பாக்கித்தானில் செயல்படும் இராணுவக் குழு From Wikipedia, the free encyclopedia
பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள பலூச் இனவாத போராளி பிரிவினைவாத அமைப்பாகும்.[3][4] 2000 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தின் போது பாக்கிஸ்தானிய அதிகாரிகள் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்குப் பிறகே இக்குழுவைப் பற்றி தெரிய வந்தது. இதுவே இக்குழுவினரின் பதிவு பெற்ற முதல் தாக்குதல் ஆகும்.[3][5] இந்த அமைப்பு பாக்கித்தான்,[6] ஐக்கிய இராச்சியம்,[7] அமெரிக்கா[8][9] போன்ற நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலைப்படை | |
---|---|
இயங்கிய காலம் | |
கொள்கை | பலூச் தேசியம் |
தலைவர்கள் | ஹைர்பையர் மார்ரி [1] |
செயற்பாட்டுப் பகுதி |
பலூசிஸ்தான், பாகிஸ்தான் ஆப்கானித்தான்[2] |
எதிராளிகள் | பாக்கித்தான் ஈரான் |
பலுசிஸ்தான் விடுதலைப்படை பாக்கிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் செயல்படுகிறது, அங்கு பாக்கித்தான் ஆயுதப்படைகள், பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது.[10][11] பலுசிஸ்தானை பாக்கித்தானில் இருந்து பிரித்து தனி நாடாக்குவதே இதன் நோக்கம் ஆகும். இத்தீவிரவாதக் குழுவின் தற்போதைய தலைவர் ஹைர்பையர் மார்ரி ஆவார்.[12][13]
பலுசிஸ்தான் விடுதலைப்படை 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இருப்பினும் சில ஊடகங்களும் ஆய்வாளர்களும் இந்தக் குழுவானது, 1973 முதல் 1977 வரையில் நடந்த சுதந்திர பலூசிஸ்தான் இயக்கத்தின், மறுமலர்ச்சி என்று ஊகிக்கிறார்கள்.[14] சில சான்றுகளின்படி, 'மிஷா', 'சாஷா' என்ற இரண்டு முன்னாள் கேஜிபி முகவர்களே பலுசிஸ்தான் விடுதலைப்படையை உருவாக்கியவர்கள் என்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி, பலுசிஸ்தான் விடுதலைப்படையானது பலோச் மாணவர் அமைப்பை ஒட்டி (BSO) கட்டமைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் அப்போதைய பலுசிஸ்தான் விடுதலைப்படை காணாமல் போனது.[15][16][17]
10 பிப்ரவரி 1973 அன்று, ஈராக் அரசாங்கத்தின் அனுமதியின்றி இசுலாமாபாத்தில் உள்ள ஈராக் தூதரகத்தை பாக்கித்தான் காவல்துறையும் துணை ராணுவமும் சோதனையிட்டன. சோதனையின் போது, 'வெளியுறவு அமைச்சகம், பாக்தாத்' என்று குறிக்கப்பட்ட பெட்டிகளில் சிறிதளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் மற்றும் பிற பொருட்களைக் கண்டுபிடித்தனர்; இவை பலூச் கிளர்ச்சியாளர்களுக்கானவை என்று அவர்கள் நம்பினர். இதனைத் தொடர்ந்து ஈராக் தூதர், ஹிக்மத் சுலைமான் மற்றும் பிற தூதரக ஊழியர்களை வெளியேற்றியது. பிப்ரவரி 14 அன்று அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு எழுதிய கடிதத்தில், பூட்டோ "பாக்கிஸ்தானின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயலும் சதி [...] செய்வதாக ஈராக் மற்றும் சோவியத் யூனியன் மட்டுமல்லாமல், இந்தியாவும் ஆப்கானித்தான் மீது குற்றம் சாட்டினார்.[18][19]
2004 ஆம் ஆண்டில், பலூச் மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், பலுசித்தானை பாக்கித்தானில் இருந்து பிரிப்பதற்காகவும் பாக்கித்தானுக்கு எதிராக பலுசிஸ்தான் விடுதலைப்படை ஒரு வன்முறைப் போராட்டத்தைத் தொடங்கியது, பலுசித்தானில் பலூச் அல்லாத சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது.[20][21][3]
பலுசிஸ்தான் விடுதலைப்படை 2006, ஏப்ரல் 7 அன்று தீவிரவாதக் குழு என பாகிஸ்தான் அரசால் அறிவிக்கப்பட்டது. இக்குழுவானது பாகிஸ்தானில் பொதுமக்கள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டது.[2] 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தியதி இங்கிலாந்து இக்குழுவை தீவிரவாதக் குழு என அறிவித்தது.[22] இருப்பினும், பாக்கித்தானின் எதிர்ப்பையும் மீறி, பலுசிஸ்தான் விடுதலைப்படை தலைவர் என்று சந்தேகிக்கப்படும் ஹைர்பையர் மாரிக்கு இங்கிலாந்து அகதியாக புகலிடம் கொடுத்தது.[23] இக்குழுவின் செயல்பாடுகள் தீவிரத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்கா அறிவித்தது.[24] ஆனாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இக்குழுவை தீவிரவாதக் குழு என அறிவிக்கவில்லை.[25] பாகிஸ்தான் அதிகாரிகள் இக்குழுவிற்கு இந்தியா உதவி செய்கிறது எனக் கூறுகின்றது.[26]
2009 ஏப்ரல் 15 அன்று, பலூச் ஆர்வலர் பிரஹம்தாக் கான் புக்டி (பாக்கித்தான் அரசாங்கத்தால் பலுசிஸ்தான் விடுதலைப்படையின் தலைவராக குற்றம் சாட்டப்பட்டவர்), பலூசிஸ்தானில் வசிக்கும் பலூசி அல்லாதவர்களைக் கொல்ல பலூச்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பலூசிஸ்தானில் குடியேறியுள்ள பஞ்சாப்பி மக்களை குறிவைத்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் விரைவில் தொடங்கின. இதனால் சுமார் 500 பேர் இறந்தனர். இந்தத் தாக்குதல்களைத் தூண்டியதற்கு பின்னர் பலுசிஸ்தான் விடுதலைப்படைத் தலைவர்கள் பொறுப்பேற்றனர்.[3] மேலும் பலுசிஸ்தான் விடுதலைப்படையானது, வெளியாட்களாகக் கருதும் பஷ்தூன்கள், சிந்திகள், பஞ்சாபிகள் உட்பட பல்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த மக்களைக் குறிவைத்தது.[27][28][29][30][31]
2010 இல், மாகாணத்தில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப்படை தாக்குதல் நடத்தியது.[32]
அமெரிக்கா 2019, சூலை, 2 அன்று குழுவை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. மேலும் பலுசிஸ்தான் விடுதலைப்படையின் சொத்துக்களை முடக்கியது.[8][9][4][33][34] ஐரோப்பிய ஒன்றியம் பலுசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்தது.[35][36]
2022, ஏப்ரல், 26 அன்று, பாக்கித்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் 30 வயதான அறிவியல் ஆசிரியரும் இரண்டு குழந்தைகளின் தாயுமான ஷரி பலோச் தன்னிடமுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மூன்று சீன ஆசிரியர்களைக் கொன்றார். பலுசிஸ்தான் விடுதலைப்படை இந்த நிகழ்வுக்குப் பொறுப்பேற்று, அந்த அமைப்பின் முதல் பெண் தற்கொலை குண்டுதாரி என அறிவித்தது.[37][38]
2024, ஜனவரி 18 அன்று, ஈரானில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகளின் இலக்குகள் மீது பாக்கித்தான் தாக்குதல் நடத்தியது. பலுசிஸ்தான் விடுதலைப்படை மற்றும் பலுச் விடுதலை முன்னணி ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்ட மறைவிடங்கள் இந்த நடவடிக்கையில் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டதாகக் பாக்கித்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.[39]
முகமது அலி ஜின்னா தனது கடைசிக் காலத்தில் வாழ்ந்த வீடான க்வைத்-இ-அசாம் ரெஸிடன்ஸி 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்களால் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும் அந்நினைவிடத்தில் இருந்த பாகிஸ்தான் நாட்டுக் கொடி அகற்றப்பட்டு பலுசிஸ்தான் ராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.