From Wikipedia, the free encyclopedia
புலனறிவாதம் (empiricism), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.[1] புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
புலனறிவாதத்தின்படி, மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகளின் வழியாகவே வருகின்றது. "சூரியன் சுடுகின்றது" என்ற கருத்து (அதாவது, அறிவு) சூரியன் அவனைச் சுடுவதாலேயெ அவனுக்கு வந்தது. "நச்சுப் பாம்பு கொடியது" என்ற அறிவு பாம்பு கடித்து இறந்த பட்டறிவினாலேயே (அனுபவம்) வந்தது. மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் பட்டறிவினால் மட்டுமே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் பட்டறிவு சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பட்டறிவு; ஆனால் அது உண்மையன்று. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. எனவே, புலனறிவாதத்தின்படி, மனிதனுக்குக் கிட்டும் அறிவு பெரும்பாலும் ஒன்று, அவனுடைய பட்டறிவினால் வந்ததாக இருக்க வேண்டும்; அல்லது அவன் அதற்கு ஆதாரங்கள் தேடிப் பெறப் பட்டதாக இருக்க வேண்டும்.
புலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதைப் புலனறிவாதம் வலியுறுத்துகின்றது. அதாவது, அறிவியலில் வரும் எல்லா கூற்றுக்களும் கருத்துக்களும் புற உலகத்தில் உண்மையானவையா என்று ஆய்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்; மற்றும், ஒருவர் ஒன்றை உண்மை என்று நம்புவதாலேயோ அல்லது கடவுள் என்ற ஒரு பேராற்றல் தனக்கு ஒன்றை உணர்த்தி விட்டுச் சென்றது என்று சொல்வதாலேயோ எதுவும் உண்மையாகாது. எதுவாயினும் அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
அறிவு என்பது எப்போதுமே சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுகின்றது என்பது நேற்று வரை உண்மையாக இருந்து, இன்று பொய்யாகிப் போயிருக்கலாம். உண்மையாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றோ, பொய்யாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு பொய் என்றோ சொல்லவதற்கில்லை. நாளை மழை பெய்யும் என்று சொன்னால், நாளை கட்டாயமாக (நூற்றுக்கு நூறு) மழை பெய்யும் என்று சொல்வதற்கில்லை. 90% பெய்யலாம். கொஞ்ச நேரம் கழித்து, 90% பெய்யாது, 70% தான் பெய்யும் என்றும் சொல்ல வேண்டியும் இருக்கும். இவ்வாறு, உண்மையான (அல்லது சரியான) அறிவு என்று ஒன்றும் கிடையாது. அது மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.[2]
அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும்.[3] Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு (instinct) அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.[4][5][6][7]
முற்காலத்தில் மனம் அல்லது உள்ளம் என்பது ஒரு தூய பலகை (அல்லது தூய வெள்ளைத்தாள்) எனவும், ஒருவனின் பாடு (அனுபவம்) அந்த வெள்ளைத்தாளில் விடுகின்ற கிறுக்கல்களே எனவும் கருதப் பட்டது. அரிஸ்டாட்டில் கூறுகிறார்:
"தூய வெண் பலகையில் தோன்றிய எழுத்துக்கள் போலவாகும் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்" (Aristotle, On the Soul, 3.4.430a1)
பிளாடோவின் கருத்து இதற்கு நேர் மாறாக உள்ளது. அவர் கருத்துப்படி, ஒரு மனிதனின் மனம் என்பது அவன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே, விண்ணுலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். அவன் பிறந்த பிறகு, அந்த மனம் அவன் உடலில் வந்து சேர்ந்து கொள்கின்றது.(பார்க்க Phaedo)
தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகம் என்பது உள்ளிருப்பது, மனதில் அல்லது உள்ளத்தில் இருப்பது என்று கொள்ளலாம். ஒருவனுக்கு புற வாழ்க்கை இருப்பது போலவே அவனுக்கு அக வாழ்க்கையும் இருக்கின்றது. ஒரு வகையில், அக வாழ்க்கை என்பது புற வாழ்க்கையினும் இன்றியமையாதது என்றும் கருதப்பட்டது. அக வாழ்க்கையில், உள்ளுக்குள் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் அவன் உள்ளத்தில் ஆழ பதிந்து விடுகின்றன.
இத்தாலியில் மறுமலர்ச்சி
பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் பல அறிஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்கள் உண்மைலேயே சரியானவைதானா என்று பல கேள்விகளை நிக்கோலோ மேக்கிவில்லி பிரான்செஸ்கோ கிச்சியார்தினி ஆகியோர் எழுப்பினர். இயற்கையில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஒருவன் மனத்தில் ஏற்கனவே பதிந்துள்ள எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எடை போடக் கூடாது, நடை முறை உண்மை (effctual truth) என்ன என்பதையும் ஒருவன் பார்க்க வேண்டும் என்று குறிப்பாக மேக்கிவில்லி எடுத்துக் கூறினார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டா வின்சி(1452–1519) சொல்கிறார்:
"உன் பட்டறிவு ஒன்று உனக்கு உண்மை என்று உணர்த்துகிறது, ஆனால் அது இதுகாறும் சரியென்று பலராலும் போற்றப்பட்ட கருத்துக்களுக்கு எதிர் மாறாக உள்ளது என்று இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உன் பட்டறிவு சொல்வதையே நீ கேட்க வேண்டும்" லியானார்டோ டா வின்சி
பிரித்தானிய புலனறிவாதம்
பிரித்தானிய புலனறிவாதத்திற்கு 17-ஆம் நூற்றாண்டில் அத்திவாரம் (foundation) இட்டவர்களில் பிரான்சிஸ் பேகன்(Francis Bacon), ஜான் லாக்(John Locke) , ஜியார்ஜ் பெர்க்லி(George Berkeley), டேவிட் ஹ்யும்(David Hume) ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர்.
குறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று "வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்" போல பதிந்து விடுகின்றன.
நம் மனத்தில் உள்ள அறிவு இரண்டு வகையாகப் படும்: ஒன்று புலனறிவு( knowledge through sensation), மற்றொன்று சிந்தனையறிவு(knowledge through reflection). புலனறிவு என்பது புலன்கள் புற உலகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு, அந்தத் தாக்கம் மனத்துக்குள் சென்று பதிவதனால் ஏற்படுகின்றது. (தேன் இனிக்கும், முள் குத்தும், என்பன புலனறிவே.) சிந்தனை அறிவு என்பது சிந்தித்துப் பார்ப்பதால் மனத்தில் தோன்றும் அறிவு ஆகும். ( ஓ(make sound) --> ஓது(chant, read, learn) --> வேது(knowledge) --> வித்து (வித்தை - அறிவு, skill) --> சித்து (அறிவு,knowledge ) --> சிந்தி (think, create knowledge ) என்று பாவாணர் கூறுவார்.) எடுத்துக் காட்டாக, இரு இணை கோடுகளை வரைந்து, அவற்றை எல்லையில்லாமல் (infinitely) நீட்டிக் கொண்டே போனாலும், அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வதே இல்லை. இது ஒரு சிந்தனை அறிவு. ஏனெனில், ஒரு கோட்டை எல்லை இல்லாமல் நீட்டி கொண்டே போவது என்பது நாம் நடை முறையில் காண்பது அன்று. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள இணை கோடுகள் (parallel lines of finite length) ஒன்றுகொன்று வெட்டி கொள்ளாது என்று மட்டும் தான் நமக்குத் தெரியும்.(இது ஒரு வேளை பட்டறிவாகலாம்.) ஆனால், அளவில்லாத (infinitely long) இணை கோடுகள் வெட்டிக் கொள்ளாது என்பது சிந்தனை அறிவு மட்டுமே; பட்டறிவாகாது.
அறிஞர் ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி, அறிவு பிரித்து அறியக்கூடிய ஒரு கூட்டுப் பொருளாக இருக்கலாம், இதைக் கூட்டறிவு எனலாம். அல்லது, அறிவு பிரிக்கவியலாத ஒன்றாகவும் இருக்கலாம், இதைத் தனியறிவு எனலாம். எடுத்துக் காட்டாக, அணு என்பது கூட்டறிவு. எதிர்மின்னி (electron) என்பது தனியறிவு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.