எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
மா.செங்குட்டுவன் (சனவரி 8, 1928 - பிப்ரவரி 5, 2021[1]) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், அரசியல் சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தகுதிகள் கொண்டவர். ஏறக்குறைய 20 நூல்கள் எழுதியுள்ளார். கவிக்கொண்டல் என்னும் அடை மொழியால் அறியப்படும் ஓர் அறிஞர் ஆவார். மீண்டும் கவிக்கொண்டல் என்னும் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
திருவாரூருக்கு அண்மையில் திருக்காரவாசல் என்னும் சிற்றுரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். மாணவராக இருக்கும்போதே திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். திராவிட மாணவர் கழகச் செயலாளராகப் பணியாற்றினார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நடராசன். ஆயினும் தமிழ் உணர்வின் காரணமாகச் செங்குட்டுவன் என்று மாற்றிக் கொண்டார். பெரியார் ஈ வெ. இரா. அறிஞர் அண்ணாதுரை, கருணாநிதி, குத்தூசி குருசாமி, இரா. நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளைப்பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குவதற்கான அமைப்புக்கூட்டம் 1949 செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 150 பேரில் மா.செங்குட்டுவனும் ஒருவர். அந்நாள் தொட்டுத் தனது இறுதிநாள் வரை அவ்வியக்கதிலேயே அவர் இருந்தார். [2])
மா. செங்குட்டுவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதும் அண்ணாதுரை ஆசிரியராக இருந்த மாலைமணி என்னும் நாளிதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் தி.மு.க தலைமைக் கழக ஏடான நம்நாடு என்னும் இதழுக்குத் துணைஆசிரியர் ஆனார். விடுதலை, முரசொலி, நவமணி, கழகக்குரல், தனிநாடு, தனிஅரசு எனப் பல இதழ்களில் வெவ்வேறு காலத்தில் பணியாற்றியுள்ளார். கவிஞர் சுரதா 1955ஆம் ஆண்டில் தொடங்கிய காவியம் என்னும் கவிதை வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1979ஆம் ஆண்டு மே மாதம் கவிக்கொண்டல் என்னும் கவிதைத் திங்கள் இதழை தமது சொந்த முயற்சியில் தொடங்கினார். அவ்விதழ் 1983ஆம் ஆண்டு சூன் மாதம் வரை வெளிவந்தது. பின்னர் 1991ஆம் ஆண்டு சூலை மாதத்தில் 'மீண்டும் கவிக்கொண்டல்' என்னும் அவ்விதழைத் தொடங்கினார். அவ்விதழை மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு மனைவி இந்திராணி சாமிவேலு வெளியிட்டார். [3]
இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றைப் பல்வேறு இதழ்களில் எழுதியும் இலக்கிய அமைப்புகளில் பங்கேற்றும் ஆண்டுதோறும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நடத்தியும் வருகிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பரப்புரை செய்து வருகிறார்.
1987 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நிகழ்ந்த ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டின் கவியரங்கில் பங்கேற்றார். 'மலேசியாவில் அண்ணா' என்னும் இவர் எழுதிய நூலை மலேசியாவில் வெளியிட்டார்.
சிங்கப்பூர் செருமனி ஆலந்து டென்மார்க்கு ஆகிய நாடுகளுக்குச் சென்று இலக்கிய விழாக்களில் பங்கு கொண்டார். இதழிகைத் துறையில் பரந்துபட்ட அனுபவம் பெற்றுள்ள கவிக்கொண்டல் செங்குட்டுவன் பல சிறப்பு மலர்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவை கலைஞரின் 48ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், கலைஞர் பவள விழா மலர் , பேராசிரியர் மணிவிழா மலர், பேராசிரியர் பவளவிழா மலர் , நம்நாடு ஆண்டுமலர், கழகக்குரல் ஆண்டு மலர் மாலைமணி ஆண்டுமலர் ஆகியனவாம். கோலாலம்ப்பூர் ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர் தொகுப்புப் பணியிலும் இவரின் பங்களிப்பு உண்டு.
1995 ஏப்பிரலில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் அடங்கிய 197 பேர் கொண்ட குழுவை மும்பை நகருக்கு அழைத்துச் சென்று அங்கு நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னின்று ஒருங்கிணைத்தார். அறிஞர் அண்ணாதுரை போன்ற தலைவர்களின் அந்தக் காலத்துச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.