மலேசியாவின் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவு. From Wikipedia, the free encyclopedia
பங்கோர் தீவு (மலாய்: Pulau Pangkor; ஆங்கிலம்: Pangkor Island); மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவு.
Pulau Pangkor | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலாக்கா நீரிணை |
ஆள்கூறுகள் | 4°13′12″N 100°33′18″E |
பரப்பளவு | 18 km2 (6.9 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 30,000 |
இந்தத் தீவு, மலேசியாவில் மட்டும் அல்ல; உலகளாவிய நிலையில் நன்கு அறியப்பட்ட சுற்றுலா இடமாகும். பினாங்கு மற்றும் கோலாலம்பூருக்கு இடையில் பேராக், லூமுட் கடற்கரையில் பாங்கோர் தீவு அமைந்து உள்ளது.
பருவமழை தாக்கத்தால் பாதிப்பு இல்லாத தீவு. ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்ப நிலை. மலேசியாவில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.[1]
பங்கோர் தீவிற்கு அருகில் பாங்கோர் லாவுட் தீவு (Pangkor Laut Island); கியாம் தீவு (Giam Island); மெந்தாகோர் தீவு (Mentagor Island); சிம்பான் தீவு (Simpan Island) மற்றும் துக்குன் தெரிண்டாக் தீவு (Tukun Terindak Island) ஆகிய தீவுகள் உள்ளன.[2] பாங்கோர் தீவில் ஏறக்குறைய 30,000 மக்கள் வாழ்கிறார்கள். இந்தத் தீவின் முக்கிய தொழில்கள் சுற்றுலாத் துறை மற்றும் மீன்பிடித்தல்.
தாய்லாந்து மொழியில் “பாங் கோ” என்றால் “அழகான தீவு” என்று பொருள்படும். அதிசயமான நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு அந்தத் தீவிற்கு அவ்வாறு பெயர் வைக்கப்பட்டது.[3]
பங்கோர் தீவு 18 சதுர கி மீ. நிலப்பரப்பைக் கொண்டது. தீபகற்ப மலேசியாவில் இருந்து மலாக்கா நீரிணையில் 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவில் உள்ளது. தீவின் உட்புறத்தில் நிறைய காடுகள் உள்ளன. அந்தக் காடுகளில் 65 ஊர்வன இனங்கள்; 17 நிலநீர் வாழ்வன இனங்கள்; மற்றும் 82 ஊர்வன இனங்கள் (herpetofaunal species) உள்ளன.[4]
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்தப் பாங்கோர் தீவு உள்ளூர் மீனவர்கள், வணிகர்கள் மற்றும் கடற்கொள்ளையர்களுக்கு அடைக்கலம் வழங்கிய ஒர் புகலிடமாக விளங்கி உள்ளது.
17-ஆம் நூற்றாண்டில், பேராக் மாநிலத்தின் ஈய வணிகத்தைக் கட்டுப்படுத்த டச்சுக்காரர்கள் இந்தத் தீவில் ஒரு கோட்டையைக் கட்டினார்கள். அதன் பெயர் பங்கோர் டச்சு கோட்டை (Dutch Fort). டச்சுக்காரர்களுக்குப் பின்னர் பிரித்தானியர் இந்தத் தீவிற்கு வந்தார்கள்.
பிரித்தானியர் இந்தத் தீவிற்குப் வைத்த பெயர் டிண்டிங்ஸ் (Dindings). இப்போது இந்தப் பகுதி மஞ்சோங் மாவட்டம் என்று அழைக்கப் படுகிறது. 1874-ஆம் ஆண்டில், இந்தத் தீவில் தான் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் பேராக் அரச ஆட்சியாளருக்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் பெயர் பங்கோர் ஒப்பந்தம் (Pangkor Treaty). இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர்தான் மலாயா தீபகற்பத்தில் பிரித்தானியர்கள் தங்களின் காலனித்துவ ஆதிக்கத்தைத் தொடங்கினார்கள்.[5]
2003-ஆம் ஆண்டில், இங்கு செயற்கையாக ஒரு தீவு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் மெரினா தீவு (Marina Island). 2010-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. ஜனவரி 1, 2020 முதல் பங்கோர் தீவிற்கு வரி இல்லாத தகுதியை மத்திய அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்து இந்தத் தீவிற்கு சுற்றுலா வருகையாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்தது. 2020-ஆம் ஆண்டில் 1.42 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து உள்ளனர்.[6][7]
பங்கோர் தீவில் தமிழர்களுக்கு அடையாளமாக இருப்பது மூன்று இடங்கள். ஒன்று பத்ர காளியம்மன் கோயில். மற்றொன்று பங்கோர் தமிழ்ப்பள்ளி. மூன்றாவது இந்துக்களின் இடுகாடு.
பங்கோர் தமிழ்ப்பள்ளியும், பத்ரகாளியம்மன் ஆலயமும் பக்கம் பக்கமாக கடலோரம் இருக்கின்றன. அதன் நிலம் தனியார் நிலமாகும். 1953-ஆம் ஆண்டில் இருளப்பன் என்பவர் அந்த நிலத்தை நன்கொடையாக தந்துள்ளார்.[8]
நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவில் ஒரு தமிழ்ப்பள்ளி, பங்கோர் தமிழ்ப்பள்ளி (SJK (T) Pangkor). 1953-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தோற்றுவிக்கப் பட்டது. கடல் கரையோரத்தில் பத்ர காளியம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. கடல் அருகில் இருப்பதால் அந்தப் பள்ளி எழுப்பப்பட்டு இருக்கும் நிலம் உப்பு நீரில் அரிக்கப்பட்டு வந்தது. அதன் ஆபத்தைக் கருத்தில் கொண்டு புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.
பங்கோர் தமிழ்ப்பள்ளியில் 90 மாணவர்கள் பயில்கிறார்கள். 11 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் ரெங்கசாமி. பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் மதுரைமுத்து கிருஷ்ணன்.[9]
பங்கோர் கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் ஆன்மிகக் கலங்கரை விளக்கமாக இந்தக் கோயில் திகழ்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இங்கு வந்த மீனவ மக்களால் இந்தக் காளியம்மன் கோயில் அமைக்கப்பட்டது.
கடுமையான கடல் அலைகளில் இருந்து தங்களைக் காப்பதற்காகக் கோயில் அமைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். கடலுக்குச் செல்லும் முன் விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் மரத்தின் அடியில் ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட்டது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயில் கடலின் கடுமையான தாக்கங்களில் இருந்து பக்தர்களைக் காளியம்மன் தெய்வம் காத்து வருவதாக நம்பப் படுகிறது. ஆண்டு தோறும் மாசி மக நாளில் ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.