நவீன பிரெஞ்சு நகைச்சுவை வடிவமைப்பாளராக மோலியேர் கருதப்படுகிறார். மொலியர் நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அல்லது வாக்கியங்கள் இன்றும் தற்போதைய பிரெஞ்சு மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.
லெசு பிரிசியசசு ரெடிகுல்சு என்ற நாடகம் மிகப்பெரிய வெற்றியைத் தராவிட்டாலும் மொலியருக்கு புகழைத் தேடித்தந்தது. 1662 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று மொலியர் அர்மண்டெ பெயார்டை மணந்து கொண்டார். அர்மண்டெ மடலியின் சகோதரி என்று நம்பினார். அதே ஆண்டில் மனைவிகளுக்கான பள்ளி என்ற ஒரு நாடகத்தை எழுதினார். இந்நாடகம் இவருடைய பெயர் சொல்லும் நாட்கமாக கருதப்படுகிறது. 14 ஆம் லூயி உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பெரிய அறையொன்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது.
இல்லசுட்ரேட் அரங்குடன் சேர்ந்து மொலியர் தனக்குப் பிடித்த துன்பியல் நாடகங்களை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். துன்ப நிகழ்வுகளுக்குப் பின்னர் இவர் உருவாக்கிய நகைச்சுவைப் பகுதிகளால் இவர் புகழ்பெற்றார். இவற்றில் சில பகுதியாக எழுதப்பட்டாலும் நிகழ்நேரத்தில் நகைச்சுவையாக உருவாக்கிக் கொண்டார். இரண்டு நகைச்சுவை நாடகங்களையும் மொலியர் எழுதினார். ஆனால் இவை குறைவான வெற்றியையும் பொதுவாக குறைவான முக்கியத்துவம் கொண்டவையாகவும் கருதப்பட்டன.
பாரிசில் இருந்த 14 ஆண்டுகளில் தனது அரங்கில் நிகழ்த்திய 85 நாடகங்களில் 31 நாடகங்களை இவரே எழுதினார். அரசவையிலும், பாரிசு நகர மக்கள் மத்தியிலும் இவருக்குப் பாராட்டுகள் கிடைத்தபோதும், ஒழுக்கவாதிகளும், திருச்சபையினரும் இவரது கேலிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். தார்த்துஃபே அல்லது பாசாங்குக்காரன் என்னும் நாடகம் மதப் பாசாங்குத்தனத்தைச் சாடியதனால் இது திருச்சபையினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. டொன் யுவான் நாடகம் முற்றாகவே தடை செய்யப்பட்டது.
உருசிய எழுத்தாளர் மைக்கேல் புல்ககோவ் மொலியரின் அரை-கற்பனையான வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 1932-1933 காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் முதலில் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
நாடகத்துறையில் இவரது கடின உழைப்பு இவரது உடல் நலத்தைப் பாதித்தது. இதனால் 1667 அளவில் சிலகாலம் அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தபோது காச நோய் வாய்ப்பட்டிருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் ஆயினும், பின்னர் மயக்கமுற்ற அவர் சில மணி நேரங்களின் பின் காலமானார். மொலியர் இறந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பிரஞ்சு சட்டத்தின் படி நடிகர்கள் புனிதமான கல்லறை இடத்தில் புதைக்கப்பட்ட அனுமதி இல்லை. இருப்பினும் மொலியரின் விதவையான அர்மாண்டேயின் கோரிக்கையை ஏற்று ஒரு சாதாரண மனிதனாக சவத்தை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டார். குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை பகுதியில் மொலியரின் பிணம் புதைக்கப்பட்டது. 1792 ஆம் ஆண்டில் அவரது நினைவுச்சின்னங்கள் அனைத்தும் பிரஞ்சு நினைவுச்சின்னங்களின் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் 1817 ஆம் ஆண்டில் பாரிசுக்கு மாற்றப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.