From Wikipedia, the free encyclopedia
புவி சூடாதல் (Global Warming) என்பது புவியின் மேற்புறப் பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது.[1] சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[2][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மனித செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.[2] இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[3] 70-இற்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.[B]
தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்கால மதிப்பீடுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0–11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.[2] ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிர்கால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி வெப்பமயமாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் புவி வெப்பமயமாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4][5][6]
கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும். மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.[7] பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கி தொடந்து பின்வாங்கும் என எதிர்வுக்கூறப்படுகிறது. வெப்பமயமாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சலின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.
புவி வெப்பமயமாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
புவி வெப்பமயமாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகளாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C அளவில் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது. (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி வெப்பமயமாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது.[8] செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலை கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும்.[9] உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.[10][11] 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைபெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாகக் காணப்பட்டன.[12]
வெப்பநிலை மாற்றம் உலகம் முழுவதும் ஒரே அளவில் நடைபெறவில்லை. 1979 ஆம் ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது. (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக).[13] நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு காரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன.[14] வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எதிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ள நிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை.[15]
பெருங்கடல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரியல் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பல நூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை 0.5 °C (0.9 °F) அளவினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.[16]
தட்பவெப்பநிலையுடன் தொடர்பில்லாத காரணியங்களும் தட்பவெப்பநிலை மாற்றங்களுக்குக் காரணமாகிறது. வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் அளவு, சூரிய ஒளிர்வில் உள்ள மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், புவி சூரியனைச் சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன தட்பவெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தும் வெளிக்காரணியங்களாகும்.[17] பொதுவாக இதில் முதல் மூன்று காரணியங்களே வெப்பநிலை மாற்றத்துக்கு ஏதுவாகிறது. நிலவுலகு சூரியனைச் சுற்றும் பாதை மிக மெதுவாகவே மாற்றமடைவதால் கடந்த நூற்றாண்டின் வேகமான வெப்பநிலை மாற்றங்களுக்கு இது காரணியமாகாது.[18]
வளிமண்டலத்திலுள்ள வளிமங்கள் அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி மீண்டும் உமிழ்வதன் மூலம் கோள் ஒன்றின் கீழ் வளிமண்டலமும் அதன் மேற்பரப்பும் வெப்பமடைதல் வெப்பம் சிக்குறும் விளைவு எனப்படுகிறது. வெப்பம் சிக்குறும் விளைவை ஜோசப் ஃபோரியர் 1824 ஆம் ஆண்டு கண்டறிந்தார், 1896 ஆம் ஆண்டில் சிவாந்தே அரினியஸ் வெப்பம் சிக்குறும் விளைவின் அளவைக் கண்டறிந்தார்.[19] புவிசூடாதலுக்கு மாந்த நடவடிக்கைகள் ஒரு காரணியமல்லவென கருதும் அறிவியலாளர்கள் உட்பட எவராலும் வெப்பம் சிக்குறும் விளைவின் இருப்பு மறுப்புக்குள்ளாகவில்லை. மாறாக மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் செறிவு மாறும் போது வெப்பம் சிக்குறும் விளைவு எவ்வாறு மாற்றமைடையும் என்பதே கேள்விக்குள்ளாகியுள்ளது.
இயற்கையாக வளிமண்டலத்திலுள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் சுமார் 33 °C (59 °F) வரை சராசரியான வெப்பமாக்கும் விளைவைக் கொண்டுள்ளன.[20][C] நீராவி (இது வெப்பம் சிக்குறும் விளைவில் 36-70 சதவீதத்திற்கு காரணியாகிறது), கரியமில வளிமம்(CO2, இது வெப்பம் சிக்குறும் விளைவில் 9-26 சதவீதத்திற்கு காரணியாகிறது), மீத்தேன் (CH4 இது வெப்பம் சிக்குறும் விளைவில் 4-9 சதவீதத்திற்கு காரணியாகிறது), ஓசோன் ( இது வெப்பம் சிக்குறும் விளைவில் 3-7 சதவீதத்திற்கு காரணியாகிறது) என்பன முக்கிய வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களாகும்.[21][22] கதிரியக்க சமநிலையில் முகில்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன, ஆனால் இவை நீரை நீர்ம நிலையையோ அல்லது திண்ம நிலையையோ கொண்டிருப்பதால் இதன் வெப்பம் சிக்குறுத்தும் விளைவு நீராவியிலிருந்து வேறாக கணிக்கப்படுகிறது.
தொழிற்புரட்சி முதல் மனிதர்களின் நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் செறிவை கூட்டியது, இதன் மூலம் CO2, மீத்தேன், அடிவளிமண்டல ஓசோன், குளோரோபுளோரோகார்பன், நைட்ரஸ் ஆக்சைடு வளிமங்களில் இருந்தான கதிர்வீச்சு திணிப்பிற்கு இட்டுச் செல்கிறது. 1700களின் நடு ஆண்டுகள் தொடக்கம் வளிமண்டலத்தில் CO2, மீத்தேனின் செறிவு முறையே 36% மற்றும் 148% ஆல் கூடியிருக்கிறது.[23] பனிக் கருவங்களிலிருந்து நம்பகமான தரவுகள் பெறப்பட்டுள்ள கடந்த 650,000 ஆண்டுகளைவிட இந்த அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலானவையாகும்.[24] நேரில் புவியியல் தரவுகளின் படி வளிமண்டலத்தில் இந்த அளவு CO2 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நிலவுலகில் காணப்பட்டது.[25] கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மனித நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்ட புதைபடிவ எரிபொருள் மூலமே கூடியிருக்கும் CO2 அளவில் சுமார் முக்கால் பங்கிற்கு உமிழப்பட்டுள்ளது. மிகுதி CO2 அளவில் பெருமளவு காடழிப்பை முதன்மையகக் கொண்ட நில-பயன்பாடு மாற்றத்தினால் உமிழப்பட்டுள்ளது.[26]
புதைபடிவ எரிமங்களின் எரிப்பு நில-பயன்பாடு மாற்றம் காரணமாக CO2 செறிவு கூடிச்செல்கிறது. எதிர்காலத்தில் CO2 செறிவு கூடிச்செல்லும் வேகம் பொருளாதார, சமுக, தொழில்நுட்ப, இயற்கைத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சிகளில் தங்கியுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் (IPCC) வளிம உமிழ்வு சூழல்கள் மீதான சிறப்பு அறிக்கையில் 2100 ஆம் ஆண்டில் CO2வின் செறிவுக்கு 541 ppm முதல் 970 ppm வரை ஒரு பரந்த வீச்சை கொடுத்துள்ளது.[27] நிலக்கரி, தார் மணல், மீத்தேன் சேர்மம் ஆகியவை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுமானால் புதைபடிவ எரிமங்களே குறித்த அளவை எட்டுவதற்கு போதுமானவை என்பதோடு 2100 ஆம் ஆண்டு தாண்டியும் உமிழ்வுகள் தொடரக் கூடும்.[28]
குளோரோபுளோரோகார்பன்களால் மேல் வளிமண்டல ஓசோன் படை அழிக்கப்படுதல் சிலவேளைகளில் புவிசூடாதலுக்குக்கு ஒரு காரணியாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒசோன் படை அழிவிற்கும் புவிசூடாதலுக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. மேல் வளிமண்டல ஓசோன் அழிவு ஒரு குளிர்விக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது, ஆனால் 1970களின் பிற்பகுதி வரையில் ஓசோன் ஓட்டையின் பெரும்பகுதி ஏற்பட்டிருக்கவில்லை.[29] கீழ் வளிமண்டலத்தில் ஓசோன் காணப்பட்டால் அது புவி சூடாதலுக்கு கரணியமாகிறது.[30]
நிலவுலகின் மேற்பரப்பில் கிடைக்கப்பெறும் ஒளிக்கதிர்களின் அளவு குறைந்துச் செல்லுதல் நிகழ்வான புவி மங்குதல் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புவி சூடாதலை பகுதியளவில் எதிரீடு செய்துவந்துள்ளது.[31] மாசுக்களாலும் எரிமலைகளாலும் உற்பத்திச்செய்யப்படும் வளித்தொங்கல்கள் நிலவுலகு மங்கலுக்கும் முக்கியக் காரணியாகும். உள்வரும் சூரிய ஒளியின் தெறிப்பைக் கூட்டுவதன் மூலம் இவை ஒரு குளிர் விளைவை ஏற்படுத்துகின்றன. புதைபடிவ எரிமங்களின் எரிப்பின் போது வெளியாகும் கரியமில வளிமத்தால் (CO2) உண்டாகும் சூடாக்கும் விளைவை அதே எரிப்பில் வெளியாகும் வளித்தொங்கல்கள் இல்லாது செய்து விடுகின்றன, எனவே அண்மைய ஆண்டுகளில் உள்ள வெப்பநிலை கூடுதலுக்கு கரியமில வளிமமல்லாத ஏனைய வெப்பச்சிக்குறுத்தும் வளிமங்களே காரணம் என சேம்சு என்சன்னும் (James Hansen) அவரது சகாக்களும் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்திருக்கின்றனர்.[32]
பல பத்தாண்டுகளாக புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில் கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதே வழி என்று அதிலேயே கவனமாக இருந்தார்கள். காடுகள் அழிப்பு, அனல் மின்சார உற்பத்தி போன்ற மனித நடவடிக்கைகளாலேயே கரியமில வாயு உற்பத்தி நிகழ்ந்தது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட புவி வெப்பநிலை உயர்வில் 70 சதவீதம் கரியமில வாயுவாலேயே நிகழ்ந்துள்ளது. தற்போது புவி வெப்ப நிலை அதிகரித்து வருவதற்கு பெருமளவுக்கு மீத்தேன் வாயு காரணமாக இருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழு (ஐபிசிசி) ஆய்வறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. தற்போது நிகழும் புவி வெப்பநிலை உயர்வில் 30-50 சதவீதம் இந்த மீத்தேன் வாயுவால் நிகழ்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. வேளாண்மை, எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் நடக்கும் கசிவு, குப்பை மேடுகள் போன்றவை மீத்தேன் வாயு உற்பத்திக்கு பெருமளவுக்கு காரணமாக அமைகின்றன. மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்தால், அது பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் புவிக்கு கொஞ்சம் கால அவகாசம் தருவதாக அமையும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.[33]
சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) அறிக்கையில் 2030ஆம் ஆண்டுவாக்கில் கார்பனீராக்சைடு உலகில் அதிகரிக்கும் என்கிறது. 2050ம் ஆண்டுக்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை அதிகரிக்க வேண்டும், இல்லையெனில் அதிக மோசமான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிவித்துள்ளது.[34]
சூரிய வெளியீட்டில் ஏற்படும் மாற்றங்கள் இறந்த காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கு காரணியாக இருந்துள்ளது.[35] இருப்பினும் சூரிய வெளியீட்டில் உள்ள மாற்றம் அண்மைய நிலவுலகுச் சூடாதலுக்கு போதாது என்பது பொதுவான கருத்து.[36][37]
வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களும் சூரிய திணிப்புகளும் வெப்பநிலையை வெவ்வேறுவிதமாக பாதிக்கின்றன. இரண்டு காரணிகளின் கூடுகையானது அடிவளிமண்டலத்தின் வெப்பநிலையைக் கூட்டும் அதேவேளை சூரிய திணிப்பின் கூடுகை அடுக்குமண்டலத்தை சூடாக்குவதோடு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் கூடுகை அடுக்குமண்டலத்தை குளிர்விக்க வேண்டும்.[17] 1979 இல் செயற்கைக்கோள் அளவீடுகள் கிடைக்கப்பெற்றது முதல் அடுக்குமண்டலத்தின் வெப்பநிலை சீராகவோ அல்லது குறைவதாகவோ உள்ளது.அதற்கு முன்னர் தட்பவெப்பநிலை பலூன் அளவீடுகளையும் உள்ளடக்கினால் 1958 ஆம் ஆண்டு முதல் அடுக்குமண்டலம் குளிர்வடைவதைக் காணலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.