From Wikipedia, the free encyclopedia
மக்ஸ் வெபர் என அழைக்கப்படும் மக்சிமிலியன் கார்ல் எமில் வெபர் (Maximilian Carl Emil Weber) (21 ஏப்ரல் 1864 – 14 சூன் 1920) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு அரசியல் பொருளியலாளரும், சமூகவியலாளரும் ஆவார். இவரே பொது நிர்வாகத்துறையிலும் சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளைத் தொடக்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறார்.[1] பெர்லின் பல்கலைக்கழகத்தில் முதலில் பணியாற்றத் தொடங்கிய அவர், பின்னர், ஃபிரீபர்க், ஹெய்டில்பர்க், மியூனிச் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். வெபருடைய முதன்மை ஆக்கங்கள், பகுத்தறிவாக்கம் (rationalization), மதச் சமூகவியல்(sociology of religion), அரசு ஆகிய துறைகள் சார்ந்தவை. இவருடைய மிக முக்கிய ஆக்கம், புரட்டஸ்தாந்த நெறிமுறைகளும் முதலாளித்துவ ஆற்றலும் (The Protestant Ethic and the Spirit of Capitalism) என்னும் கட்டுரையாகும். இக் கட்டுரையில், மேலைநாட்டுப் பண்பாடும், கீழைநாட்டுப் பண்பாடும் வெவ்வேறு வழிகளில் வளர்ச்சியடைந்ததற்கு மதம் ஒரு முக்கிய காரணம் என இவர் வாதிட்டார். அத்துடன், துறவுசார் புரட்டஸ்தாந்தத்தின் சில குறிப்பிட்ட இயல்புகள், மேலை நாடுகளில், முதலாளித்துவம், அதிகாரம், பகுத்தறிவுசார் சட்டமுறை அரசுகள் என்பன வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்தன என்றும் இவர் கூறினார்.
மக்ஸ் வெபர் | |
---|---|
ஜெர்மானிய அரசியல் பொருளியலாளரும் சமூகவியலாளரும். | |
பிறப்பு | ஏர்பர்ட், பிரஷ்ய சக்சனி | 21 ஏப்ரல் 1864
இறப்பு | 14 சூன் 1920 56) மியூனிச், பவேரியா | (அகவை
இறப்பிற்கான காரணம் | நுரையீரல் அழற்சி |
கார்ல் எமில் மேக்ஸ்மிலன் வெபர் 1864 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ப்ரஷ்ஷியாவின் சேக்சோனி மாகாணத்தில் எர்ஃபர்ட் நகரத்தில் பிறந்தார். அவர் சீனியர் மேக்ஸ் வெபருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூத்தவர் ஆவார். சீனியர் மேக்ஸ் வெபர் ஜெர்மனியின் தேசிய சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், செல்வச் செழிப்பும், பிரபலமும் கொண்ட குடிமைப் பணியாளரும் ஆவார். வெபரின் தாயார் மற்றும் சீனியர் மேக்ஸ் வெபரின் மனைவியுமான எலன், பிரெஞ்சிலிருந்து புலம்பெயர்ந்தோரிடமிருந்து வந்த ஒரு பகுதியினரைச் சார்ந்தவர் ஆவார். அவர் பிரெஞ்சு புரட்டஸ்தாந்தத்தைப் பின்பற்றும் யுக்யீனாட் பிரிவினைச் சார்ந்தவர். தனக்கென வலுவான தார்மீக தனித்த கருத்துக்களைக் கொண்டிருந்தவர்.[2]
மூத்த வெபரின் பொது வாழ்க்கை ஈடுபாடு அவரது குடும்பத்தையே அரசியல் மற்றும் கல்வியில் மூழ்கச் செய்தது. அவரது வரவேற்பறை பல பிரபலமான கல்விமான்கள் மற்றும் பொதுவாழ்க்கைப் பிரபலங்களை வரவேற்ற களமாக இருந்தது.[3] இத்தகைய அறிவார்ந்த சூழலில் வாழ்ந்த இளைய வெபர் மற்றும் அவரது சகோதரர் ஆல்பிரட் வெபர் ஆகியோரும் சமூகவியலாளர் மற்றும் பொருளியலாளர்களாக மாறினர். 1876 ஆம் ஆண்டில், வெபர் 13 வயதாக இருந்த போது, தனது பெற்றோருக்கு அளித்த கிறித்துமஸ் பரிசானது, இரண்டு வரலாற்றுக் கட்டுரைகள் ஆகும். அந்த இரண்டு கட்டுரைகளின் தலைப்புகள் " ஜெர்மன் வரலாற்றின் போக்கு - பேரரசர் மற்றும் போப்பின் நிலை தொடர்பான சிறப்புக் குறிப்புகளுடன் ", மற்றும் "உரோமானியப் பேரரசின் காலம் - கான்ஸ்டன்டைன் முதல் நாடுகளின் குடியேற்ற காலம் வரை" ஆகியவை ஆகும்.[4]
தாக்கமேதும் ஏற்படுத்தாத, சலிப்படையச் செய்யும் வகுப்பறைகளில், ஆசிரியர்களின் கூற்றுப்படி மரியாதையளிக்காத மனப்பான்மையுடன் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவனாக இருந்த வெபர் இரகசியமாக யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் நாற்பது தொகுதிகளை வாசித்து முடித்தார்.[5][6] மேலும், வெபரின் இந்த செயல் அவரது சிந்தனை மற்றும் முறைகளில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.[7]
1882 ஆம் ஆண்டில் வெபர் எய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவரானார். தனது முதன்மைப் பாடமாக தனது தந்தையாரின் துறையான சட்டத்தைத் தெரிவு செய்தார். சட்டக்கல்விக்கான தனது படிப்பையும் தாண்டி. பொருளாதாரம் மற்றும் இடைக்கால வரலாறு ஆகியவற்றைப் படிப்பதில் ஆர்வம் செலுத்தினார். கூடுதலாக. வெபர் இறையியலில் “பெரும் ஒப்பந்தம்” (a great deal) படித்து முடித்தார். 1884 ஆம் ஆண்டின் இறுதியில், வெபர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தனது பெற்றோருடன் வசிக்கும்படித் திரும்பி வந்தார்.[8]
தனது படிப்புடனே அவர் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார்.[6] 1886 ஆம் ஆண்டில் வெபர் பயிற்சி வழக்கறிஞருக்கான தேர்வில் வெற்றி பெற்றார். இத்தேர்வில் வெற்றி பெறுவது என்பது பிரித்தானிய் மற்றும் அமெரிக்க சட்ட அமைப்பின்படி, தொழில்முறை வழக்கறிஞர்கள் சங்கத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒப்பானதாகும். 1880 கள் முழுவதும் வெபர் சட்டம் மற்றும் வரலாற்றைப் படிப்பதைத் தொடர்ந்தார்.[6] 1889 ஆம் ஆண்டில் அவர் சட்டப்படிப்பில் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்தார். அவரது ஆய்வியல் கட்டுரையின் தலைப்பு ”இடைக்காலத்தில் வணிகரீதியான குறித்த வரலாறு” என்பதாகும். இந்தப் பணியானது ”இடைக்காலத்தில் தெற்கு ஐரோப்பிய மூலங்களைச் சார்ந்த வணிக நிறுவனங்களின் வரலாறு” என்ற மிக நீண்ட ஒரு ஆய்வின் பகுதியாக அமைந்தது. இந்தப் பணியும் அதே ஆண்டில் நிறைவடைந்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.[9]
இரண்டு ஆண்டுகள் கழித்து, தன்னிறைவு பெற்ற பல்கலைக்கழகத்தில் கற்பித்தலில் ஈடுபடுவதற்கான தகுதி மற்றும் குறிப்பாக ஜெர்மனியில் பேராசிரியர் பணிக்கான தகுதியை ”உரோம அக்ரேரியன் வரலாறு மற்றும் பொது மற்றும் தனிச் சட்டத்தில் அதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலான ஆய்வினை அகஸ்ட் மெய்ட்சென் என்பவருடன் இணைந்து முடித்ததன் மூலம் பெற்றார்.[10][11].ஆக தனியார் ஆசிரியராக, பயிற்சி வழக்கறிஞராக ஆன வெபர், பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி விரிவுரைகள் ஆற்றியும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்கியும் தன் பணியைத் தொடர்ந்தார்.[12]
வெபர் தனது ஆய்வியல் அறிக்கையின் முடிவிற்கும் பணிக்கான தகுதியைப் பெறுவதற்கான முயற்சிக்கும் இடையே உள்ள காலகட்டத்தில், வெபர் சமகால சமூகக் கொள்கைகளில் ஆர்வம் செலுத்தினார். 1888 ஆம் ஆண்டில் செர்மானிய மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள வெரைன் ஃபர் சோசியல்பொலிடிக் (Verein für Socialpolitik) என்ற பொருளாதார அறிஞர்களின் சபையில் சேர்ந்தார்.[13]. இந்த அமைப்பு தொழில்முறை பொருளாதார அறிஞர்களின் சங்கமாகவும், பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகத்தைப் புதிய அணுகுமுறையுடன் கற்றுத்தரும் அமைப்பாக இருந்த வரலாற்று பொருளாதார பள்ளியுடன் (Historical school of economics) இணைக்கப்பட்டதாகவும் இருந்தது. இந்த அமைப்பில் உள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் பொருளாதார அறிவைப் பயன்படுத்தினர். மேலும், பொருளியலில் பெரிய அளவிலான புள்ளியியல்ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட முன்னோடிகளாகவும் இருந்தனர். வெபர் எவாஞ்சலிகல் சமூக காங்கிரஸ் எனும் அமைப்பில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டார்.[14].1890 ஆம் ஆண்டில் வெரைன் “ஓஸ்ட்ஃப்ளச்ட்“ (Ostflucht) அதாவது கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியில் அதிவேகமாக வளர்ந்த தொழில் நகரங்களை நோக்கி தொழில் வாய்ப்புக்காக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுத்திட்டம் ஒன்றை நிறுவியது.[15] இத்திட்டத்திற்கான பொறுப்பு வெபரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெபர் இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையின் பெரும்பகுதியை எழுதினார்.[13][15].வெபரின் இந்தப் பணி அவர் மீது குறிப்பிடத்தக்க அளவு கவனத்தையும், சர்ச்சைகளையும் தோற்றுவித்தது எனலாம். வெபர் ஒரு சமூக விஞ்ஞானியாகப் புகழ்பெறத் தொடங்கினார்.[15]
1890 களின் தொடக்கத்தில் வெபரின் மிக ஆழமான, ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பிறகு 1898 இன் தொடக்கம் முதல் 1902 இன் பிற்பகுதி வரை எந்த ஒரு ஆய்வறிக்கைகளையும் வெளியிடவில்லை. இறுதியாக, 1903 ஆம் ஆண்டு தனது பேராசிரியர் பதவியிலிருந்து பணித்துறப்பு செய்தார். பல்வேறு அழைப்புகளை மறுத்துவிட்டு, அதே ஆண்டில், சமூக அறிவியல் மற்றும் சமூக நலம் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக்காப்பகம் ஒன்றில் இணை பதிப்பாசிரியராக பணியாற்ற ஒத்துக்கொண்டார்.[11] அங்கே தனது சக பணியாளர்களான எட்கர் ஜேஃப் மற்றும் வெர்னர் சோம்பார்ட் ஆகியோருடன் பணியாற்றினார்.[15] சமூக அறிவியலின் அடிப்படைக்கூறுகள் மீது அவரது ஆர்வம் அதிகரித்தது.; அவரது பிற்காலத்திய பணிகளே நவீன கல்விமான்களின் முதன்மையான தேடலாக அமைகின்றன.[16] 1904 ஆம் ஆண்டில், வெபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். உதாரணமாக அவரது கட்டுரையான ”புரட்டஸ்தாந்த நெறியாளுகையும் முதலாளித்துவத்தின் சக்தியும்” மிகவும் புகழ்பெற்ற பணியாகக் கருதப்படுகிறது.[17] மேலும், இந்த ஆய்வானது, பொருளாதார அமைப்புகளின் வளர்ச்சியில் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் தாக்கம் பற்றிய அவரது பிற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம்.[18] இந்தக் கட்டுரை மட்டுமே அவரது வாழ்வுக்காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இறுதி நாட்களில், அரசியலில் விரக்தியடைந்த வெபர் முதலில் வியன்னா பல்கலைக்கழகத்திலும், 1919 ஆம் ஆண்டிற்குப் பிறகு மியூனிக் லுட்விக் மெக்சிமிலியன் பல்கலைக்கழகத்திலும் தனது கற்பித்தல் பணியினைத் தொடர்ந்தார்.[12][15][19] அந்த காலகட்டத்தில் இருந்த அவரது விரிவுரைகள், பொது பொருளாதார வரலாறு, தொழிலாக விஞ்ஞானம் மற்றும் தொழிலாக அரசியல் போன்றவை சேகரிக்கப்பட்டன.[15] முனீச்சில், அவர் முதல் ஜெர்மன் பல்கலைக் கழக சமூகவியல் நிறுவனத்திற்கு தலைவராக இருந்தார், ஆனால், அவர் ஒருபோதும் சமூகவியலில் பேராசிரியராக இருந்ததில்லை. முனிச் நகரில் பல சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜெர்மன் புரட்சி குறித்த அவரது பதிலுக்கு எதிராக இருந்தனர். சில வலதுசாரி மாணவர்கள் அவருடைய வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.[20] மேக்ஸ் வெபர் 1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவலால் பாதிக்கப்பட்டு, 1920 ஆம் ஆண்டு சூன் 14 ஆம் நாள் மூனிச்சில் நிமோனியாவால் இறந்தார். அவருடைய மரணத்தின் போது, வெபர் தன்னுடைய மிகப்பெரிய பணியான “பொருளாதாரமும் சமூகமும்“ என்ற சமூகவியல் கோட்பாட்டை முடிக்காமல் இருந்தார். 1921-1922 ஆம் ஆண்டுகளில், அவரது இறப்பிற்குப் பின் அவரது விதவை மனைவி மரியான் இந்தப் பணி முழுமையடைந்து வெளிவர உதவி செய்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.