பிரிக்பீல்ட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கோலாலம்பூரின் முன்னோடிக் குடியிருப்புப் பகுதிகளில் தனிச் சிறப்பைப் பெற்றது.
பிரிக்பீல்ட்ஸ் Brickfields | |
---|---|
மலேசியாவில் பிரிக்பீல்ட்ஸ் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°7′47″N 101°41′3″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கூட்டாட்சிப் பகுதி |
தோற்றம் | 1857 |
அரசு | |
• மாநகராட்சி முதல்வர் | அமின் நோர்டின் (Mhd Amin Nordin Abdul Aziz) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 1,62,180 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 50470 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 322 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | W அனைத்து வாகனங்களுக்கும் HW வாடகையுந்துக்களுக்கு |
இணையதளம் | www |
லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நகர்ப்பகுதி இந்தியர்களின் வணிக மையமாகத் திகழ்கின்றது. துன் சம்பந்தன் சாலையில் அமைந்து இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும்.[1]
2010 அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, மலேசியாவிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பிரிக்பீல்ட்ஸ் பகுதிக்கும் வருகை தந்தார். அங்கு மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்குடன் இணைந்து, மலேசிய இந்தியர்களுக்கான அயலூர் வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்.[2]
1881-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஒரு பெரிய தீ விபத்து நடந்தது. அதை அடுத்து வெள்ளம் சூழ்ந்து நகரைச் சேதப்படுத்தியது.[3] அதில் பல அத்தாப்புக் குடிசைகளும் தென்னங்கீற்றுகளால் ஆன பலகை வீடுகளும் அழிந்து போயின. கோலாலம்பூரின் கட்டமைப்பு சேதம் அடைந்தது.
அதனால், எதிர்வரும் காலங்களில் கட்டப்படும் வீடுகள், செங்கற்கள், ஓடுகள் கொண்டு கட்டப்பட வேண்டும் என்று அப்போதைய சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய ஆட்சியராக இருந்த பிராங்க் சுவெட்டன்காம் என்பவர் கட்டளை பிறப்பித்தார்.
எனவே கோலாலம்பூரை மறுச் சீரமைக்க காபித்தான் யாப் ஆ லோய் செங்கல் சூலைகள் அமைக்க ஒரு பெரும் நிலப்பகுதியை வாங்கினார். இந்த இடமே இன்று பிரிக்பீல்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
யாப் ஆ லோய், நகரத்தின் வடிவமைப்பை மீண்டும் சீர் செய்தார். அப்போது கட்டப்பட்ட பல செங்கல் கட்டிடங்கள், தென் சீனாவின் கடைக் கட்டிடங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன.
கோலாலம்பூரின் ஐந்தாவது காபித்தானாக பொறுப்பு ஏற்ற யாப் குவான் செங் (Yap Kwan Seng) என்பவர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியை மேலும் விரிவு படுத்தினார். துரிதமாக வளர்ச்சி பெற்று வந்த கோலாலம்பூருக்கு செங்கற்கள் அதிகமாகத் தேவைப்படும் என்பதை உணர்ந்தார்.
ஆகவே, அந்தப் பகுதியில் ஒரு செங்கல் ஆலையை உருவாக்கினார். தொடக்கக் காலங்களில் செங்கல் தயாரிப்பதில் அந்தப் பகுதி தனிச் சிறப்புப் பெற்று விளங்கியது. யாப் குவான் செங் ஒரு வள்ளல் என்று புகழப்பட்டவர்.[4] செங்கல் குழிகளும் பள்ளங்களும் நிறைந்து காணப்பட்டன.
அங்கே நல்ல தரமான செங்கல்கள் தயாரிக்கப்பட்டு கோலாலம்பூர் முழுமையும் விநியோகம் செய்யப்பட்டன. அதில் இருந்து அந்தப் பகுதி பிரிக் பீல்ட்ஸ் என்று அழைக்கப்பட்டது. பிரிக் (Brick) என்றால் ஆங்கிலத்தில் செங்கல்; பீல்ட்ஸ் (Fields) என்றால் திடல்கள்.
செங்கல் திடல்கள் என்பதே பிரிக்பீல்ட்ஸ் என்று பெயர் பெற்றது. ஒரு நூறாண்டுகளுக்குப் பின்னரும் அந்தப் பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.
பிரித்தானியர் காலனித்துவ ஆட்சியாளர்கள், இந்தப் பிரிக்பீல்ட்ஸ் பகுதியிலேயே மலாயன் இரயில்வே (மலாய்: Keretapi Tanah Melayu Berhad; ஆங்கிலம்: Malayan Railways Limited) எனும் தொடருந்து கிடங்கையும் வைத்திருந்தனர். இந்த நிறுவனம், மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
ஸ்ரீ லங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட யாழ்ப்பாணத்தவர்கள் பலர் இங்கு அலுவலர்கள் பணிகளைச் செய்தனர். அவர்கள் தங்குவதற்கு ஒரு தனிக் குடியிருப்பு பகுதியும் கட்டித் தரப்பட்டது. அந்தக் குடியிருப்பு பகுதிதான் 100 குவார்ட்டர்ஸ் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
1915ஆம் ஆண்டில் இந்த 100 குவார்ட்டர்ஸ் கட்டப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் குடியிருப்பு பகுதி ஜாலான் ஆ தோங், ஜாலான் ரொசாரியோ (Jalan Rozario) சாலைகளின் இருமருங்கிலும் இருக்கிறது. 1990-களில் 100 குவார்ட்டர்ஸ் சுற்றுவட்டாரப் பகுதிகள் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன. வானளாவியக் கட்டடங்கள் உயர்ந்து நிற்கின்றன. வணிக மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டவர் தங்குவதற்கான அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன.
மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்த 100 குவார்ட்டர்ஸ் வீடுகள், விரைவில் உடைக்கப்படும் என்று கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது. தவிர, மலாயன் இரயில்வே புகைவண்டிக் கிடங்கு இருந்த இடம், இப்போது கே.எல் செண்ட்ரல் கோலாலம்பூர் சென்ட்ரல் (மலாய்: KL Sentral)[5] என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் தொடர்வண்டி மையமாக மாறிவிட்டது.
இந்திய உணவு வகைகளுக்கு பிரிக்பீல்ட்ஸ் புகழ்பெற்ற இடமாகும். எல்லா இனத்தவரும் வாழை இலை உணவகங்களுக்கு வருகை தருவதை வாடிக்கையாகக் கொள்கின்றனர். இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இட்லி, தோசை போன்ற தமிழர்களின் உணவுகள் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளாகும். காரமான உணவுகள் தேவை என்றால் இவர்கள் பிரிக்பீல்ட்ஸ் பகுதிக்குப் படையெடுக்கின்றனர். [6]
இறைநிலையின் இருப்பிடம் ("Divine Location") எனும் அடைமொழியுடன் பிரிக்பீல்ட்ஸ் அழைக்கப்படுவதும் உண்டு. நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமயச் சிற்பங்களையும் சமயச் சிலைகளையும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நிறைவாகவே காண முடியும். ஜாலான் பெர்ஹாலா சாலையில் மகா விஹாரா புத்த ஆலயம்,[7] அருள்மிகு ஸ்ரீ வீர அனுமான் ஆலயம்,[8]
ஸ்ரீ சக்தி கற்பக ஆலயம்[9] போன்ற ஆலயங்கள் உள்ளன. ஜாலான் ஸ்காட் சாலையில் இலங்கைத் தமிழர்களின் ஸ்ரீ கந்தசாமி கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் கலா மண்டபத்தை மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் திறந்து வைத்தார்.
திருமண வைபவங்களுக்கு அந்த மண்டபம் பயன்படுகிறது. தவிர புனித ரோசரி தேவாலயம், பத்திமா தேவாலயம், லுத்தரன் தேவாலயம் போன்ற கிறிஸ்துவ சமய ஆலயங்களையும் இங்கு காண முடியும்.
ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் சாலையில் மதராசுத்துல் கௌதியா (Madrasatul Gouthiyyah) எனும் பள்ளிவாசல் இருக்கிறது. பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் வாழும் இந்திய முஸ்லீம்கள் தொழுகை மேற்கொள்ள இந்தப் பள்ளிவாசல் ஒரு புனிதத் தளமாகப் பயன்படுகிறது. இங்கே சில சமயங்களில் உபதேசங்கள் தமிழ் மொழியில் நடைபெறும்.
தம்பிப்பிள்ளை சாலையில் Three Teachings Chinese Temple எனும் மூன்று சீன போதகர்கள் ஆலயமும் இருக்கிறது. எளிதில் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய இடக்குறிகளில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.
இந்தப் பகுதியில் அதிகமான இந்தியர்களின் நடமாட்டத்தைக் காண முடியும். வெளிநாட்டு இந்தியர்களும், இங்கு குடியேறி வணிகத் துறையில் ஈடுபட்டுள்ளனர். குட்டி இந்தியா (Little India) என்று அன்பாக அழைக்கப்படும் இந்த பிரிக்பீல்ட்ஸ் புறநகர்ப் பகுதியில், இந்திய வணிகர்களுக்குச் சொந்தமான பல கடைகள் உள்ளன.
நறுமண உணவுப் பொருள்களை விற்கும் கடைகள், மளிகைக் கடைகள், இனிப்பு நொறுக்குப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், அச்சகங்கள், பூக்கடைகள் என்று வகை வகையான கடைகள் உள்ளன. பல வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் அலுவலகங்களும் இந்தப் பகுதியில் உள்ளன.
அண்மைய காலங்களில், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆடை அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள் போன்ற கடை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் சிறிய அளவிலான உணவகங்களையும் நடத்தி வருகிறனர்.
அவர்களில் சிலர் இங்குள்ள தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு நிரந்தரக் குடிவாசிகளாகவும் மாறியுள்ளனர். மலேசியப் பெண்களின் வெளிநாட்டுக் கணவர்களுக்கு, குடியுரிமை வழங்கும் சட்டத்தை மலேசிய அரசாங்கம் அண்மையில் அமல்படுத்தி இருப்பதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பலர் மலேசியக் குடியுரிமைகளைப் பெற்றுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.