திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை புனித முதலாம் பயஸ் (Pope Saint Pius I) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் பணிபுரிந்தவர் ஆவார். வத்திக்கான் நகரிலிருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் ஏட்டின்படி, இவர் கிபி 142 அல்லது 146இலிருந்து 157 அல்லது 161 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சிசெய்தார்.[1] ஒருசிலர் முதலாம் பயஸ் 140-154 காலகட்டத்தில் திருத்தந்தையாகப் பணிசெய்தார் என்பர்.[2]
புனித முதலாம் பயஸ் Saint Pius I | |
---|---|
10ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | கிபி சுமார் 140 |
ஆட்சி முடிவு | கிபி சுமார் 154 |
முன்னிருந்தவர் | புனித ஹைஜீனஸ் |
பின்வந்தவர் | அனிசேட்டஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பயஸ் |
பிறப்பு | கிபி முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி ஆக்குயிலேயா, இத்தாலியா |
இறப்பு | கிபி சுமார் 154 உரோமை, உரோமைப் பேரரசு |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | சூலை 11 |
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை முதலாம் பயஸ் வட இத்தாலியாவில் ஆக்குயிலேயா என்னும் நகரில் கிபி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் எனத் தெரிகிறது.[3] அவர்தம் தந்தை ஆக்குயிலேயாவைச் சார்ந்த ருஃபீனஸ் (Rufinus) என்று "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" கூறுகிறது.[4]
ஹெர்மஸ் என்னும் பெயர் கொண்ட பண்டைக்காலக் கிறித்தவ எழுத்தாளர் முதலாம் பயசின் சகோதரர் என்று முராத்தோரி சுவடியும் (2ஆம் நூற்றாண்டு),[5] "லிபேரியுசின் அட்டவணை" (Liberian Catalogue) என்னும் நூலும்[6] கூறுகின்றன. ஹெர்மசும் பயசும் விடுதலை பெற்ற அடிமைகளாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
உரோமைப் பேரரசர்கள் அந்தோனீனஸ் பீயுஸ் மற்றும் மார்க்கஸ் அவுரேலியஸ் என்பவர்கள் காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் உரோமைத் திருச்சபையின் தலைவராக விளங்கினார் (கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி).[7] [[புனித பேதுரு|புனித பேதுருவின் வழியில் ஒன்பதாம் திருத்தந்தையாக அவர் ஆட்சி செய்தார்.[2] இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஞாயிற்றுக் கிழமையிலேயே கொண்டாடப்படும் என்று அவர் ஒழுங்குபடுத்தினார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டினை வெளியிடப் பணித்தவர் இவரே[8] என்றொரு கருத்து இருப்பினும், உண்மையில் அந்நூலின் தொகுப்புப் பணி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன் ஆரம்பிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.[9] உரோமை நகரில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகிய புனித புதேன்சியானா என்னும் வழிபாட்டு இடத்தைக் கட்டியவர் இவரே என்று கூறப்படுகிறது.
தம் ஆட்சிக்காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர் காலத்தில் புனித ஜஸ்டின் என்னும் கிறித்தவ அறிஞர் உரோமையில் கிறித்தவ போதனையை அறிவித்தார். அப்போது "ஞானக்கொள்கை" (Gnosticism) என்னும் தப்பறைக் கொள்கையை வாலன்டைன், சேர்தோன், மார்சியோன் ஆகியோர் உரோமையில் பரப்பிவந்தார்கள். இப்பின்னணியில் பார்க்கும்போது, கிபி 2ஆம் நூற்றாண்டில் உரோமை ஆட்சிப் பீடம் கிறித்தவ திருச்சபை அமைப்பில் முதலிடம் பெற்றிருந்தது தெரிகிறது.[8] முதலாம் பயஸ் ஞானக்கொள்கையை எதிர்த்ததோடு, மார்சியோன் என்பவரைச் சபைநீக்கம் செய்தார்.[10]
முதலாம் பயஸ் மறைச்சாட்சியாக உயிர்நீத்திருக்கலாம் என்றொரு கருத்து உளது. ஆயினும் 1969இல் நிகழ்ந்த ஆய்வின்படி, முதலாம் பயஸ் கிறித்தவ சமயத்தின் பொருட்டு கொல்லப்பட்டார் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை.[11] மேலும், "உரோமை மறைச்சாட்சிகள் நூல்" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அவர் மறைச்சாட்சி என்று குறிப்பிடப்படவில்லை.[12]
புனித முதலாம் பயசின் திருவிழா சூலை மாதம் 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. "உரோமன் கத்தோலிக்க புனிதர்கள் நாள்காட்டி" (Roman Catholic Calendar of Saints) என்னும் ஏட்டில் அவர் திருவிழா குறிக்கப்படவில்லை. எனினும், பொது ஒழுங்குப்படி, அவர் திருவிழா "நினைவு" என்னும் வகையில் கொண்டாடப்படலாம்.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.