From Wikipedia, the free encyclopedia
மங்கலங்கிழார் (1895 - ஆகஸ்ட் 31, 1953) தமிழகத்தின் வடபகுதியில் பிறந்த தமிழறிஞர். "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படுபவர். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். இயற்பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.
சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார். இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.
மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.
"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.
"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.
வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941 ஆம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.
இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு. வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.
"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.
எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில் தொடக்கப்பள்ளி, தெரு, இலக்கிய மன்றம், நூல் நிலையம், உருவச்சிலை, அறக்கட்டளை, நற்பணி மன்றம், பூங்கா, மாளிகை போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.