From Wikipedia, the free encyclopedia
பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC) எனப்படுவது சுவிட்சர்லாந்து செனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் இயற்பியல்சார் செய்களக் கருவி ஆகும். அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை (புரோத்தன்களை) எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி (particle accelerator) ஆகும்[1].
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இத்திட்டத்தை உலகின் 100 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 இயற்பியலாளர்களும் பொறியியலாளர்களும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும்.[2] இணைந்து பிரான்சு-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 175 மீ (574 அடி) ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீ நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர்.
இந்தக் கருவி நேர்மின்னிகளை (புரோத்தன்களை) 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டிலும் (1.12 மைக்குரோச்சூல் (microjoules) ஆற்றலுக்கு முடுக்கப்பட்டு மோதவிடும் திறம் கொண்டது, அல்லது ஈய அணுக்கருவை 574 TeV (92.0 µJ) ஆற்றலுக்கு முடுக்கவிட்டு மோதவிடும் திறம் கொண்டது.[3][4] இக்கருவியின் உதவியால் அணுக்கருவுக்குள் இருப்பதாகக் கருதப்படும் துககள் பற்றியும், அவற்றிடையே நிகழும் அடிப்படை இயக்கப்பாடுகளையும் அறிய முடியும். இவற்றின் அடிப்படையில் அண்டம் எப்படி உருவானது என்பது குறித்த புதிய அறிவையும் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். நமக்குத் தெரிந்த பொருட்களின் நிறையையை அளிக்க அடிப்படையாக இருந்ததாகக் கருதப்படும் இகிசு போசான் (ஹிக்ஸ் போசான், Higgs Boson) என்னும் துகளைக் கண்டுபிடிக்க இக்கருவி உதவும் என்று கருதப்பட்டது. சூலை 4, 2012 இல் இந்த இகிசு போசான் இருக்கக்கூடும் என்னும் பெரும்நம்பிக்கை ஊட்டும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இகிசு போசான் துகளைக் கண்டுபிடித்தால் அடிப்படைத்துகள்கள் பற்றிய சீர்மரபு ஒப்புரு (Standard Model) என்னும் கட்டுமானக் கொள்கையின் மீது மேலும் நம்பிக்கை ஊட்டுமாறு அமையும், அது நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இதனால் அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் தெளிவாகப் புரியலாம்.
இக்கருவி முதன் முதலாக 2008, செப்டம்பர் 10, 2008 இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 அக்டோபர் 21 இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில் ஏற்பட்ட ஈலியம் வளிம வெடிப்பால் ஏறத்தாழ 50 மீக்கடத்திமின் காந்தங்கள் பழுதுபட்டன[5][6] . இதனால் இந்த மோதுவியின் பயன்பாடு இரண்டு மாதங்கள் தடைபட்டது.
செப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில் 7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு நேர்மின்னி(புரோட்டான்) கற்றைகள் மோதுவிக்கப்பட்டன. தொடர்ந்து 18 முதல் 24 மாதங்களுக்கு இயக்கத்தில் இருக்கப்போகும் பெரிய ஆட்ரான் மோதுவியில், அண்டத்தின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; புதிய இயற்பியலைத் துவக்கவல்ல இவ்வாய்வில் கலந்து கொண்டிருக்கும் 50 இந்திய இயற்பியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.[7][8]
Seamless Wikipedia browsing. On steroids.