From Wikipedia, the free encyclopedia
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதியான மக்காவு 1557இல் போர்த்துக்கேயப் பேரரசின் கீழ் குடியேற்றப்பகுதியாக இருந்தது. வணிகத்திற்காக போர்த்துக்கல்லிற்கு இதனை வழங்கியிருந்தாலும் சீனாவின் ஆதிக்கத்திலும் இறையாண்மையின் கீழும் நிலைபெற்றிருந்தது. 1840களில் தன்னாட்சி வழங்கப்பட்டது. சிங் அரசமரபும் போர்த்துகல்லும் 1887இல் கண்ட பீகிங் சீனப்- போர்த்துக்கல் உடன்பாட்டின்படி மக்காவு போர்த்துக்கேய ஆட்பகுதியாக 1999 வரை இருந்தது. 1999இல் மக்காவு மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாந்தர்சார் மக்காவின் வரலாறு 6,000 ஆண்டுகளுக்கு முந்தையது; பன்முக பண்பாட்டு, நாகரிகங்களை உள்ளடக்கியது. 4000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மனிதர்கள் வாழ்ந்தமைக்கானச் சான்றுகளை மக்காவு மூவலந்தீவிலும் கோலோன் தீவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கி.மு 221–206 ஆண்டுக்காலத்தில் சின் அரசர்கள் ஆட்சியில் குவாங்டோங் மாநிலத்தில் நன்கை மாவட்டத்தில் பன்யூ வட்டத்தில் இருந்தது. கி.பி 265–420 ஆண்டுகளில் யின் மன்னர்கள் ஆட்சியில் டொங்குவான் நிர்வாகத்தில் இருந்தது. பின்வந்த மன்னர்கள் காலத்தில் மக்காவு நன்கை மாவட்ட நிர்வாகத்திற்கும் டொங்குவான் மாவட் நிர்வாகத்திற்கும் இடையே மாறி மாறி இருந்து வந்தது. 1152இல் சொங் மன்னராட்சியில் புதியதாக உருவான சியாங்சன் நிர்வாகத்தில் இருந்தது.[1]
ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து குவாங்சோவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையேயான வணிகக் கப்பல்கள், இங்கு உணவும் நீரும் நிரப்பும் இடைவழி துறைமுகமாகப் பயன்படுத்தலாயின. 1277இல் சொங் மன்னராட்சியில் மங்கோலியர்களின் படையெடுப்பால் புகலிடம் தேடியலைந்த 50,000 மக்கள் இங்கு குடியேறினர்.[2] இங்கு அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது; இங்கேயே குடியேறி வாழலாயினர். பின்னர் மிங் மன்னராட்சியில் (கி.பி 1368–1644), குவாங்டோங், புஜியான் மாநிலங்களின் பல பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் குடிபெயர்ந்து மக்காவ்வில் வாழலாயினர். கடற்பயணம் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அவர்கள் ஏ - மா கோவில் கட்டினர். தெற்கத்திய மாநிலங்களுக்கு வணிக மையமாக மக்காவு அமைய ஓக்லோ படகு மக்கள் முதலில் ஆர்வம் காட்டினர். இருப்பினும் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் வரும்வரை மக்காவு ஓர் முதன்மை குடியிருப்பாக உருவாகவில்லை.[2]
1557இல் போர்த்துக்கேயர்கள் மக்காவில் குடியேறியபோது சீன மீனவர்களும் விவசாயிகளும் அங்கு வாழ்ந்து வந்தனர். போர்த்துக்கேயர்களின் வரவால் மக்காவு மெதுவாக வளரத் தொடங்கியது. முத்து ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் விரைவிலேயே பெரும் வணிக நகரமாக மாறியது. சீன நிலப்பகுதியில் முதல் ஐரோப்பிய வணிகக் கிடங்காக மக்காவு இருந்தது; சீனா, ஐரோப்பா, மற்றும் சப்பான் நாடுகளுக்குக்கு இடையேயான வணிகத்திற்கு முதன்மையானதொரு இடைவழி நகரமாக மக்காவு முன்னேறியது.
மற்ற ஐரோப்பிய நாடுகளால், குறிப்பாக டச்சுக் காரர்களால், தாக்கப்பட்டபோதும் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெரும் முன்னேற்றம் கண்டது. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்களின் ஆங்காங் நகரத்தின் வளர்ச்சியால் மக்காவ்வின் முதன்மை குறையத் தொடங்கியது. மேற்குச் சீனாவின் முதன்மை துறைமுகமாக ஆங்காங் மாறியது. இருப்பினும், 1865இல் மக்காவ்வில் முதல் கலங்கரைவிளக்கு அமைக்கப்பட்டது; இது தெற்குச் சீனக் கடலின் முதல் கலங்கரை விளக்கமாகும். 1887இல்தான் சீனா போர்த்துக்கேயரின் குடியேற்றத்தை அலுவல்முறையாக ஏற்றுக்கொண்டது. இதற்காக சீனாவிற்கும் போர்த்துக்கல்லிற்கும் இடையே பீஜிங்கில் உடன்பாடு ஏற்பட்டது.
1901இல் மக்காவு அரசு முதன்முதலில் அலுவல்முறை நாணயத்தை வெளியிட முடிவு செய்தது; இதற்காக ஓவர்சீசு நேசனல் பேங்க் என்ற கடற்கடந்த தேசிய வங்கியை நிறுவியது. இந்த வங்கி வெளியிட்ட படகாசு நாணயத்தாள்கள் 1906க்கும் 1907க்கும் இடையே முதன்முதலில் வெளியாயின. 1995 முதல் சீன வங்கியும் (பேங்க் ஆப் சைனா) நாணயத் தாள் வெளியிடும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தப் போர்த்துக்கேய குடியேற்றத்தை சப்பானியத் துருப்புக்கள் தாக்கவில்லை. 1949இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு இங்கு பொதுவுடமை சார்ந்த சீன மக்களால் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின; சீனாவுடன் மக்காவு இணைக்கப்பட வேண்டும் என இவர்கள் விரும்பினர். திசம்பர் 3, 1966இல் கலவரம் 1-2-3 எனப்படும் நிகழ்வுகளில் பங்கேற்ற சீனர்கள் போர்த்துக்கல்லிற்கு நிரந்தரமாக மக்காவு வழங்கப்பட்டதை இரத்து செய்யக் கோரின. 1987இல் இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மக்காவ்வின் இறையாண்மையை திருப்பியளிக்கும் உடன்பாடு ஏற்பட்டது; திசம்பர் 20, 1999 முதல் மக்காவு சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவின் முதல் கிடங்காக சீனாவில் நிறுவப்பட்ட மக்காவு சீனாவிலிருந்த கடைசி ஐரோப்பியக் குடியேற்றமாகவும் விளங்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.