மெக்சிகோ (எசுப்பானியம்: México, "மெஃகிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிகோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிகோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13-ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11-ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.

விரைவான உண்மைகள் ஐக்கிய மெக்சிக நாடுகள்Estados Unidos Mexicanosஎசுட்டாடோசு உனீடோசு மெஃகிக்கானோசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
ஐக்கிய மெக்சிக நாடுகள்
Estados Unidos Mexicanos
எசுட்டாடோசு உனீடோசு மெஃகிக்கானோசு
Thumb
கொடி
Thumb
சின்னம்
நாட்டுப்பண்: இம்ணோ நாசியொனால் மெஃகிக்கானோ
Thumb
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மெக்சிகோ நகரம்
ஆட்சி மொழி(கள்)மத்திய அரசு மட்டத்தில் இல்லை
அரசாங்கம்கூட்டாட்சி குடியரசு
 அதிபர்
பெலீப்பே கால்டெரோன் (PAN
சுதந்திரம் 
 அறிவிப்பு
செப்டம்பர் 16, 1810
 ஏற்பு
செப்டம்பர் 27, 1821
பரப்பு
 மொத்தம்
1,972,550 km2 (761,610 sq mi) (15-ஆவது)
 நீர் (%)
2.5%
மக்கள் தொகை
 2005 மதிப்பிடு
107,029,000 (11-ஆவது)
 2000 கணக்கெடுப்பு
101,879,171
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
 மொத்தம்
$1.073 இலட்ச கோடிகள் (டிரில்லியன்) (13-ஆவது)
 தலைவிகிதம்
$10,186 (64-ஆவது)
மமேசு (2003)0.814
அதியுயர் · 53-ஆவது
நாணயம்மெக்சிகோ பீசோ (MXN)
நேர வலயம்ஒ.அ.நே-8 to -6
 கோடை (ப.சே.நே.)
மாறுபட்டது
அழைப்புக்குறி52
இணையக் குறி.mx
மூடு

கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிகோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521-ஆம் ஆண்டில், மெக்சிகோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிகோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821-ஆம் ஆண்டில் இக் குடியேற்ற நாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிகோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிகோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910-ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917-ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதைய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000-ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.[5]

மெக்சிகோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994-ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13-ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11-ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007-ஆம் ஆண்டில் மெக்சிகோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10-ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.

2006-ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.

சொற்பிறப்பு

புதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.

"மெஃகிக்கோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.

அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது "மெக்சிக்கப் பேரரசு" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் "மெக்சிக்கோக் குடியரசு" எனக் குறிப்பிடப்பட்டது.

புவியியல்

Thumb
மெக்சிக்கோவின் நில உருவப் படம்
Thumb
விண்வெளியில் இருந்து மெக்சிக்கோவின் தோற்றம். நாசாவின் சுவோமி NPP என்னும் செய்மதியில் இருந்து சனவரி 2012ல் எடுக்கப்பட்டது.

மெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர்.[6] புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.[7]

1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.

மெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.

மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.[8]

எனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.[8]

நிர்வாகப் பிரிவுகள்

"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.[9]

கூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன.[10] மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.[11]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.