From Wikipedia, the free encyclopedia
பாற்லாமும் யோசபாத்தும் (Barlaam and Josaphat) கிறித்தவ மரபின்படி நடுக்காலத்தில் இரு புனிதர்களாகக் கருதப்பட்டவர்கள். அவர்களைப் பற்றிய வரலாறு இந்தியாவில் கவுதம புத்தரைப் பற்றி உருவான வரலாற்றைத் தழுவி எழுந்தது என்றும், புத்தரின் வரலாறே இவ்வாறு கிறித்தவப் பார்வையில் புத்துரு பெற்றது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.[1]
பாற்லாமும் யோசபாத்தும் என்னும் தலைப்பில் ஒரு கிறித்தவம் தழுவிய வரலாற்றுக் கதையை கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதியவர் ஆத்தோஸ் நகர யூத்திமியுஸ் (Euthymius of Athos) என்னும் துறவி ஆவார். அத்துறவி மேற்கு ஆசியாவின் தென்பகுதியில் துருக்கிக்கு வடக்கே உள்ள ஜோர்ஜியா நாட்டைச் சார்ந்தவர். "பாலவரியானி" (Balavariani) என்னும் பெயரில் ஏற்கெனவே முதன்முறையாக கிறித்தவம் தழுவிய விதத்தில் ஜோர்ஜிய மொழியில் இருந்த 10ஆம் நூற்றாண்டுக் கதையையே யூத்திமியுஸ் துறவி கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதினார். அத்துறவி ஆத்தோஸ் நகர மடத்தை விட்டு காண்ஸ்டான்டிநோபுள் நகருக்குச் சென்றபோது 1028இல் கொல்லப்பட்டார். அதற்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவர் "பாற்லாமும் யோசபாத்தும்" கதையை கிரேக்கத்தில் பெயர்த்திருக்க வேண்டும்.
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை கிரேக்கத்திலிருந்து 1048இல் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது. பின்னர் அக்கதை மேற்கு ஐரோப்பா முழுவதும் மக்களிடையே சென்று சேரலாயிற்று.[2]
இக்கதையை எழுதியவர் 7ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவில் வாழ்ந்த புனித தமாஸ்கு யோவான் என்றொரு மரபு உண்டு. ஆனால் அவர் இதை எழுதவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
"பாற்லாமும் யோசபாத்தும்" கதை உண்மையில் புத்தரின் வரலாற்றுத் தழுவலே என்பது வரலாற்றாசிரியர் கருத்து. சமய வரலாற்றறிஞர் வில்பிரட் கான்ட்வெல் ஸ்மித் (Wilfred Cantwell Smith) என்பவர் ஆய்வுப்படி, இக்கதையின் மூலக் கரு வடமொழியில் எழுதப்பட்ட மகாயான பவுத்த ஏடு (2-4 நூற்றாண்டு).[3] அக்கதை மனிக்கேயர் என்னும் கிறித்தவம் தழுவிய பிரிவினைக் குழுவின் தாக்கத்தைப் பெற்று, புத்தரின் வரலாற்றிலிருந்து இரு கிறித்தவப் புனிதர்களின் வரலாறு ஆனது. அவ்வடிவத்தில் இசுலாம் கலாச்சாரத்தை அரபி மொழிபெயர்ப்பின் வழி சென்றடைந்தது. அரபியில் அதன் பெயர் "கித்தாப் பிலாவாற் வா-யூட்சாப்" (Kitab Bilawhar wa-Yudasaf). அதிலிருந்து ஜோர்ஜிய மொழிபெயர்ப்பு எழுந்தது. பின்னர் கிரேக்கப் பெயர்ப்பும் இலத்தீன் பெயர்ப்பும் தொடர்ந்தன.
"யோசபாத்" என்னும் பெயரின் மூல வடிவம் "போதிசத்துவ" என்னும் வடமொழிப் பெயரே. அறிவொளி பெற்றவர் என்ற பொருளில் புத்தர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அப்பெயர் அரபியில் Būdhasaf என்று மாறியது. அரபியில் "b" என்னும் எழுத்தின் புள்ளி இரட்டிக்கும்போது "y" என்றாகும். அப்படியே Būdhasaf என்பது Yūdhasaf ஆனது. அதிலிருந்து ஜோர்ஜிய மொழியில் Iodasaph என்னும் பெயர் வந்தது.[4]
பின்னர் Iodasaph என்னும் ஜோர்ஜியப் பெயர் வடிவம் கிரேக்கத்தில் Ioasaph என்றும் இலத்தீனிலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் Josaphat என்றும் மாறியது.[5][6][7][8][9]
இப்பெயரையே திருச்செல்வர் காவியத்தில் "சூசேப்பா" என்னும் வடிவத்தில் காண்கிறோம்.
Bilawhar என்று அரபியில் வரும் பெயர் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் பிற பெயர்ப்புகளிலும் "பாற்லாம்" (Barlaam) என்னும் வடிவம் பெற்றது.
இப்பெயரைத் திருச்செல்வர் காவியம் "வறலாம்" என்று தழுவியமைக்கிறது.
பூலோகசிங்க அருளப்ப நாவலர் என்னும் யாழ்ப்பாண அறிஞர் "பாற்லாமும் யோசபாத்தும்" என்னும் கதையைத் தமிழில் காப்பியமாகப் பாடி 1896இல் வெளியிட்டார். அக்காப்பியத்தில் அவர் "யோசபாத்" என்னும் பெயரைத் தமிழில் "சூசேப்பா" என்று தழுவியமைக்கிறார். அதுபோலவே "பாற்லாம்" என்னும் பெயர் "வறலாம்" என்று தமிழ் வடிவம் பெறுகிறது.
சூசேப்பா என்னும் பெயர் "திருச்செல்வன்" என்னும் பொருள்படுவதால் அதையே காப்பியத்திற்கும் தலைப்பாக ஆசிரியர் கொண்டுள்ளார்.
திருச்செல்வன் சிந்து நாட்டு இளவரசனாக இருந்து, உலக நாட்டங்களைத் துறந்து துறவியாக மாறுகிறார். அவருடைய தந்தை அவினேர் (Avennir) தம் மகன் கிறித்தவ மதத்தைத் தழுவியதை முதலில் எதிர்க்கிறார். பின்னர் அவரும் கிறித்தவராகி, நாட்டுப் பொறுப்பை விட்டு துறவியாகிறார்.
இக்காவியத்தில் வரும் வேறு சில பெயர்கள்: நக்கோர் (Nachor); தேவுதன் ("Theodosius"); பராக்கி (Barachius).
கிரேக்க மரபுவழி திருச்சபையின் புனிதர் நாள்காட்டியில் பாற்லாமும் யோசபாத்தும் புனிதர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆகத்து 26அம் நாள் விழாக் கொண்டாடப்படுகிறது.
உரோமன் கத்தோலிக்க புனிதர் நாள்காட்டியில் இவ்விருவரும் இடம் பெறாவிட்டாலும், அவர்களுடைய பெயர்கள் புனிதர் வரிசையில் "உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அண்மைக் காலம் வரை இருந்தது. விழா நாள் நவம்பர் 27. அதன் பின்னர் 1960களில் இப்புனிதர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை என்னும் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டன.
Seamless Wikipedia browsing. On steroids.