தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் From Wikipedia, the free encyclopedia
பாண்டி கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும்.சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது இக்கோயிலின் மூலவராக பாண்டி முனீசுவரர் வழிபடப்படுகிறார். பாண்டி முனீசுவரர் என்பவர், பாண்டிய மன்னர்களுள் ஒருவரான பாண்டியன் நெடுஞ்செழிய மன்னரே இங்கு குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.[1][2]
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு முத்தரையர் வம்சத்தை சேர்ந்த வள்ளியம்மாள் - பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். மதுரைக்கு வரும் வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினர். இரவு, வள்ளியம்மாளின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார். திடுக்கிட்டெழுந்த வள்ளியம்மாள் நடந்தவற்றை கணவனிடம் கூற, எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை எடுத்தனர்.
அதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.[3]
உலகின் பிற காவல் தெய்வங்களைப் போல் அல்லாமல், பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
இக்கோயிலின் உபதெய்வமாக சமய கருப்பசாமியை வழிபடுகின்றனர். ஒரு முறை, வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர் ஒருவர் இக்கோயிலில் உள்ள சமய கருப்பசாமியிடம் வந்து, தான் இன்றைக்கு எத்தனை மிருகங்களை வேட்டையாடப் போகின்றேன் என குறி கேட்டுள்ளார். அதற்கு சமய கருப்பசாமியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதேபோல், அந்த ஆங்கிலேயரும் அன்று ஒரு மிருகத்தைக்கூட வேட்டையாட முடியவில்லை. அதே கோபத்தில், சாமியின் கரம் மற்றும் சிரத்தை துண்டித்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றி காணப்படுகின்றார்.
இக்கோயிலில், பாண்டி முனீசுவரர் மூல கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும் விநாயகர், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோர் உப கடவுளர்களாக அமைந்துள்ளனர்.
கோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர். இங்குள்ள பாண்டி முனீசுவரர் புலால் உண்ணாதவர். ஆகையால், அவருக்கு வெண்ணாடை சார்த்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், சவ்வாது, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள சமய கருப்பசாமிக்கு, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவைகளை படைத்தும் வழிபடுகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து இராமேசுவரம், சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும், பாண்டி கோயில் வாசலில் நின்று செல்லும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.